Published:Updated:

``டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..!’’ - ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்

சனா

சமீபத்தில், நடிகர் கலையரசன் இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறார். இதுகுறித்த அவருடைய பேட்டி.

``டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..!’’ - ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்
``டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..!’’ - ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்

’’ 'கபாலி' படத்தைவிட, 'காலா' ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதுக்குக் காரணம், சாமான்யர்களுக்கான அரசியலை இந்தப் படம் பேசியிருந்துச்சு. ரஞ்சித் அண்ணா எப்போவுமே தலித் அரசியல் பேசுறார்னு பலபேர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அவர் அப்படியில்ல. பொதுவா இருக்கிற பிரச்னைகளைத்தான் பேச நினைக்கிறார். அவரை குறுகிய வட்டத்துக்குள்ளே சில பேர் சுருக்கிடுறாங்க. அதான் ஏன்னு புரியல;  என்னால ஏத்துக்க முடியல. ரஞ்சித் அண்ணா பேசுற எல்லாத்தையும் தேவையில்லாத வேற ஏதோ ஒண்ணோட கனெக்ட் பண்ணுறாங்க. 'காலா' படத்தோட கதை என்னவோ அதைப் பத்தி பேச மாட்றாங்க. இதெல்லாம்தான் எனக்கு வருத்தமா இருக்கு. ஏன்னா, அவருடைய தம்பியா இருந்து இதை நான் ஃபீல் பண்றேன்'' என்று பேச ஆரம்பிக்கிறார் நடிகர் கலையரசன். 

’’ 'மெட்ராஸ்' படத்தின் மூலமா கலையரசன்கிற ஒருத்தனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்துனதே ரஞ்சித் அண்ணாதான். ரெண்டு பேரும் ஒரு படத்துல கமிட் ஆகும்போது, டைரக்டரா அவர் எனக்கு இருப்பார். அதைத் தாண்டி பெர்சனலா ரஞ்சித் எனக்கு அண்ணாதான். ரஞ்சித் அண்ணா டீம்ல இருந்த எல்லாரும் ஒண்ணா சேர்ந்து டெல்லிக்கு டூர் போலாம்னு இருந்தோம். கடைசி நேரத்துல சிலரால் வர முடியல. அதனால, நானும் அண்ணாவும் போனோம். ஒரு நாலு நாள் ட்ரிப். டெல்லிக்குப் போகும்போது, ராகுல் காந்தி சாரை மீட் பண்ணப் போறோம்கிற விஷயம் எனக்குத் தெரியாது. முதல்ல, நானும் ரஞ்சித் அண்ணாவும் சில இடங்களை சுற்றிப்பார்த்தோம். அப்போதான் தெரியும் செவ்வாய்க்கிழமை ராகுல் காந்திகூட அண்ணாவுக்கு மீட்டிங் இருக்குனு. 

நானும்கூட போறேன்னு தெரிஞ்சவுடனே சிறிய பதற்றம் இருந்துச்சு. ஷாக்காகவும் இருந்துச்சு. அண்ணா எப்போவுமே செம கூல்தான். வெளியே சுத்திப்பார்த்துட்டு நேரா ரூம்முக்குப் போய் குளிச்சிட்டு ராகுல் சார் சொன்ன இடத்துக்கு சரியான நேரத்துக்குப் போனோம். ரஞ்சித் அண்ணா மட்டும் அவருடைய அறைக்குள்ளே போய் பார்ப்பார்னு நினைச்சிட்டு நான் வெளியே வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல என்னையும் உள்ளே கூப்பிட்டாங்க. செம  ஷாக். ராகுல் சார் என்கிட்ட பேசும்போது ரொம்ப கூச்சமா இருந்துச்சு. என்னோட நடிப்பு கரியர் பற்றி விசாரிச்சார். ரொம்ப கேஷுவலா இருந்தார். நிதானமா நிறைய விஷயங்களைப் பற்றி பகிர்ந்துக்கிட்டார். தமிழில் அவருக்கு பேசத் தெரியல. அதனால இந்தி, இங்கிலீஷ்ல நிறையப் பேசினார். எந்த எந்த விஷயங்களைப் பற்றி பேசுனோம்ங்கிற விஷயத்தை நான் சொல்றதைவிட, ரஞ்சித் அண்ணா சொன்னதான் சரியா இருக்கும். ஒரு மனிதரா ராகுல் காந்தியை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அவரை மீட் பண்ணிட்டு, கொஞ்ச நேரத்துல சென்னைக்குக் கிளம்பிட்டோம். ராகுல் காந்தி மீட்டிங்ல நடந்தது இவ்வளவுதான்'' என சிரித்த கலையரசனிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

ரஞ்சித் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருடைய கட்சியில் உங்களை எதிர்பார்க்கலாமா?

