Published:Updated:

குதிரை முதல் சிம்பன்ஸி வரை... கோலிவுட்டில் ட்ரெண்டாகும் அனிமல் ஜானர் படங்கள்..!

அலாவுதின் ஹுசைன்

கிராபிக்ஸுக்கான செலவு, விலங்குகளை கையாளுவது, பீட்டா விலங்குகள் நலவாரியம் ஆகியோரது ஃபார்மாலிட்டிஸ் என இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய வேலை பளு என்பதால் இந்த அனிமல் ஜானர் படங்களை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை.

குதிரை முதல் சிம்பன்ஸி வரை... கோலிவுட்டில் ட்ரெண்டாகும் அனிமல் ஜானர் படங்கள்..!
குதிரை முதல் சிம்பன்ஸி வரை... கோலிவுட்டில் ட்ரெண்டாகும் அனிமல் ஜானர் படங்கள்..!

மிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் மக்களின் பேராதரவைப் பெற்று மெகா ஹிட்டாகிவிட்டால், தொடர்ந்து அதே ஜானரில் படங்கள் வருவது வழக்கம்; அது ஒரு ட்ரெண்டாகவே மாறும். அப்படி `சிவா மனசுல சக்தி', `பாஸ் என்கிற பாஸ்கரன்' என ரொமான்டிக் காமெடி படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பல காமெடி படங்கள் வரிசைக்கட்டி வந்தன. அதன் பிறகு `யாமிருக்க பயமேன்', `பிட்சா', `முனி' உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் எனப் பாரபட்சம் இல்லாமல் பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தன. தற்போது அரசியலைப் பேசும் `காலா', `சர்கார்', `ஆர்.கே நகர்', `அண்ணனுக்கு ஜே' சம்பந்தபட்ட படங்கள் வந்துகொண்டிருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக கோலிவுட்டில் ஒரு டஜன் அனிமல் ஜானர் படங்கள் தயாராகி வருகின்றன.

ஒரு காலத்தில் தேவர் ஃபிலிம்ஸ், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் என சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே மிருகங்களை வைத்து `நல்ல நேரம்', `அன்னை ஓர் ஆலயம்', `ஆட்டுக்கார அலமேலு', `துர்கா', `நீயா', `ஆடி வெள்ளி' எனத் திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. அதன் பிறகு கிராபிக்ஸுக்கான செலவு, விலங்குகளை கையாளுவது, பீட்டா விலங்குகள் நலவாரியம் ஆகியோரது ஃபார்மாலிட்டிஸ் என இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய வேலை பளு என்பதால் இந்த அனிமல் ஜானர் படங்களை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால், தற்போது, எல்லா மொழியிலும் வர்த்தகம் எளிதாகச் செய்ய முடியும் என்பதாலும், குழந்தைகளையும், குடும்ப ரசிகர்களையும் கவரும் என்பதாலும் விலங்குகளை வைத்துப் படம் எடுப்பது மெள்ள மெள்ளத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது.              

பரியேறும் பெருமாள் - நாய்

புதுமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக `கயல்’ ஆனந்தி நடித்துள்ள படம் பரியேறும் பெருமாள். இந்தப் படம் `கறுப்பி' என்ற நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இப்படத்தின் `கறுப்பி கறுப்பி' பாடல் தன் செல்ல நாயை இழந்த ஒருவனின் அழுகுரலாகவே ஒலித்தது.

கொரில்லா - சிம்பான்ஸி

ஜீவா, யோகிபாபு, சதீஷ், ராதாரவி, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் தயாராகி வரும் படம் `கொரில்லா’. இவர்களுடன் தாய்லாந்தைச் சேர்ந்த `காங்’ என்ற சிம்பன்ஸி நடித்துள்ளது .ஹாலிவுட் பட பாணியில் `காங்'கின் உதவியுடன் ஜீவா மற்றும் குழுவினர் எப்படி வங்கியைக் கொள்ளையடிக்கிறார்கள், ஏன் இதைச் செய்கிறார்கள் என முழு நீள காமெடி படமாகத் தயாராகி வருகிறது.

நீயா 2,  பாம்பன் - பாம்பு

`பகவதி', `ஏய்', `சாணக்யா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சரத்குமாரை வைத்து இயக்கி வரும் திரைப்படம் `பாம்பன்'. கச்சிதமான உடற்கட்டு, பாம்புத் தோற்றம் என முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலில் சரத்குமார் இருக்கும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி பரபரப்பானது. இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

காடன், கும்கி 2, மெஹந்தி சர்க்கஸ் - யானை

ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் யானைகளை வைத்து எடுக்கும் திரைப்படம் `காடன்'. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழியிலும் பிரமாண்டமாகத் தயாராகிறது. யானைகளை வைத்துப் படம் எடுத்திருக்கும் அனுபவம் இருப்பதால் பிரபு சாலமன் இப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல், `கும்கி 2' படத்தையும் ஒருசேர இயக்கி வரும் பிரபு சாலமன், ``இரண்டு படங்களும் வெவ்வேறான அனுபவங்களைக் கொடுக்கும்" என்கிறார். `கும்கி 2’ படத்தில் புதுமுகம் மதியழகன் நடித்துவருகிறார். தாய்லாந்தில் சிறு யானைக்குட்டியை வைத்துப் படம் தயாராகி வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜூமுருகன் எழுத்தில் உருவாகியுள்ள படம் `மெஹந்தி சர்க்கஸ்'. ராஜூமுருகனின் அண்ணன் சரவணன் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படம், சர்க்கஸில் பணி புரியும் நாயகிக்கும் (ஸ்வேத்தா த்ரிபாதி) கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையே நடக்கும் காதல் பற்றிய திரைப்படமாம்.

`குக்கூ’, `ஜோக்கர்' படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் அடுத்த படம், `ஜிப்ஸி'. ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல்பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக குதிரை ஒன்று நடிக்கிறது. படத்தில் நடனமும் ஆடவுள்ளதாம். 

ஜெட்லீ - பன்றிக்குட்டி

யகன்- ஓநாய்

`பிக்பாஸ்2' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் மஹத் நாயகனாக நடிக்க ஓநாய்களை வைத்து இந்த ஆக்‌ஷன் த்ரில்லரை இயக்கவுள்ளார் தினேஷ் பார்த்தசாரதி. படத்தின் ப்ரி புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படங்களைத் தவிர எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் `ஒரு நாள்கூத்து' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானிசங்கர் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக எலி இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. `களவாணி2 ' படத்தை இயக்கிவரும் சற்குணம் அடுத்ததாக மாதவனுடன் ஒரு புலியை வைத்துப் படம் இயக்கவுள்ளதாகவும், `கிருமி' படம் எடுத்த அணுசரண் இயக்கத்தில் பன்றிக்குட்டியை வைத்து ஒரு படம் இயக்கிவருவதாகவும்; ஆண்ட்டிரியா நடிப்பில் பூனையை மையமாக வைத்து ஒரு திகில் படம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.