Published:Updated:

``கவிஞர் தாமரை இன்னும் என்ன நிரூபிக்கணும்? ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை?!" - உமா தேவி

சுஜிதா சென்

`மெட்ராஸ்' படத்தில் `நான் நீ நாம் வாழவே...' பாடல் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பாடலாசிரியர் உமா தேவி பேட்டி.

``கவிஞர் தாமரை இன்னும் என்ன நிரூபிக்கணும்? ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை?!" - உமா தேவி
``கவிஞர் தாமரை இன்னும் என்ன நிரூபிக்கணும்? ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை?!" - உமா தேவி

`மெட்ராஸ்' திரைப்படத்தில் `நான் நீ' பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர், உமா தேவி. "விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிக்கிற '96 படத்துல மூணு பாடல்கள் எழுதியிருக்கேன். எஸ்.ஜே.சூர்யாவின் `இரவாக்காலம்', ஜி.வி.பிரகாஷின் `அடங்காதே', `ஜருகண்டி', `தங்கத்தமிழன்' ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கேன். எத்திராஜ் கல்லூரியில தமிழ்ப் பேராசிரியரா இருக்கிற எனக்கு, இப்போ சினிமா வாழ்க்கை ரொம்பவே பிஸியா போய்க்கிட்டு இருக்கு" - என்கிறார் பாடலாசிரியர் உமா தேவி. இவரது லேட்டஸ்ட் ஹிட் `காலா' படத்தில் இடம்பெற்ற `கண்ணம்மா' பாடல். 

``முதல் பாடல் எழுதிய அனுபவம்..."

``நிறைய கதைகள், கவிதைகள் எழுதுறதை சின்ன வயசுல இருந்தே பழக்கமா வெச்சிருக்கேன். என் கவிதைகளைப் படித்துதான் இயக்குநர் ரஞ்சித் சார் அவர் படத்துல பாடல் எழுதக் கூப்பிட்டார். `மெட்ராஸ்' படத்துல `நான் நீ நாம் வாழவே..' பாடல்தான் என் முதல் பாடல். முதல் வாய்ப்பு ரஞ்சித் சார் படத்துல கிடைச்சதை மிகப்பெரிய அங்கீகாரமா பார்க்கிறேன். எங்க வீட்ல உள்ளவங்களுக்கு சினிமா பத்தி அவ்வளவா பரிச்சயம் கிடையாது. ஆனா, என்னைப் பற்றிய குறிப்புகள் பத்திரிகையில் வரும்போது, நிகழ்ச்சிகள்ல என்னைப் பேசக் கூப்பிடும்போது... என்னை எண்ணி ரொம்ப சந்தோஷப்படுறாங்க." 

``குடும்பம் பற்றி..."

``என் அம்மா இந்திராணி, அப்பா குப்பன். ரெண்டுபேருமே கூத்துக் கலைஞர்கள். என் கணவன் பெயர் பாரதி பிரபு. சினிமாவுல இயக்குநராகுற முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்கார். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்துல அத்திப்பாக்கம் கிராமம். வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், வேலூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகள்ல இன்னமும் கூத்துக்கலை உயிர்ப்போட இருக்கு. அப்பாவுக்குப் பழைய புராணங்கள் அனைத்தும் அத்துப்படி. அம்மா நாட்டுப்புறப் பாடல்கள் நல்லாப் பாடுவாங்க. ரெண்டுபேரும் சேர்ந்து நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்காங்க. 

என் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும் `கூத்து'ங்கிறது கடவுள். வீட்டுக்கு ஒரு கூத்துக் கலைஞர் இருப்பாங்க. நானும் நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். பாரதி பிரபு சாரோட நாடகங்களிலும், பேராசிரியர் அமைதியரசு சாரோட `பொன்னி' நாடகத்திலேயும்  நடிச்சிருக்கேன். இலக்கியம் சார்ந்து நான் இயங்கிக்கிட்டு இருந்தாலும், நாடகத்தைதான் கலையின் முக்கியக் களமா பார்க்கிறேன். சமூகத்துக்கான விடுதலைச் சிந்தனைகள் நாடகத்துலதான் அதிகமா இருக்குனு நினைக்கிறேன். எனக்கு முன் மாதிரியா நான் பார்க்கிறது மணிமேகலை, ஒளவையார், காக்கை பாடினியார் போன்ற சங்க காலத்துப் பெண்களைத்தாம். மேற்கத்திய கலாசாரம் மீதும், அங்குள்ள பெண்கள் மீதும் நான் ஒருபோதும் ஈர்ப்பு கொண்டதில்லை. நம்ம ஊர் இலக்கியங்களும், புராணங்களுமே அதிக கலை உணர்வோடும், அறிவு சார்ந்ததாகவும் இருக்கு. நம் நிலம் சார்ந்த பிரச்னைகளையும் பார்வைகளையும் வெளிப்படுத்துற இடமாகத்தான் சினிமாவைப் பார்க்கிறேன். `மண் சார்ந்த எழுத்து'தான் என்னோட விருப்பம். 