‘’அண்ணா அரசியலுக்கு வரமாட்டார். அவர் நினைக்கிற, பேசுற அரசியலை அவருடைய படங்களின் வாயிலாகவே பேசிடுவார். கலை ரீதியா பேசுறதுதான் அண்ணாவுக்குப் பிடிக்கும். இது மூலமா மாற்றம் வரணும்ங்கிறதுதான் அண்ணாவுடைய எண்ணமும் முயற்சியும். அண்ணாவுடைய படங்களில் நடிக்கிறதையே நான் விரும்புறேன்.’’

உங்களுடைய 'மெட்ராஸ்' படத்தோட நாயகி ரித்விகா 'பிக் பாஸ்' ஹவுஸுக்குள்ள இருக்கார். நிகழ்ச்சி பார்த்தீங்களா?

‘’ 'பிக் பாஸ்' பாக்குற பழக்கம் இல்லை. ரித்விகா எனக்கு நல்ல நண்பர். தினமும் பேசுவார். ஆனா, இந்த நிகழ்ச்சிக்குப் போறது பற்றி என்கிட்ட எதுவும் சொல்லல. வெளியே வந்தவுடனேதான் விசாரிக்கணும்.’’

படங்கள்?

’’ இயக்குநர் சர்ஜூனுடைய முதல் படம் 'எச்சரிக்கை'. அதுல நடிக்க என்கிட்ட அவர் கேட்கும்போது கால்ஷீட் பிரச்னை இருந்துச்சு. அதனால நடிக்க முடியல. 'எச்சரிக்கை' படமும்  சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகுது. நல்ல சப்ஜெக்ட் கொண்ட படத்துல நடிக்க முடியலயேங்கிற வருத்தம் எனக்குள்ளே இருந்துச்சு. தொடர்ந்து சர்ஜூன்கிட்ட பேசிட்டு இருந்தேன். அடுத்தப் படத்துல சொல்லுங்க நடிக்கலாம்னு சொன்னேன். அவர், அந்தச் சமயத்துல நயன்தாராவை வைத்து ரெண்டாவது படம் எடுக்க இருந்தார். அப்போ என்கிட்ட, 'இந்தப் படம்  பெண் கதாபாத்திரம் கொண்ட படம்தான். ஆனா, படத்துல முக்கியமான ரோல் இருக்கு. பண்ணுங்க''ன்னு சொன்னார். கதை கேட்டேன். ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. நாலு கேரக்டர் நயன்தாராவைச் சுற்றி இருக்கும். அதில் முக்கியமான ஒரு ரோலில் நடிச்சிருக்கேன். இப்போதைக்கு இந்தப் படத்தோட ஷூட்டிங் போயிட்டிருக்கு. நல்ல அனுபவமா இருந்துச்சு. 

இது தவிர 'களவு', 'டைட்டானிக்', 'முகம்', 'சைனா'னு அடுத்தடுத்து என்னோட படங்கள் ரிலீஸாக இருக்கு. சைனா பஜாரில் கடை வெச்சிருக்கிற ஒருத்தர், சில பிரச்னைகளைத் தாண்டி அந்தக் கடையைத் தக்கவைத்துக்கொள்ள என்ன பண்றார்ங்கிறதுதான் 'சைனா' படத்தோட கதை. த்ரில்லர் ஜானரில் படம் எடுத்திருக்கோம். 'துருவ நட்சத்திரம்' படத்தோட நாயகி ரித்து வர்மாவுக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். 

ஒரு நாள் இரவுல நடக்குற கதை, 'களவு'. நானும், கருணாகரன் ப்ரதரும் சேர்ந்து நடிச்சிருக்கோம். டைரக்டர் வெங்கட்பிரபு சார் போலீஸ் கெட்டப்பில் நடிச்சிருக்கார். இதுதவிர 'டைட்டானிக்', ஒரு காதல் கதை. ஆனா, இந்தப் படத்தோட டிரெய்லரைப் பார்த்துட்டு இது அடெல்ட் காமெடி படம்னு நினைச்சுக்கிறாங்க. படத்துல இருக்குற எல்லாம் அடெல்ட் காமெடியும் ஒரு டிரெய்லரிலேயே முடிச்சிருந்துச்சு. இதைத் தாண்டி வேற எந்த அடெல்ட் காமெடியும் படத்துல இல்ல. குடும்பத்தோட என்ஜாய் பண்ற மாதிரியான படம்தான் 'டைட்டானிக்’ '' என்று சொல்லி முடித்தார் கலையரசன்.