Published:Updated:

’’முட்டியில் அடிபட்டும் 'சிவாஜி' ஸ்டைலை ஒரே டேக்கில் முடித்தார் அஜித்..!’’ - கோரியோகிராபர் அஜய் #20YearsOfKaadhalMannan #VikatanExclusive

மா.பாண்டியராஜன்
’’முட்டியில் அடிபட்டும் 'சிவாஜி' ஸ்டைலை ஒரே டேக்கில் முடித்தார் அஜித்..!’’ - கோரியோகிராபர் அஜய் #20YearsOfKaadhalMannan #VikatanExclusive
’’முட்டியில் அடிபட்டும் 'சிவாஜி' ஸ்டைலை ஒரே டேக்கில் முடித்தார் அஜித்..!’’ - கோரியோகிராபர் அஜய் #20YearsOfKaadhalMannan #VikatanExclusive

’சென்னை - 28’ படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் ஏழுமலையாக நமக்கு பரிச்சயமானவர் அஜய் ராஜ். இவர் நடிகராக அவதாரம் எடுப்பதற்கு முன்னரே நடன இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது முதல் படம், அஜித்தின் ‘காதல் மன்னன்’. இன்று (06/03/2018) ’காதல் மன்னன்’ படம் ரிலீஸாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. நடன இயக்குநராக தனது முதல் படத்தின் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்து கொள்கிறார் அஜய் ராஜ். 

’காதல் மன்னன்’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது..?

’’ரகு மாஸ்டர், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர்கிட்ட நான் உதவியாளரா வேலை பார்த்துட்டு இருந்தேன். முதலில் இந்தப் படத்துக்கு பிருந்தா மாஸ்டர்தான் கமிட்டாகியிருந்தாங்க. அந்த டைம்லதான் படைப்பாளிகள் யூனியன் பிரச்னை வந்தது. அதனால பிருந்தா மாஸ்டர்னால பண்ண முடியாம போச்சு. அப்போ வேற யாரை வெச்சுப் பண்ணலாம்னு யோசிக்கும்போது ராம்ஜிதான், ‘பிருந்தா மாஸ்டரோட அசிஸ்டென்ட் அஜய்யை வெச்சுப் பண்ணலாமே’னு சொன்னார். இயக்குநர் சரண் சாரும் என்னை வரச்சொல்லிப் பேசினார். முதலில் ’மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா...’ பாட்டுக்கு மட்டும்தான் என்னை கோரியோகிராப் பண்ணச் சொன்னாங்க. ஏன்னா, அந்தப் பாட்டுல ராம்ஜிதான் டான்ஸ் ஆடுவார். அவரும் பிரபு மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தார். ஸோ, ’நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்தப் பாட்டை முடிச்சிடுங்க’னு சொன்னாங்க. அப்போ நான் சின்னப் பையனா இருந்தனால என்னை சரண் சார் நம்பலை. 

மாரிமுத்து சாங்ல என்னோட வொர்க்கைப் பார்த்த சரண் சார், ‘சரி, நீங்களே இந்தப் படத்துக்கு ஃபுல்லா கோரியோ பண்ணிடுங்க அஜய்’னு சொன்னார். எம்.எஸ்.விஸ்வநாதன் சார் டான்ஸ் பண்ணுன பாட்டுக்கு மட்டும் சிவசங்கர் மாஸ்டர் கோரியோ பண்ணினார். மத்த சாங்ஸ் எல்லாமே நான்தான் பண்ணினேன்.’’

உங்களோட முதல் படமே அஜித்தோட படம்... அந்த ஃபீல் எப்படி இருந்தது..?

’’ ‘காதல் கோட்டை’ படம் ஹிட்டாகி அஜித் சார் செம பீக்கில் இருந்த டைம்லதான் ’காதல் மன்னன்’ படத்தோட வேலைகள் ஆரம்பமாச்சு. ’காதல் கோட்டை’ எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அஜித் சாரோட வொர்க் பண்ணப்போறேன்னு நினைக்கும்போது செம ஷாக்கிங்கா இருந்தது. ஏன்னா, அந்த டைம்லதான் ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய், அஜித்தான்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னோட முதல் படமே அஜித் சாரோட படம்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு.

