Published:Updated:

ரஜினி மனதிலிருந்து வந்த 5 உண்மைகள்! #KaalaAudioLaunch

மா.பாண்டியராஜன்
ரஜினி மனதிலிருந்து வந்த 5 உண்மைகள்! #KaalaAudioLaunch
ரஜினி மனதிலிருந்து வந்த 5 உண்மைகள்! #KaalaAudioLaunch

`கபாலி’ படத்துக்குப் பிறகு ரஜினி - பா.இரஞ்சித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம், `காலா’. இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். `காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நேற்று (9/5/18) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் அப்டேட்கள் இதோ...

`படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் ரஜினி, `நான் தனி ஆள்தாம்மா. ஆனா, இந்தத் தனி ஆளுக்காக உயிரையே கொடுக்க எத்தனை ஆளுங்க இருக்காங்கன்னு கொஞ்சம் எட்டிப்பாரு’னு சொல்லுவார். அந்தக் காட்சியில் நாம் பார்த்த கூட்டத்தை `காலா’ இசை வெளியீட்டு விழாவில் நேரிலேயே பார்க்க முடிந்தது. TN 01ல் தொடங்கி TN 99 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். 

விழா நடைபெற்ற YMCA மைதானத்தின் நுழைவுவாயிலிலிருந்து விழா மேடை வரை ரஜினியின் புகைப்படங்கள் கொண்ட கொடிகள், ஸ்டிக்கர்கள், பேண்டுகள் மற்றும் பாக்கெட் போட்டோக்கள் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று, ஆர்வமாக வாங்கிக்கொண்டிருந்தனர். 

`காலான்னா கறுப்பு’ என்பதை உணர்த்தும் வகையில் படக்குழுவினர்களும் ரஜினியின் பெரும்பாலான ரசிகர்களும் கறுப்பு உடையிலேயே வந்திருந்தனர். அதிலும் சில ரசிகர்கள் காலா காஸ்ட்டியூமில் சால்ட் அண்ட் பெப்பர் தலை முடியோடும் நரை தாடியோடும் வந்திருந்தனர். 
`காலா’ படத்தில் ரஜினி பயன்படுத்திய ஜீப் விழா மேடையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. 

படக் குழுவினர்கள் கறுப்பு உடையில் வந்திருந்தாலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் என்ட்ரி கொடுத்த தனுஷ், விழாவுக்கு வந்திருந்த அனைத்துச் சிறப்பு விருந்தினர்களுக்கும் கைக்கொடுத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

`வா... உன்னையும் மண்ணையும் வெற்று வா...’ என என்ட்ரி சாங்கோடு விழா அரங்கத்திற்குள் நுழைந்த ரஜினியை, ரசிகர்கள் தங்களது ஆரவாரத்தால் வரவேற்றனர்.

கேமராவுக்குத் தேங்காய் சூடம் காண்பிக்கப்பட்டு விழா தொடங்கியது.

விழாவைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, `தலைவா நீங்க ஆசி வழங்கிட்டா நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்’ என ரஜினியிடம் கேட்க, சிரித்துக்கொண்டே வணக்கம் வைத்தார் ரஜினி. 

விழாவின் முதல் நிகழ்வாய் `காலா’ படத்திற்காக சென்னையில் போடப்பட்ட தாராவி செட் வொர்க் எப்படி நடந்து என்ற வீடியோ ஒளிபரப்பப்பட்டது. 

`காலா’ படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் சாண்டி, `காலா’ பாடல்களுக்கும் ரஜினியின் பன்ச் டயலாக்கிற்கும் தனது ஸ்டைலில் நடனமாடினார். விழா நடைபெற்ற அந்தப் பிரமாண்ட மேடை முழுவதும் தனது நடனக்குழுவினரால் நிரப்பி, விழாவிற்கு மேலும் பிரமாண்டத்தைச் சேர்த்தார். 

`நான் யோசிக்காமப் பேச மாட்டேன்... பேசுனதுக்கு அப்பறம் யோசிக்க மாட்டேன்’ என்ற பன்ச் டயலாக்கிற்கு சாண்டி ஆடும் போது அதை சிரித்து ரசித்தார் ரஜினி. 

விழாவில் முதலாவதாகப் பேசிய ஒளிப்பதிவாளர் முரளி, ``இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தனா, தலைவரோட மாஸுக்கு நடுவுல நின்னு பேசிட்டு இருக்கேன். இந்த அதிர்ஷ்டம் அவராலதான் கிடைச்சிருக்கு’’ என்றார். 

