Published:Updated:

`` `நாட்டாமை' டீச்சர், `ஓ போடு', `நந்தி விருது'... இப்போ ஹவுஸ் வொய்ஃப்!" - `அப்போ இப்போ' நடிகை ராணி - 17

சனா

`வில்லுப்பாட்டுக்காரன்' படத்தில் அறிமுகமான நடிகை ராணி, `அப்போ இப்போ' கதை சொல்கிறார்.

`` `நாட்டாமை' டீச்சர், `ஓ போடு', `நந்தி விருது'... இப்போ ஹவுஸ் வொய்ஃப்!" - `அப்போ இப்போ' நடிகை ராணி - 17
`` `நாட்டாமை' டீச்சர், `ஓ போடு', `நந்தி விருது'... இப்போ ஹவுஸ் வொய்ஃப்!" - `அப்போ இப்போ' நடிகை ராணி - 17

``என் சொந்த ஊர் ஆந்திரா. என்கூட பிறந்தவங்க ஆறு பேர். பெரிய குடும்பம் எங்களுடையது. அப்பா தெலுங்கு சினிமாவுல தயாரிப்பாளரா இருந்தார். என்.டி.ராமாராவ் நடிச்ச படங்களையெல்லாம் தயாரிச்சிருக்கார். எனக்கு ஏழு வயசு இருந்தப்போ சென்னைக்கு வந்துட்டோம். அப்பா, `பொம்பளைப் பிள்ளைங்க ரொம்பப் படிக்கணும்னு அவசியம் இல்லை'னு சொல்லி, படிக்க விடலை. அதனால எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடியலை. தவிர, எனக்குமே படிப்புல அவ்வளவு ஆர்வம் இல்லை!" - உற்சாகச் சிரிப்போடு `அப்போ இப்போ' கதையைச் சொல்லத் தொடங்குகிறார், நடிகை ராணி. 

``சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆடுறது எனக்குப் பிடிக்கும். நான் அதிகநேரம் செலவு பண்ணி டான்ஸ் ஆடுவேன். பாபு மாஸ்டர்கிட்ட குரூப் டான்ஸரா இருந்தேன். அந்தச் சமயத்துல ஒரு படத்துல குரூப் டான்ஸரா ஆடிக்கிட்டு இருந்தப்போ, இயக்குநர் கங்கை அமரன் சார் என்னைக் கூட்டத்துல ஒருத்தரா பார்த்திருக்கார். `யாரு டா.. இந்தப் பொண்ணு? பார்க்க லட்சணமா இருந்துக்கிட்டு, குரூப்ல டான்ஸ் ஆடுறாளே?'னு விசாரிச்சிருக்கார். `என் அடுத்த படத்துல இவதான் ஹீரோயின்'னும் சொல்லியிருக்கார். 

சொன்ன மாதிரியே கங்கை அமரன் சார், `வில்லுப்பாட்டுக்காரன்' படத்துல என்னை ஹீரோயின் ஆக்கினார். படம் நூறு நாள்களுக்கு தியேட்டர்ல ஓடுச்சு. தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்கள்ல நடிச்சேன். தெலுங்குல ஒரு படத்துல நானும், விக்ரம் சாரும் ஜோடியா நடிச்சோம். `மீரா' படத்தில் தமிழில் ஹீரோவா நடிச்சதும், தெலுங்குல அவர் நடிச்ச படம் அது. தவிர, நடிகர் மம்மூட்டி சார்கூட மலையாளப் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்கேன். இப்படித் தொடர்ந்து பல நல்ல நல்ல கேரக்டர்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும்போதுதான், தமிழில் `நாட்டாமை' படத்துல கே.எஸ்.ரவிக்குமார் சார் நடிக்கக் கூப்பிட்டார். `கிளாமரான டீச்சர் கேரக்டர் பண்ணணும். நீங்க பண்ணா நல்லா இருக்கும்'னு சொன்னார். முதல்ல வேணாம்னு தவிர்த்தேன். `கண்டிப்பா, இந்த கேரக்டர் உங்களுக்கு முக்கியமான அடையாளமா இருக்கும்'னு சொன்னார். அவர் சொன்னமாதிரியே, `நாட்டாமை' என் வாழ்க்கையில முக்கியமான படமா அமைஞ்சது. இப்போ அந்தப் படத்தைப் பார்க்கிற தலைமுறையும், அந்த டீச்சர் கேரக்டரை ரசிக்கிறாங்க. இதைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் சாரோட `அவ்வை சண்முகி' படத்திலும் என்னை நடிக்க வெச்சார்.  

