Published:Updated:

'இரும்புத்திரை'யின் ஃபர்ஸ்ட் ஹாஃப்... வெள்ளை பேய், கறுப்பு ராட்சஷன்...! #PreviewSummary #Irumbuthirai

இரா.கலைச் செல்வன்
தார்மிக் லீ
'இரும்புத்திரை'யின் ஃபர்ஸ்ட் ஹாஃப்... வெள்ளை பேய், கறுப்பு ராட்சஷன்...! #PreviewSummary #Irumbuthirai
'இரும்புத்திரை'யின் ஃபர்ஸ்ட் ஹாஃப்... வெள்ளை பேய், கறுப்பு ராட்சஷன்...! #PreviewSummary #Irumbuthirai

விஷால்-சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தின் முதல்பாதியை மட்டும் படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டினர். அந்த முதல்பாதி எப்படி இருந்தது? அதில் கவனிக்க வேண்டிய 10 விஷயங்களை பட்டியலிட்டுள்ளோம்...

1. சமூகத்தில் நடக்கும் சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு கொந்தளிக்கும் ஒரு ராணுவ அதிகாரி. அவர், தன் தங்கையின் திருமணத்தை நடத்தக் குறுக்குவழியில் பணம் பெறுகிறார். அதை இடைமறித்து அபகரிக்கிறது ஓர் ஆன்லைன் ஹேக்கிங் கும்பல். அந்த ஹேக்கர்களின் தலைவனைக் பிடிக்க களத்தில் இறங்குகிறார் விஷால். அவனை விஷால் பிடித்தாரா இல்லையா என்பதை `இரும்புத்திரை'யின் கதை. 

2. இந்தியாவின் வழக்கமான நடைமுறைகளை வெறுக்கிறார் ராணுவ அதிகாரி கதிரவன் (விஷால்). அவரைச் சுற்றி நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோவப்பட்டு சண்டையிடுகிறார். அதில், அவருடன் பணியாற்றிய சில ராணுவ அதிகாரிகளும் அடிவாங்குகிறார்கள்.

3. கோவத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அவரை சைக்காலஜிஸ்ட் ரதி தேவியிடம் (சமந்தா) கவுன்ஸிலிங் பெற அனுப்பி வைக்கிறார் உயரதிகாரி. ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும் போகப்போக இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிடுகிறது. 

4. விஷால் அவருடைய சிறு வயதிலிருந்தே வீட்டில் இருந்து விலகியே இருக்கிறார். காரணம், அவரது அப்பா டெல்லி கணேஷ். அவர் ஊரைச் சுற்றி கடன் வாங்கி ஒளிந்து வாழ்கிறவர். தன் அம்மா இறப்புக்குக் காரணம் இந்த மனஉளைச்சல்தான் என்று நினைத்து தன் 12-வது வயதிலியே வீட்டிலிருந்து வெளியேறி, ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறார் விஷால். அப்பா மீதான கோவதில் தங்கையையும் சந்திக்காமலேயே இருக்கிறார். 

5. இதையெல்லாம் தெரிந்துகொண்ட சமந்தா, விஷாலை சொந்த ஊர் சென்று, ஒரு மாத காலம் இருந்துவரும்படி டாஸ்க் கொடுக்கிறார். விஷாலும் ஊருக்குச் செல்கிறார். பழைய கோவத்தால் விஷாலிடம் அவரது தங்கை பேசாமல் இருக்கிறார். அப்போது தனது தங்கையின் காதல் விஷயம் விஷாலுக்குத் தெரியவருகிறது. `காதலை சேர்த்துவைத்து தங்கையுடன் சமரசம் ஆகிவிடலாம்' என்று முடிவுசெய்து கல்யாணத்துக்குத் தேவைப்படும் பெரிய தொகையை ஏற்பாடுசெய்ய சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னை வருகிறார்.