``நான் மூணு வயசுல இருந்தே தலைவரோட ரசிகன். கிராமத்தில் இருந்த ஒரு லோக்கலான ரசிகன் இன்னைக்கு அவரோட படத்தில் வேலை பார்த்திருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு’’ என்றார் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம்.

பாடலாசிரியர் உமாதேவி, ``கல்வியோ, சினிமாவோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் விளிம்புநிலை மக்களுக்குச் சென்று சேர வேண்டும்’’என்றார்.

பறையாட்டத்தோடு என்ட்ரியான சந்தோஷ் நாராயணன், `நிக்கல் நிக்கல் சல்தேரே’ பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் சேர்ந்து பாடினார். இரண்டாவது பாடலாக `கண்ணம்மா’ பாடலை அனந்துவும் தீயும் சேர்ந்து பாடினார்கள். `வாடி என் தங்கசிலை’ பாடலை சங்கர் மகாதேவன் பாடினார். 

`` `காலா’ படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு என் வாழ்நாள் முழுக்க ரஜினி சாருக்குக் கடன்பட்டிருப்பேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த ரஞ்சித், தனுஷுக்கு நன்றி’’ என்ற ஈஸ்வரி ராவ், ரஜினிக்குத் தனது தாய்மொழியான தெலுங்கில் நன்றி சொன்னார். 

`விக்ரம் வேதா’ படத்தின் வசனகர்த்தாவும் நடிகருமான மணிகண்டன், `` `காலா’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்துக்கு ரஜினி சார் நினைத்திருந்தால் வேறு பெரிய நடிகரை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்காக நன்றி’’ என்றார். 

சந்தோஷ் நாராயணன் பேசும் போது, ``எனக்கு YMCA மைதானத்தில் லைவ் பெர்ஃபார்மென்ஸ் பண்ணனும்னு ரொம்ப நாள் ஆசை. அதை நிறைவேற்றிய தனுஷுக்கு நன்றி. மியூசிக் குழு மெம்பர்களுக்கு யாரும் கேரவன் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்று அனைவருக்கும் கேரவன் கொடுத்ததில் எங்க டீம் செம ஹேப்பி’’ என்றார்.

அதன்பின்னர் மேடையேறிய பா.இரஞ்சித், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். யார் பெயரையும் விட்டுவிடக்கூடாது என அனைவரின் பெயரையும் பேப்பரில் எழுதி எடுத்துவந்தார். மேலும், அவர் பேசுகையில், ``ரஜினி சாருக்கு பவர்ஃபுல்லான வாய்ஸ். அதை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் என நினைக்கிறேன். இரண்டாவது முறையாக ரஜினி சார் என்னை அழைத்துப் படம் பண்ணலாம்னு சொல்லும் போது, `கமர்ஷியலா ஒண்ணு பண்ணலாம்’னுதான் சொன்னார். காலாவில் கமர்ஷியலும் இருக்கு, மக்கள் சந்திக்கிற பிரச்னையையும் சொல்லியிருக்கேன்’’ என்றார். 

தயாரிப்பாளர் தனுஷ் பேசுகையில், ``படத்தின் கடைசி நாள் இரவு 11.30 மணிக்கு முடியவேண்டிய ஷூட்டிங், 2.30 மணி வரை நீண்டது. அப்போதும், முதல் படத்தில் வேலை செய்வதுபோலவே அவர் காட்டிய தொழில் பக்தியை, அப்போது கற்றுக்கொண்டேன். இந்தக் கதையை ரஞ்சித் அவரிடம் சொன்னபோது, தயாரிப்பாளரிடமும் கதையைக் கூறுங்கள் என்று சொன்னார். அப்போது தயாரிப்பாளரை மதிக்கும் பண்பைக் கற்றுக்கொண்டேன்’’ என்றார்.

இந்தச் சம்பவத்தைச் சொல்லும் போது ரஜினியைப் போலவே மிமிக்ரி செய்து காட்டினார் தனுஷ்.

மேலும், ``வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழி இருக்கு. ஒண்ணு கஷ்டப்பட்டு முன்னேறி பெரிய இடத்தை அடைவது. அடுத்தது, அந்த இடத்தில் இருக்கும் ஒருவரைத்  தாக்கிப் பேசி பிரபலமடைவது. இப்படி 40 வருடங்களாக இவரால் (ரஜினி) வாழ்ந்தவர்களும், பிழைத்தவர்களும், இவரைப் பற்றி தவறாகப் பேசி வருவதற்கு, `பழுத்த மரம்தான் கல்லடி படும்' என்று பொறுமையாய்  இருந்துவருகிறார். இதில் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டேன்.