அஜித் சார்கிட்ட நான்தான் மாஸ்டர்னு சரண் சார் அறிமுகப்படுத்தி வைக்கும்போதே, ‘வெரி குட்... சூப்பரா பண்ணுங்க’னு சொன்னார். அஜித் சார் இங்கிலீஷ்காரர் மாதிரி. நீங்க வெளிநாட்டுக்குப் போனீங்கன்னா உங்ககூட லிஃப்ட்ல வர வெள்ளைக்காரர், ’ஹாய் குட் மார்னிங்’னு சொல்லுவார். உங்களை அவருக்கு யாருன்னே தெரியாது; இருந்தாலும் அவர் உங்களுக்கு விஷ் பண்ணுவார். அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் அஜித் சார். நீங்க யாரா இருந்தாலும் உங்ககிட்ட அவர் பேசுவார். எதோ பேசணும்னு பேச மாட்டார். ரொம்ப நாள் பழகிய ஆள் மாதிரி பேசுவார். இப்போ வரைக்கும் அஜித் சார் அப்படித்தான்.’’

ஷூட்டிங்கில் மறக்க முடியாத அனுபவம்..?

‘’ ‘உன்னைப் பார்த்த பின்பு நான்...’ பாட்டோட ஷூட்டை டெல்லியில் நடத்தினோம். பாட்டோட ஒரு இடத்தில் சிங்கிள் ஷாட்ல போகலாம்னு ப்ளான் பண்ணும்போது சரண் சார், ’இந்த இடம் எமோஷனலாகவே இருக்கட்டும்’னு சொன்னார். அதனால படத்தில் வரும் போது பாட்டோட வேகத்திற்காக அதை நாலு ஷாட்டா எடிட் பண்ணிட்டோம். ஆனால், ஷூட் பண்ணும்போது சிங்கிள் ஷாட்ல எடுத்தோம். அதுல கீழ முட்டிப்போட்டு விழுந்து, படுத்து எழுந்திரிக்கிற மாதிரி இருக்கும். அதைப் பார்த்து, ‘என்ன இது... இப்போ இருக்கிற ட்ரெண்டுல இல்லையே’னு அஜித் சார் கேட்டார். அதுக்கு நான், ‘எனக்கு சிவாஜி சார் ரொம்ப பிடிக்கும். அவரோட ’எங்கே நிம்மதி’ சாங்ல பாடி லாங்வேஜ் நல்லா இருக்கும். அதை வெச்சு இந்த சாங்கைப் பண்ணலாம் ப்ளான் பண்ணுனேன் சார்’னு சொன்னதும், ‘சூப்பர் ஐடியா. இதை நான் சிங்கிள் டேக்ல பண்றேன்’னு சொல்லிட்டுப் பண்ணினார். அவரோட முட்டியில அடிப்பட்டபோதும் அதை சிங்கிள் ஷாட்ல ஓகே பண்ணினார். 

’காதல் மன்னன்’ படத்துக்குப் பிறகு ’உன்னைக்கொடு என்னை தருவேன்’, ’அமர்க்களம்’, ’மங்காத்தா’ படங்களில் வொர்க் பண்ணினேன். ’காதல் மன்னன்’ படத்தில் அவர் என்கிட்ட எப்படி பேசினாரோ அப்படியேதான் ’மங்காத்தா’ படத்தில் வேலை பார்க்கும்போதும் பேசினார். ‘ஏய் அஜய்... எப்படி இருக்க... எப்படிப் போயிட்டு இருக்கு...’னு ஜாலியா பேச ஆரம்பிச்சார். அவர்க்கூட இருக்கிறவங்களை ரொம்ப கம்ஃபர்டபிளா வெச்சிப்பார்.’’

இந்த 20 வருட பயணம் எப்படி இருக்கு..?

’’நான் ஸ்கூல் முடிச்சதும் காலேஜுக்குப் போகாம டான்ஸராகிட்டேன். எனக்கு படிப்பு சரியா வராது. உனக்கு என்ன வருதோ அதைப் பண்ணுனு எங்க வீட்டுல சொன்னாங்க. அதுக்கு எங்க அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லணும். எத்தனை வீட்டுல இப்படிச் சொல்லுவாங்கனு தெரியலை. அப்பறம் ஒரு டான்ஸரா இருந்து அடுத்து மாஸ்டராகி அப்பறம் நடிகராகவும் இருக்கேன். எனக்கு இந்த பயணம் 20 வருஷம் மாதிரியே தெரியலை. எதோ 5 வருஷத்துக்கு முன்னாடிதான் ’காதல் மன்னன்’ படத்துல வொர்க் பண்ணுன மாதிரி இருக்கு. ’மங்காத்தா’ டைம்லக்கூட அஜித் சார், ‘என்ன அஜய் அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்கியே’னு சொன்னார். நடிகராகவும் ‘சென்னை -28 1 - 2’, ’ஆரண்ய காண்டம்’, ‘வடகறி’னு சில நல்லப் படங்களும் பன்ணியிருக்கேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு ப்ரதர்.’’