கமல்ஹாசன் சார்கூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்துல நடிக்கும்போதும், `வேலைக்காரி கேரக்டரா?'னு முதல்ல தயங்கினேன். `கமலே இந்தப் படத்துல வேலைக்காரி கேரக்டர்லதான் நடிக்கிறார், நடி!'னு ரவிக்குமார் சார் சொன்னதும், சரினு சொல்லிட்டேன். இந்தப் படமும் பெரிய ஹிட். இப்படித் தொடர்ந்து நடிச்சுக்கிட்டு இருக்கும்போது, திருமணம் பண்ணிக்கிட்டேன். 1999- ம் வருடம் எனக்குத் திருமணம் நடந்தது. என் கணவர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர். காதல் திருமணம் எங்களோடது. வீட்டுல எந்த எதிர்ப்பும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு ஒரே பொண்ணு. காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருக்கா.  

`இவ்ளோ பெரிய பொண்ணுக்கு நீங்க அம்மாவா?'னு என்னைப் பார்க்கிறவங்கெல்லாம் ஆச்சர்யமா பாராட்டுவாங்க. என் பொண்ணு பிறந்தபிறகு, சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தேன். அப்போ, `ஜெமினி' படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது. இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு விக்ரம் சாரும், சரண் சாரும் கேட்டாங்க. `குழந்தை பெத்துக்கிட்டேன், கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'னு சொல்லி சமாளிச்சுப் பார்த்தேன். `நீங்க சரியா இருப்பீங்க'னு சொல்லி, நடிக்க வெச்சுட்டாங்க. 

படத்துல `ஓ... போடு' பாட்டு செம ஹிட் ஆச்சு. ஆக்சுவலா, விக்ரம் எனக்கு நல்ல நண்பர். என் சினிமா வாழ்க்கையில `ooh la la' என்ற தெலுங்குப் படத்துல அம்மா கேரக்டர்ல நடிச்ச எனக்கு, சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைச்சது. இந்தப் படம் தமிழ்ல ரீமேக் ஆச்சு. ஆனா, சரியாப் போகலை. இதுக்கிடையில ஒரு இயக்குநர் தமிழ்ல நடிக்கக் கூப்பிட்டார். அவர் என்னை அப்ரோச் பண்ண விதமே எனக்குப் பிடிக்கலை. நடிக்க மறுத்தேன். ரொம்பக் கெஞ்சுனதுனால, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். அங்கே அவர் என்கிட்ட நடந்துக்கிட்ட விதம் எனக்குக் கோபம் வரவைக்கிற மாதிரி இருந்தது. ஷூட்டிங்ல எல்லோருக்கும் முன்னாடி அவரை அறைஞ்சுட்டு வந்துட்டேன். அதுக்குப் பிறகு எந்தத் தமிழ்ப் படங்களிலும் நடிக்கலை. இப்போ, நான் ஹவுஸ் வொய்ஃப் ஒன்லி!. அப்பப்போ சில தெலுங்குப் படங்கள்ல தலைகாட்டுவேன். ஏன்னா, எனக்கு சினிமாவைவிட என் குடும்பம் ரொம்ப முக்கியம். நான் அதிக நேரம் குடும்பத் தலைவியா இருக்கிறதைத்தான் விரும்புறேன்!" என்கிறார், நடிகை ராணி.