சமீபகாலமாக,  பலரும்  மனம் வருத்தப்படும்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவேண்டுமா என்றேன். அதற்கு  அவர், `எல்லாரும் நண்பர்கள்தான்; எல்லாரையும் கூப்பிடுங்கள்’ எனச் சிரித்துக்கொண்டே கூறினார். இதில் பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் கத்துக்கிட்டேன். 

முதலில் வில்லன், குணசித்திர நடிகர், பிறகு ஹீரோ, ஸ்டார், ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார், இன்று தலைவர் நாளை... உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன்’’ என்றவர், இறுதியாக, `` `காலா' படத்தை நான் தனுஷாக தயாரிக்கவில்லை. `பாட்ஷா' படத்தை, முன் சீட்டில் உட்கார்ந்து பார்த்த வெங்கடேஷ் பிரபு எனும் ரசிகனாகத்தான் தயாரித்திருக்கிறேன்" என்றார்.

தனுஷ் பேசி முடித்துவிட்டு, `தலைவரை பேச அழைக்கிறேன்’ என்று ரஜினியை அழைக்க, அவர் மேடை ஏறியதும் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு கீழே இறங்கினார் தனுஷ்.

ரஜினி பேசும்போது, ``இது இசை வெளியீட்டு விழாபோல் இல்லை. படத்தின் வெற்றி விழா போல் இருக்கிறது. `சிவாஜி’ பட வெற்றி விழாவில் கலைஞர் பேசிய விஷயங்களை மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக ஒலித்த அந்தக் குரலை மறுபடியும் கேட்க தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த மக்களில் நானும் ஒருவன். விரைவில் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார். 

எப்போதும் மேடைகளில் குட்டிக்கதைகள் சொல்லும் ரஜினி, இந்த விழாவில் குட்டிக்கதைகள் எதுவும் சொல்லவில்லை. ஏற்கெனவே சொல்லியிருந்த `காது கேளாத தவளை’ கதையை மட்டும் நினைவுகூர்ந்தார். 

`காலா’ விழாவில் குட்டிக்கதைக்கு பதிலாக தனது வாழ்க்கைக்கதையைச் சொன்னார் ரஜினி. `கோச்சடையா’னின் தோல்விக்கதை, `லிங்கா’வின் தோல்விக்கதை, `கபாலி’யும் `காலா’வும் உருவான கதை எனப் பல விஷயங்களை விரிவாகவே பேசினார். 

`` `கோச்சடையான்’ படத்தின் மூலம் புத்திசாலிகளுடன் மட்டுமே பழக வேண்டும்; ஆலோசனைகள் கேட்க வேண்டும். அதி புத்திசாலிகளுடன் பழகக் கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். `லிங்கா’ பட தோல்வியிலிருந்து சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன்’’ என்றார். 

அதேபோல், ``இமயமலைக்குப் போவதே கங்கையைப் பார்க்கத்தான். சில இடங்களில் மௌனமாகவும், சில இடங்களில் ரெளத்திரமாகவும் கங்கை நடமாடிக்கொண்டு போகும். நதிகள் இணைப்பு என்பதே என் நீண்டநாள் கனவு. குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். அது நடந்த மறு கணமே நான், கண் மூடினால்கூட கவலை இல்லை’’ என்றார்.

மேலும், `` `காலா’ படத்தில் அரசியல் இருக்கும். ஆனால் அது அரசியல் படம் இல்லை’’ என்று குறிப்பிட்ட ரஜினி, ’’இதுவரை தனக்கு அமைந்த வில்லன் கேரக்டர்களில் எனக்குச் சவால் அளித்த கதாபாத்திரங்கள், `பாட்ஷா’வின் ஆண்டனி மற்றும் `படையப்பா’வின் நீலாம்பரி கேரக்டர்கள். அந்த கேரக்டர்கள் வரிசையில் `காலா’வில் நானா படேகர் நடித்த ஹரி தாதா கதாபாத்திரம் நிச்சயம் இடம்பெறும்’’ என்றார்.

அரசியல் வருகை குறித்து ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ``அதற்கான நேரம் இன்னும் வரவில்லை’’ என்றதுடன், ``விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்’ என்றார்.

படக்குழுவினர்களைப் பற்றி பேசிய ரஜினி, விழா நாயகன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை மறந்துவிட, ஒரு ஸாரி சொல்லிவிட்டு சந்தோஷ் பற்றியும் பேசி, `காலா’ இசை வெளியீட்டு விழாவை இனிதே நிறைவு செய்து வைத்தார்.