6. அந்தப் பணத்தை திரட்ட வங்கிக் கடனுக்கு முயற்சி செய்கிறார். அந்த சமயத்தில் அறிமுகம் இல்லாத ஒருவரின் நட்பு கிடைக்க, அவர் மூலம் வேறு வழியில்லாமல் குறுக்கு வழியில் கடன் பெறுகிறார், விஷால். இதற்கிடையில் சென்னையின் பல்வேறு இடங்களில் ஆன்லைன் ஹேக்கர்ஸ் கும்பல் பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சூறையாடிக்கொண்டிருக்கும். அந்த சூறையாடலில் விஷாலின் பணமும் சிக்குகிறது. தன் பணத்தை திருடியது யார் என்ற தேடலில் இறங்குகிறார் விஷால். சில துப்புகளை வைத்து ஹேக்கர் கும்பலை நெருங்கும் சமயத்தில் ஹேக்கர்களின் தலைவன், ஒயிட் டெவில் (அர்ஜுன்) விஷாலிடம் உரையாடுகிறார். இதுதான் முதல் பாதி. 

‘7. `இவர் உண்மையிலேயே ஆர்மி மேஜர்' என்று சொல்லும் அளவுக்கு உடற்கட்டை மெருகேற்றி இருக்கிறார், விஷால். அழகழகான புடவைகளில், அழகாக வந்து போகிறார் சமந்தா.  வந்ததுவரை ஸோ க்யூட்.

8. வங்கிக் கடனுக்காக பல வங்கிகளில் அலைவது, கடன் வாங்கித் தர திரியும் ஏஜென்டுகள், கடனுக்காக ஏற்பாடு செய்யப்படும் போலி ஆவணங்கள், அதனால் ஏற்படும் இழப்பு, பிரச்னை... இப்படி திரையில் விரியும் காட்சிகள், எந்த நடுத்தர வர்க்கத்தினரையும் பதற வைக்கும். 

9. முகத்தைக் காட்டாமல் போன் மூலம் பேசியே, வெறித்தனமான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார், அர்ஜூன். முதல் பாதியில் மொத்தமே இரண்டு காட்சிகளில் தனது ப்ரசென்ஸைக் காட்டினாலும், ராணுவ அதிகாரிக்கு நிகரான வில்லன் என்பதையும் நிரூபித்திருக்கிறார். சற்று தளர்ந்திருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் ஸ்கோர் செய்கிறார், டெல்லி கணேஷ். ரோபோ சங்கரின் `ஓகே' ரக காமெடி கவுன்டர்கள் ஆங்காங்கே ஆறுதல் தருகின்றன.

10. படத்தில் சமந்தா சைக்காட்ரிஸ்டா, சைக்காலஜிஸ்ட்டா என்பதுதான் பெரிய சந்தேகம். அவரை ஒரு காட்சியில் சைக்காலஜிஸ்ட் என்றும், வேறொரு காட்சியில் சைக்காட்ரிஸ்ட் என்றும் குறிப்பிடுகிறார், விஷால் (பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டார்). யுவன் ஷங்கர் ராஜாதான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்பது இன்டர்வெல் ப்ளாக்கில் அர்ஜுனுக்கு போட்ட பி.ஜி.எம்.மில்தான் தெரிந்தது. இரண்டாம் பாதியில் மிரட்டுவார்போல.  

படத்தின் முதல் காட்சியையும் இடைவேளையையும் இணைத்துப் பார்க்கும்போது இரண்டாம் பாதி பரபர ஆக்‌ஷன், சேஸிங்கோடு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனதும் பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடுவது வழக்கம். ஆனால் விஷால் தன் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸுக்கு இரு தினங்களுக்கு முன்பே பத்திரிகையாளர்களுக்காக திரையிட்டார். அதுவும் படத்தின் முதல் பாதியை மட்டுமே திரையிட்டு, அடுத்த பாதியை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டுள்ளார். இரும்புத்திரை 2-ம் பாதிக்காக வெயிட்டிங்!

காத்திருப்போர் பட்டியலின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.