Published:Updated:

’’புகைக்கும் மதுக்கும் டிஸ்க்ளெய்மர் போடுற சென்சார், இதையும் கவனிக்கணும்..!’’ - தாதா 87

ராம் சங்கர் ச
’’புகைக்கும் மதுக்கும் டிஸ்க்ளெய்மர் போடுற சென்சார், இதையும் கவனிக்கணும்..!’’ - தாதா 87
’’புகைக்கும் மதுக்கும் டிஸ்க்ளெய்மர் போடுற சென்சார், இதையும் கவனிக்கணும்..!’’ - தாதா 87

அழகான உடற்கட்டோடு ஒரு ஹீரோ, ரொம்ப அழகான ஒரு ஹீரோயின்... குறிப்பா இரண்டு பேருக்கும் வயது 25 குள்ள இருக்கணும். இதுதான் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் ஃபார்முலா. ஆனால், 87 வயசுல ஒரு ஹீரோ, 80 வயசுல ஒரு ஹீரோயின் நடிச்சு, விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, தாதா 87. சாருஹாசனும் கீர்த்தி சுரேஷோட பாட்டி சரோஜாவும் நடிச்சிருக்கிற, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி, தயாரிப்பாளர் கலைச்செல்வன், இயக்குநர் விஜய் ஸ்ரீ மற்றும் ஜனகராஜ், சரோஜா, கே.பி.ஒய் ஆனந்த பாண்டி, ஸ்ரீ பல்லவி, கதிர் எனப் படத்தில் நடித்திருந்தவர்களோடு பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

சினேகன் :

``வெள்ளந்தி சிரிப்புக்கும், வெள்ளந்தி மனதுக்கும் அடிமையான ஒரு மனிதர் சாருஹாசன். ஆனால், அந்த மனிதருக்குள்ளும் ஒரு தாதா இருப்பாங்கனு இந்த ஐடியாவை யோசிச்ச டைரக்டருக்கு வாழ்த்துகள். `பெண்கள் மீது கைய வச்சா, கொளுத்துவேன்’ என்ற டயலாக் ரொம்பப் பிடிச்சிருந்தது. இன்றைய காலகட்டத்துல ரொம்ப முக்கியமான கான்செப்ட். பெண் வன்முறையை எதிர்த்து போராடுபவர்கள் அனைவரும் இணைந்து ஒரு மீட்டிங் போட்டோம். பல அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர். இந்த டயலாக்கை சட்டமாகவே இயற்றணும்னு சொன்னாங்க. இங்க எதையும் சட்டமாக்க முடியாது. ஏன் தெரியுமா, சட்டம் தெரிந்த ஒரு அமைச்சருமே இங்க இல்லயே. ஒண்ணு சட்டம் தெரிஞ்சவர் இருக்கணும்; இல்ல, சட்டம் தெரிஞ்சவன் சொல்றதைக் கேட்கிற மனசு இருக்கணும். சட்டம் சரியா இருந்தால் தவறுகள் நடக்காது. அப்படி இல்லையென்றால், எல்லாருக்குள்ளும் உள்ள தாதா விழித்துக்கொள்வான். அப்படி இயக்குநரோட தாதா தான் சாருஹாசனா வெளிவந்திருக்கார்.’’

கௌதமி :

``படத்தோட டீசர் பார்த்தேன், பாடல் கேட்டேன், கண்டிப்பா படத்துக்குப் போகணும்னு தோணுச்சு. சாரு அண்ணனை ஒரு அவார்ட் வின்னிங் நடிகரா பார்த்துருக்கேன், நண்பனா பார்த்துருக்கேன், எழுத்து, சிந்தனை, கற்பனை எல்லா விதத்துலயும் ரசிச்சிருக்கேன். அண்ணா... உங்களோட ஃபேன்ணா நான். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு அவருடைய புது அவதாரம் மக்களுக்குத் தெரியும். சில படத்துலதான், `நம்ம இதுல வொர்க் பண்ணிருக்கலாம்’னு தோணும், அதுல ஒரு படம் இது. சரோஜா அம்மாவை எல்லாரும் பாட்டி பாட்டினு சொல்லிட்டு இருக்காங்க. அவங்க என் கண்ணுக்கு அழகான, சுறுசுறுப்பான ஹீரோயினாகத்தான் தெரிஞ்சாங்க. பெண்களுக்காக ஒரு விஷயம் பேசிருக்காங்க. கொடூரமான ஒரு நிலை நம்மள சுத்தி இருக்கு. எந்தத் தண்டனை கொடுத்தாலும் நம்ம மனிதத்தை நாம இழக்கக் கூடாது. இதை உணர்ந்து கைகோத்து வேலை செய்வோம். நம்மை யாரும் தடுக்க முடியாது.’’

