Published:Updated:

``மீல்ஸ் 'கபாலி' , பஃபே 'காலா'... ஆக்ச்சுவலா அண்ணன்... ஆனா, அப்பா!'' - அருண்ராஜா காமராஜ் #HBDSanthoshNarayanan

உ. சுதர்சன் காந்தி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பற்றி அருண்ராஜா காமராஜ் ஷேரிங்ஸ்.

``மீல்ஸ் 'கபாலி' , பஃபே 'காலா'... ஆக்ச்சுவலா அண்ணன்... ஆனா, அப்பா!'' - அருண்ராஜா காமராஜ் #HBDSanthoshNarayanan
``மீல்ஸ் 'கபாலி' , பஃபே 'காலா'... ஆக்ச்சுவலா அண்ணன்... ஆனா, அப்பா!'' - அருண்ராஜா காமராஜ் #HBDSanthoshNarayanan

'ஆடி போனா ஆவணி' முதல் 'வாடி என் தங்கச் சிலை' வரையிலான காதல் பாடல்களிலும், 'எங்கோ ஓடுகின்றாய்' முதல் 'செம வெயிட்டு' வரையிலான மாஸ் பாடல்களிலும் தன்னை நிலைநிறுத்தி, தனக்கான உயரத்தை அடைந்தவர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரின் இசையும் அதன்கூடவே வரும் அவரது குரலும் இவரது பாடலுக்குப் புதுமை சேர்த்து, அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும். 'போங்கு கிச்சான்', 'அடியே எஸ்.மது' மாதிரியான பேச்சு வழக்கைப் பாடலாக மாற்றி, 'அட... இப்படி ஒரு பாட்டா?' என ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இன்று பிறந்தநாள்!. 

சந்தோஷ் நாராயணனுக்கும், தனக்குமான நட்பு, பயணத்தைப் பற்றிப் பகிந்துகொள்கிறார், அருண்ராஜா காமராஜ். ``சந்தோஷ் அண்ணனும் நானும் திருச்சியில ஒரே காலேஜ்ல ஒரே டிபார்ட்மென்ட்ல படிச்சோம். என்னைவிட அவர் ரெண்டு வருடம் சீனியர். காலேஜ்ல சிம்போஸியம் நடக்கும்போதெல்லாம் அவரோட மியூசிக் கண்டிப்பா இடம்பெறும். 'இந்தப் பாட்டு எந்தப் படத்துல வரும்டா'னு எங்களுக்குள்ள பேசிக்குவோம். அந்தளவுக்கு, அவரோட பாடல் சினிமாவுக்கானதா இருக்கும். அப்படிதான் எங்களுக்கு சந்தோஷ் அண்ணனைத் தெரியும்.

ஆனா, காலேஜ் படிக்கும்போது அவ்வளவா பழக்கம் கிடையாது. சென்னை வந்தபிறகு, இன்னொரு சீனியர் மூலமா சந்தோஷ் அண்ணாவுடன் பழக்கம் அதிகமானது. ஒரு ஆல்பம் பண்ணலாம்னுதான் அவரை மீட் பண்ணிப் பேசினோம். அதுல எனக்கு 'இளவட்டத் தாளம்'னு ஒரு பாட்டு எழுதுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. 'நானே பாடுறேன்'னும் அவர்கிட்ட சொன்னேன். அவர் சினிமாவுல மியூசிக் டைரக்டர் ஆன பிறகு, அந்தப் பாட்டை ஒரு படத்துல பயன்படுத்தி, 'உன் பாட்டு ஒரு படத்துல வருதுடா'னு சொன்னார். இப்படிதான் நான் சினிமாவுக்குள்ள வந்தேன்னு சொல்றதைவிட, இப்படித்தான் சந்தோஷ் அண்ணா என்னை சினிமாவுக்கு வர வெச்சார்னு சொல்லலாம்!  

அதுக்குப் பிறகு, 'பீட்சா' படத்துல பாட்டு பண்ணணும்னு சொல்லிக் கூப்பிட்டார். அந்தப் படத்துக்கு 'ராத்திரியை ஆளும் அரசன்', 'எங்கோ ஓடுகின்றாய்' பாடல்களை எழுதினேன். தொடர்ந்து அவர்கூட பயணிக்க ஆரம்பிச்சேன். நான் எழுதுற பாட்டு அவருக்குப் பிடிச்சிருந்தது. நான் மிமிக்ரி பண்ணுவேன்னு தெரிஞ்ச அவருக்கு, நான் பாடுவேன்னு தெரியாது. 'இந்த வாய்ஸ் மிமிக்ரி பண்ணு; அந்த வாய்ஸ் மிமிக்ரி பண்ணு'னு என்னைப் பேசவெச்சு சிரிச்சுக்கிட்டு இருப்பார். அப்போ ஒருமுறை, நான் வேற வேற வாய்ஸ்ல ராப் மாதிரி பாடிக் காட்டினேன். அப்போ நான் பாடுனதைக் கேட்டுதான், 'ஜிகர்தண்டா' படத்துல 'டிங் டாங்' பாட்டும், 'காதலும் கடந்துபோகும்' படத்துல 'அட ஏய் பங்காளி' பாட்டையும் பாட வெச்சார்.