என் அண்ணனுக்குத் தமிழ் கவிதைகள் எழுதுறதுல ஆர்வம் அதிகம். அவரோட இயற்பெயர் மேகநாதன். `மேகன்'ங்கிற பெயர்ல கவிதைகள் எழுதிக்கிட்டு இருக்கார். இவரோட கவிதைகள்தாம் எழுதணும்ங்கிற ஆர்வத்தை எனக்குக் கொடுத்துச்சு."

``ரஜினி - ரஞ்சித் படங்களுக்குத் தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கிட்டு இருக்கீங்களே..."

``ரஞ்சித் சாரும், சந்தோஷ் நாராயணன் சாரும் என் பாடல் வரிகளை மாத்தவே மாட்டாங்க. நான் என்ன எழுதுறேனோ, அதுதான் ஃபைனல். எனக்கான அடையாளத்தைக் கொடுத்தது ரஞ்சித் சார் படப் பாடல்கள்தாம். தொடர்ந்து வாய்ப்புகளையும் அவர் கொடுத்துக்கிட்டு இருக்கார். 

`காலா' பட ஷூட்டிங்லதான் ரஜினி சாரை பார்க்க முடிஞ்சது. ரஞ்சித் சார், `` `கண்ணம்மா' பாடலை எழுதினது இவங்கதான்"னு என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். அப்போ ரஜினி சார், `பாடல் அருமையா இருந்துச்சு. பிரமாதமா எழுதியிருந்தீங்க. என்னோட படங்கள்ல வர்ற மிக முக்கியமான பாடல்கள்ல இதுவும் ஒண்ணா இருக்கும். அதுக்குக் காரணம் உங்களோட வரிகள்'னு சொல்லி வியந்து பாராட்டினார்."

``தமிழ் சினிமாவுல பெண் பாடலாசிரியர்கள் நிலை எப்படி இருக்கு?"

``பெண் எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவுலதான்அதிகமா இருக்காங்க.`ஆண் ஆதிக்கம்'ங்கிறதுசினிமாவுல மட்டுமல்ல. பொதுவாகவே எல்லாத் துறைகளிலும் பெண்களைவிட ஆண்கள்தாம் அதிகமா இருக்காங்க. பெண் எழுத்தாளர்களை நம்பி எந்தவொரு இயக்குநரும் வாய்ப்பு தர்றதில்லை. காரணம் எல்லாத் தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆண்களா இருக்கிறதுதான். அதனால, பெண்கள் மீதான அறிவு சார் புரிதல் கொஞ்சம் குறைவாதான் இருக்கு. தமிழர்கள்தாம் எல்லாவிதமான அறிவுசார் தொழிலுக்கும் முன்மாதிரியா இருக்குறாங்க. பெண்களுக்கான இடத்தையும் அதிகமா கொடுக்க ஆரம்பிச்சா, இன்னும் நல்லா இருக்கும். முற்போக்கு இயக்குநர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. 

பாடலாசிரியர் தாமரை அவங்க யார்னு சினிமா உலகத்துக்கு உணர்த்திட்டாங்க. அப்புறமும் ஏன் வாய்ப்புகள் அதிகமா கொடுக்கலைனு தெரியலை. அதேமாதிரி எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தர்றது ரஞ்சித் சார் மட்டும்தான். இந்தத் துறையில என்னைப் புரிந்துகொண்ட சிலர்தான் எனக்கான அங்கீகாரத்தைக் கொடுக்குறாங்க. இந்த நிலை தமிழ் சினிமாவுல மாறணும்" என்று கம்பீரக் குரலில் முடிக்கிறார், உமா தேவி.