Published:Updated:

தனுஷ், வசந்தபாலன், கௌதம்மேனன்... யார் யார் என்னென்ன வெப் சீரிஸ் இயக்குகிறார்கள்?

சனா

'காவியத் தலைவன்' படத்துக்குப் பிறகு நீண்ட நாள்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த வசந்தபாலன் அடுத்தாக ஜி.வி.பிரகாஷை வைத்து படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

தனுஷ், வசந்தபாலன், கௌதம்மேனன்... யார் யார் என்னென்ன வெப் சீரிஸ் இயக்குகிறார்கள்?
தனுஷ், வசந்தபாலன், கௌதம்மேனன்... யார் யார் என்னென்ன வெப் சீரிஸ் இயக்குகிறார்கள்?

முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் எனத் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது வெப் சீரிஸ் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி  யிருக்கிறார்கள். சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டியில், ''வெப் சீரிஸ் இயக்கும் எண்ணம் இருக்கு. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன். ஆனால், 'விஐபி 2', 'வடசென்னை' படங்களில் பிஸியாக இருந்ததால் வெப் சீரிஸ் வேலைகளைத் தள்ளி வைத்துள்ளேன்’ என்று கூறியிருந்தார். 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்திருப்பதால், தனுஷின் வெப் சீரிஸ் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் அடுத்தகட்டமாக இந்த வெப் சீரிஸ் பார்க்கப்படுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம், 'காதலில் சொதப்புவது எப்படி'  'மாரி' படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கி நடித்த, ' I am suffering from kadhal' வெப் சீரிஸின் வெற்றி. இந்த நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் தனது ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில் 'வீக் எண்ட் மச்சான்' என்னும் வெப் சீரியஸை தயாரித்துவருகிறார். 

அவரைத் தவிர, 'முகவரி', 'தொட்டி ஜெயா', 'ஏமாலி' படங்களை இயக்கிய வி.இஸட் துரையும் தற்போது 'அருவி' படத்தில் நடித்த சுவேதா சேகரை வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், இதை அவர் இந்தியில் இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சுவேதா அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

 'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய நந்தினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரியஸ் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். அவரின் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் சுனைனா நடிக்கிறார். ''நந்தினி மேம் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. சினிமாவா இருந்தா என்ன, வெப் சீரிஸா இருந்தா என்ன, கதை நல்லா இருந்ததால உடனே ஓகே சொல்லிட்டேன். இதில் சர்ப்ரைஸ் விஷயங்கள் நிறைய இருக்கு. சினிமாவைவிட இந்த வெப் சீரிஸுக்கான ரீச் அதிகமா இருக்கும்'' என்கிறார் சுனைனா. இந்த சீரிஸுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம். 

பாலிவுட், டோலிவுட் சினிமா பிரபலங்களும் வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வருகின்றனர். நடிகர் மாதவன், உடல் உறுப்பு தானத்துக்காகத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளை மையமாக வைத்து 'பிரீத்' என்ற வெப் சீரியஸில் நடித்தார். இந்தியில் இதை மயங் ஷர்மா இயக்கினார். மாதவனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணாவும், தமிழில் பாபி சிம்ஹாவும் வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரித்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்கள்.

இயக்குநர் வசந்தபாலன் வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டு வருகிறார் என்ற தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக அவரிடம் பேசினேன். 

''நான் வெப் சீரிஸ் இயக்க உள்ளது உண்மைதான். ஆனால், அதற்கு முன் முழுநீளத் திரைப்படம் ஒன்றை இயக்கப்போகிறேன். அதில் ஹீரோ, ஜி.வி.பிரகாஷ். படத்துக்கான இசையும் அவர்தான். இந்தப் படம் இயக்கி முடித்ததும் வெப் சீரிஸ் இயக்குவேன். அதில் நடிப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள். மண் சார்ந்த தொடராக அந்த வெப் சீரிஸ் இருக்கும். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அதை தயாரிக்கிறார். எல்லா முன்னணி இயக்குநர்களும் வெப் சீரிஸ் இயக்குவதால், நாமும் இயக்கிப் பார்ப்போம் என்று தோன்றியது. அதனால்தான் இந்த முயற்சியில் ஈடுபடுகிறேன்'' என்கிறார் வசந்தபாலன்.