அதுக்குப் பிறகு, 'நெருப்புடா' பாட்டை எழுதிப் பாடுற பெரிய வாய்ப்பைக் கொடுத்தார். அவ்ளோ பெரிய படத்துல வொர்க் பண்ணும்போது, அவருக்கே நிறைய சவாலான விஷயங்கள் இருக்கும். ஆனா, நம்மகூட இருந்தவன் வளரணும்னு நினைச்சு ரஞ்சித் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி, இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும். அது, சந்தோஷ் அண்ணாகிட்ட இருக்கு. 'நெருப்புடா' பாட்டு சந்தோஷ் அண்ணா, ரஞ்சித் சார் ரெண்டுபேருக்குமே ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, சந்தோஷ் அண்ணா, 'டேய் இந்தப் பாட்டு படத்துல வருதா இல்லையானு தெரியலை. இந்தமாதிரி ஒரு பாட்டு எழுதிப் பாடியிருக்கேன்னு வெளியே எங்கேயும் சொல்லவேணாம்'னு சொன்னார். வந்தா சந்தோஷம், வரலைனாலும் ஓகேனு நினைச்சுக்கிட்டேன். பாட்டு வரலைனா நான் ரொம்ப ஃபீல் பண்ணுவேன்னு என்மேல அக்கறையா இருப்பார்.  

படத்தோட டீஸர் வந்ததுகூட எனக்குத் தெரியாது. நான் தூங்கி எழுந்து பார்த்தா, என் போன்ல அத்தனை கால் வந்திருந்தது. எல்லோரும், 'கபாலி பட டீஸர்ல நீதானே பாடுன, உன் வாய்ஸ்தானே அது...னு வாழ்த்துகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. என் வாழ்க்கையை மாத்துன நாள் அது. 'பைரவா' படத்துல, 'வர்லாம் வர்லாம் வா' பாட்டை எழுதிப் பாடுற வாய்ப்பு கிடைச்சது. அதுக்கும் செம ரெஸ்பான்ஸ். எனக்கு இசை குறித்த அறிவு அவ்வளவா இல்லை. சந்தோஷ் அண்ணா சொல்றதைப் பண்ணுவேன். பாடல் வரிகளை நான் எழுதிடுவேன், அதை எப்படிப் பாடணும்னு சந்தோஷ் அண்ணாதான் எனக்கு சொல்லித்தருவார். ஸ்டூடியோல அவரோட செம ஜாலியா இருக்கும். சிரிச்சுப் பேசியே நாம பண்ற தவறை மாத்திடுவார். ஒருத்தர்கிட்ட இருக்கிற திறமையை அவர் நம்புவார். அந்தத் திறமையை கடைசிவரைக்கும் நம்புறது, சந்தோஷ் அண்ணா ஸ்டைல். எந்த மாதிரியான சூழலையும் ரிலாக்ஸா ஹான்டில் பண்ணுவார். இதெல்லாம் நான் அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்ட விஷயங்கள்!  

'கபாலி' எனக்கு லிமிடெட் மீல்ஸ்னா, 'காலா' பஃபே மாதிரி. ஏன்னா, நாலு டிராக்ல என் பேர் இருக்கு. 'கற்றவை பற்றவை' பாட்டை இந்தியிலும் தெலுங்கிலும் என்னைப் பாட வெச்சிருக்கார்னா பார்த்துக்கோங்க. அவர்மேல அண்ணன்ங்கிற மரியாதை எனக்கு எப்போவுமே உண்டு. இப்போ நான் ஒரு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். சந்தோஷ் அண்ணனை நேர்ல பார்த்து ஆசீர்வாதம் வாங்கிட்டுதான் ஷூட்டிங் கிளம்பினேன். டைரக்டர் ஆகணும்ங்கிறதுதான் என் கனவுனு அவருக்குத் தெரியும். 'உனக்குக் கிடைச்சிருக்கிற மிகப்பெரிய வாய்ப்பு இது. மிகச்சரியா பயன்படுத்திக்கணும். இதுமூலமா கிடைக்கப்போற வெற்றிதான், எனக்கு சந்தோஷம்!'னு சொல்லி அனுப்பினார். எனக்குத் தெரியாத இசையுலகத்துக்கு என்னைக் கூட்டிக்கிட்டு போய், வாய்ப்பு கொடுத்து, என்னை வெற்றியடைய வெச்சு அழகு பார்த்தவர், சந்தோஷ் நாரயணன். முக்கியமாக, நான் அவரை அண்ணன்னு கூப்பிட்டாலும் அப்பா ஸ்தானத்துல வெச்சுதான் பார்க்கிறேன்! ஹாப்பி பர்த்டே சந்தோஷ் அண்ணா!" என்று முடிக்கிறார், அருண்ராஜா காமராஜ்.