Published:Updated:

''விஜய் சேதுபதியைத் தவிர வேற யாருமே ஓ.கே. சொல்லலை!” அருண்

சனா

'பண்ணையாரும் பத்மினியும்' 'சேதுபதி' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் எடுக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக கமிட் ஆகியுள்ளார். இவர்களின் கூட்டணி மற்றும் இசைக்காக கமிட்டாகி இருக்கும் யுவன்ஷங்கர் ராஜா பற்றி இயக்குநர் அருண்குமாரின் விரிவான பேட்டி

''விஜய் சேதுபதியைத் தவிர வேற யாருமே ஓ.கே. சொல்லலை!” அருண்
''விஜய் சேதுபதியைத் தவிர வேற யாருமே ஓ.கே. சொல்லலை!” அருண்

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் தன் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியை இயக்குகிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. பெயரிடப்படாத இந்தப் படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் அருண்குமார்.

'' 'பண்ணையாரும் பத்மினியும்’ குறும்படம்தான் பிறகு சினிமாவானதுனு பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ''சேதுபதி' படத்தின் கதையை விஜய் சேதுபதியை மனத்தில் வைத்தே எழுதினேன். ஆனால் அந்த ஸ்கிரிப்டை அவரிடம் சொல்லவே இல்லை. படத்தின் மையக்கருவை மட்டும்தான் சொன்னேன். அதை கேட்ட உடனேயே, 'கண்டிப்பா பண்றேன் அருண்’ என்று நடிக்க ஓ.கே சொன்னார். ஆனால் இந்த மூணாவது படத்துக்கான ஒன்லைனைக்கூட அவருக்குச் சொல்லவில்லை. 'நீங்க பண்ணுங்க அருண். பண்ணுவோம்’ எனச் சொல்லிவிட்டார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறேன். 

ஆனால், இந்தப் பட கதையை ரெடி பண்ணிய உடனேயே மூன்று பெரிய ஹீரோக்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் யாருமே அதில் நடிக்க முன்வரவில்லை. அதில் விக்ரம் சாரும் ஒருவர். அவர் வெவ்வேறு கமிட்மென்ட்களில் பரபரப்பாக இருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை. அந்தச் சமயத்தில்தான், 'இதுவும் சேதுபதி சாருக்கு செமையா இருக்கும்’ என்று என் டீமிலும் சொன்னார்கள். நானும் சேதுபதியும் படம் பண்ணுகிறோமோ இல்லையோ எப்போதும் தொடர்பில்தான் இருப்போம். அதனால் அவரிடம் சொன்னேன். 'பண்ணலாம்' என்று சொல்லிட்டார். சமீபத்தில்தான் முழுக்கதையையும் விஜய்சேதுபதியிடம் சொன்னேன். இதில் வேறோரு வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதியைப் பார்க்கலாம். பட்ஜெட்டாகவும் ஸ்கிரிப்டாகவும் பெரிய படமாக இருக்கும். மலேசியா, தென்காசி பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது. பயணம் படத்தின் முக்கியப் புள்ளியாக இருக்கும். த்ரில்லர் சினிமா என்று சொல்லலாம். 

யுவன் ஷங்கர் ராஜாதான் மியூசிக். என்னுடைய முந்தைய இரண்டு படங்களிலும் ஜஸ்டீன் பிரபாகரன், நிவாஸ் கே பிரசன்னா உடன் வேலை செய்தேன். இருவரும் கம்ஃபர்ட் லெவலில் இருக்கக்கூடியவர்கள். விஜய்சேதுபதிகூட அப்படிப்பட்ட நண்பர்தான். 'யுவன் ஷங்கர் ராஜா மியூசிக் பண்ணட்டும்’னு தயாரிப்பாளர் ராஜராஜன் சார்தான் சொன்னார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எனக்கு யுவனின் இசை ஆல்டைம் ஃபேவரிட். நான் அவருடைய ரசிகன். ஆனால், 'எனக்கு இதுதான் வேணும்’ என்று அவரிடம் எப்படிக் கேட்டுப் பெறுவது’ என்று குழப்பமாக இருந்தது. ஆனால், அந்தக் குழப்பம் யுவனைச் சந்தித்த அந்த நிமிடத்திலேயே பறந்துவிட்டது. நான் என்ன சொல்ல வருகிறோம் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு நமக்குத் தேவையானதை தருகிறார். அவரைப் பற்றி வெளியில் இருக்கும் பிம்பம் ஒன்றாகவும் அவரிடம் பழகிய பிறகு உள்ள பிம்பம் வேறொன்றாகவும் தெரிகிறது. நல்ல ஆல்பமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. 

ஹீரோயின் அஞ்சலி. அவரின் நடிப்பு பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கும். அப்படி நானும் அவரின் ரசிகன். கதையில் ஹீரோயினுக்கு முக்கியமான கேரக்டர். நடிக்க நிறைய வாய்ப்புள்ள கேரக்டர். அதனால்தான் அஞ்சலியைத் தேர்வு செய்தோம். 'கொஞ்சம் வெயிட் குறைச்சா நல்லா இருக்கும்’ என்று சொன்னேன். நான் சொன்ன அந்த நாளிலிருந்து அந்த ப்ராசஸில் இறங்கி இன்று ஆச்சர்யப்படும் வகையில் எடை குறைத்திருக்கிறார். இதன்மூலம் அஞ்சலி இந்தக் கேரக்டரில் நடிக்க எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். 

படத்தில் சண்டைக் காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய்லாந்து ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவரை அழைத்து வருகிறோம். இந்தப் படம் கமர்ஷியலாகவும் அதேசமயம் வித்தியாசமான சினிமாவாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் இயக்குநர் அருண்குமார்.