Published:Updated:

''மீம்ஸ் கிரியேட்டர்கள் பண்ணாததையா நாங்க பண்ணிடோம்!" - 'தமிழ்ப் படம் 2' சிங்கிள் மேக்கிங் சுவாரஸ்யம்

உ. சுதர்சன் காந்தி.

'தமிழ்ப் படம் 2' படத்தில் இடம்பெற்ற 'நான் யாருமில்லை' பாடலில் யாரை யாரையெல்லாம் கலாய்த்திருக்கிறார்கள்?

''மீம்ஸ் கிரியேட்டர்கள் பண்ணாததையா நாங்க பண்ணிடோம்!" - 'தமிழ்ப் படம் 2' சிங்கிள் மேக்கிங் சுவாரஸ்யம்
''மீம்ஸ் கிரியேட்டர்கள் பண்ணாததையா நாங்க பண்ணிடோம்!" - 'தமிழ்ப் படம் 2' சிங்கிள் மேக்கிங் சுவாரஸ்யம்

சினிமாவில் எத்தனையோ ஜானர்கள் (genres) இருக்கும்போது, தமிழில் வெளியான படங்களை ஸ்பூஃப் செய்து படம் எடுப்பதைத் தனக்கான ஜானராக வைத்து, 'தமிழ்ப் படம்' படத்தை இயக்கினார், சி.எஸ்.அமுதன். இந்த கலாய் கான்சப்ட் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. எட்டு வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸரில் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் கலாய்த்த படக்குழு, இப்போது 'நான் யாருமில்லை' என்ற பாடலை வெளியிட, அதுவும் யூ-டியூப் டிரெண்டில் இடம்பிடித்திருக்கிறது. படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதனும், சந்துருவும் இணைந்து எழுதியிருக்கும் இப்பாடலில், ரஜினி முதல் விஷால் வரை அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருக்கிறார்கள்.  

'சுனாமியின் பினாமியே' எனத் தொடங்குவதைக் கண்டு 'தமிழ் படம்' படத்தில் வரும் 'பச்ச.....' பாடலைப்போல இப்பாடல் இருக்கும் எதிர்பார்த்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள். 'மெர்சல்' படத்தில் விஜய் கைதாகும் காட்சியில் கையை உயர்த்திக் காட்டுவதைப்போல உயர்த்தி, 'ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்' என்ற வசனத்தோடு ஆரம்பிக்கும் இந்தப் பாடலில், 'தேவர் மகன்' படத்தில் வரும் கமலைப்போல வெள்ளை சட்டை அணிந்து ஃபங்க் முடியுடன் என்ட்ரி கொடுக்கிறார், சிவா. 

'கபாலி' படத்தில் வரும் 'நெருப்புடா' பாடல் மாஸ் ஹிட். அதே மாடுலேஷனில் 'பருப்புடா' என்றதோடு மட்டும் நில்லாமல், 'நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஏன்னா, நான் வரவேமாட்டேனே' என ரஜினியின் அரசியல் என்ட்ரியை அவர் வசனத்தை வைத்தே கலாய்த்திருக்கிறார்கள். இலவச இணைப்பாக 'தமிழ் பாலும் இல்லை, தெலுங்கு பாலும் இல்லை... என்னை வாழ வைத்தது ஆவின் பால்' என 'அண்ணாமலை' ரஜினியையும் வதக்கியிருக்கிறார்கள்.  

'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...' எனக் கமலை கலாய்த்த கையோடு, 'தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ' என விஜயகாந்தையும் விட்டுவைக்கவில்லை. 'வர்லாம் வர்லாம்வா...' என்று 'பைரவா' ஓப்பனிங் பாடலை கார் ரிவர்ஸ் எடுக்கும் காட்சிக்காகப் பயன்படுத்தியவர்கள், 'வாழு வாழு வாழவிடு...' என விஜய் படங்களின் ஓப்பனிங் பாடல்களில் உள்ள வரிகளை வைத்திருக்கிறார்கள்.

அவரைக் கலாய்த்துவிட்டு இவரைக் கலாய்க்கவில்லை என்றால் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் களவரமாகும் எண்ணியிருப்பார்களோ என்னவோ, 'வரேன்மா' என்ற 'விவேகம்' வசனத்தையும் 'பீட்டா வந்தா எனக்கென்ன.. மீத்தேன் வந்தா எனக்கென்ன... நான் வாய் திறக்கமாட்டேன்.. எனக்கு யு வேணும். டாக்ஸ் ஃப்ரீ வேணும். மாஸ் ஓபனிங் வேணும். அதுமட்டும் போதும்...' என்ற வரிகளையும் பாடலில் அமைத்து, அஜித் பக்கமும் திரும்பியிருக்கிறார்கள்.  

'இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை... எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட்...' என சூர்யாவை டச் செய்தவர்கள், 'எனக்கு நடிக்கத் தெரியாதுங்க. எங்க அப்பா எனக்கு சொல்லித்தரலை', 'நான் ரொம்ப பேசித்தான் படமே இல்லடா... திரும்பி வந்துட்டேன், இப்போ கால்ஷீட் இல்லடா!' என சிம்பு பக்கம் யூ-டர்ன் அடிக்கிறது பாடல்.  

'நான் டிவியிலிருந்து வந்தவன்டா.. என் புரொடியூசருக்கு காரே இல்லைடா' என சிவகார்த்திகேயன் மேடையில் எமோஷனாகப் பேசியதை இங்கே ஹியூமராக்கி டிச் பண்ணி விளையாடியவர்கள், 'என் உயிர் மூச்சு சங்கம்டா.. மண்டபம் கட்டிட்டுதான் என் கல்யாணம்டா' என நடிகர் சங்க பிரஸ் மீட்டில் விஷால் சொன்னதையும் சேர்த்திருக்கிறார்கள்.  

பாடலில் இறுதியாக, 'இது அட்டாக் பண்ற சிவா, இது அட்ராக்ட் பண்ற சிவா, இது டேமேஜ் பண்ற சிவா' எனப் 'புலி' பட ஆடியோ லாஞ்சில் டி.ஆர் செய்த அட்ராசிட்டியை வைத்து பாடலை நிறைவு செய்திருக்கிறார்கள். வெளியாகி சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற இப்பாடல், இப்போது ஒரு மில்லியனைத் தாண்டி வைரல் லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. 

இந்த கலாய் பாடலை எழுதியவர்களில் ஒருவரான, சந்துருவிடம் இப்பாடல் குறித்துப் பேசினோம். "அமுதன் சார்கிட்ட வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். 'தமிழ்ப் படம்' படத்துல நான் இணை இயக்குநர். வசனம், பாடல்களும் எழுதினேன். இப்போ இரண்டாம் பாகத்துக்கும் மூணு பாட்டும், படத்துக்கு வசனமும் எழுதியிருக்கேன். இந்தப் பாடலோட ஐடியாவை அமுதன் சார்தான் சொன்னார். நாங்க புதுசா எதையும் பண்ணலை. நடிகர்கள் சொன்ன விஷயங்களை வெச்சுதான் பாடல் வரிகளை எழுதியிருக்கோம். நிச்சயம் ரீச் ஆகும்னு தெரியும். ஆனா, இந்தளவுக்கு ஹிட் ஆகும்னு எதிர்பார்க்கலை. ஒருத்தரை மட்டும் கலாய்க்காம, ஒட்டுமொத்தமா கலாய்ச்சிருக்கிறதுனால, எல்லோரும் இந்தப் பாட்டை ஜாலியாதான் எடுத்திருக்கிறாங்க. தவிர, 'எவடா உன்னைப் பெத்தா'னு ஆண்களைக் கிண்டலடிச்சு ஒரு பாட்டு வெச்சிருக்கோம். இந்தப் பாட்டையும் நானும் அமுதன் சாரும் சேர்ந்துதான் எழுதியிருக்கோம். முதல் பாகத்துல எந்தெந்த விஷயங்களை மக்கள் ரசிச்சாங்கனு தெரியும். அதனால, இந்தப் படத்துல ஆடியன்ஸூக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ, அதையெல்லாம் கொஞ்சம் அதிகமாவே சேர்த்திருக்கோம். ஸ்பூஃப் பண்ணாம இருக்கக்கூடாது; அது, அவங்களைக் காயப்படுத்துற மாதிரியும் இருக்ககூடாதுனு தெளிவா இருந்தோம். தவிர, மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்க்கிறதைவிடவா நாங்க அதிகமா கலாய்ச்சிட்டோம்?!" என்றார், சந்துரு. 

ஒரு பாடலில் இத்தனை கலாய் என்றால், படம் எப்படி இருக்கும்?! வெயிட்டிங்!