சரோஜா ( கீர்த்தி சுரேஷ் பாட்டி ) :

``இயக்குநர் இந்தப் படத்தை ரொம்ப அழகா பண்ணிருக்காரு. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தைப் பண்ணிருக்காரு. எல்லாரும் தியேட்டருக்கு போய் படம் பார்க்கணும். எல்லாரும் இந்தப் படத்தை சக்ஸஸ் ஆக்கணும். டைரக்டர் எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. சாருஹாசன் சார் பெரிய ஆள். ஆனால், எனக்கு 80 வயசுல ஒரு வாய்ப்பு கொடுத்து, என்னை இந்தப் படத்துல சேர்த்துக்கிட்டாரு. அடுத்த படத்துலயும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்.’’

சாருஹாசன் :

``ஒரு காலத்துல சுதந்திரப் போராட்ட வீரர்களான காந்தி, ராஜ கோபாலச்சாரி, நேரு, சென் என்று எல்லாரும் வக்கீல்தான். இப்பதான் இந்த யோசனை வருது. நாட்டை வழிகாட்டிய எல்லாரும் வக்கீல்தான், அதன் தொடர்ச்சிதான் இது. அந்த வக்கீல்களுக்குப் பிறகு சினிமா நடிகர்களும், இயக்குநர்களும்தாம் மக்களுக்கு எல்லாத்தையும் சொல்றாங்க. ஆகவே, சினிமா வளரும் போது நல்ல விஷயங்கள் மக்களுக்குப் போய்ச் சேரணும். இந்தப் படம் மூலமா அது நடக்கணும்னு நினைக்கிறேன்.’’

டைரக்டர் விஜய் ஸ்ரீ :

``இந்தக் கதைய முதல்ல சாரு சார்கிட்ட சொல்லும் போது, `சார் நீங்க தாதாவா நடிக்கணும்’னு சொன்னேன். அவரு உடனே ``நான் தாத்தாப்பா“னு சொன்னார். எனக்குள்ளேயும் ஒரு தாதா இருக்காருனு இதை பண்றேன்னு சொன்னார். ஜனகராஜ் சாரை பார்க்குறதுக்கே மூணு மாசம் ஆயிடுச்சு, அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் படத்துக்கே ஓகே சொன்னார். ஜனகராஜ் சாரை கரெக்டா காட்டணும்னு ஒரு பயம் இருந்துச்சு. சாரு சாரை டீல் பண்ணும் போது அந்த பயம் இல்ல. கண்ணுல அவ்ளோ பவர் இருந்தது. கறுப்புச் சட்ட போட்டு, கழுத்துல கயிறு போட்ட உடனே மேச் ஆயிடுவார். நடிகர்கள் எல்லாருமே எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. எல்லாத்துக்கும் மேல என்னோட டீம் என்னைவிட நல்லா உழைச்சாங்க. நானும் மியூசிக் டைரக்டரும் ஒண்ணுதான்; போடாத சண்டை கிடையாது. அந்த அளவுக்கு லியாண்டர் உழைச்சிருக்கார். 

சென்சார்ல சிகரெட்டுக்கும், மதுவுக்கும் டிஸ்க்ளெய்மர் போட்ற மாதிரி, அனுமதியின்றி பெண்களை தொடுவது சட்டப்படி குற்றமாகும்னு போடணும்னு சென்சார்ல கேட்ருக்கேன். பிரதமருக்கும் கடிதமெல்லாம் கொடுத்துருக்கேன். ஒரு நாள் ஸ்கூல் வாசல்ல நிக்கும் போது, இரண்டு பேர் பேசிக்கிட்டு இருந்தாங்க. `ஏன் உங்க பொண்ணை டியூசன்லாம் அனுப்பலையா’னு ஒரு அம்மா கேட்குறாங்க, `இல்ல கொஞ்சம் வளரட்டும் யார நம்பி அனுப்ப’னு அவங்க கேட்க, மனசு ரொம்ப பாதிச்சுது. அதுல வந்த கதைதான் இது. குட் டச், பேட் டச் பசங்களுக்குச் சொல்லிக் கொடுங்க. அதான் முக்கியம். நாட்ட திருத்த நாங்க வர்ல, ஆனால் நம்மள சுத்தி இருக்கிறதை நாம பார்த்துக்கணும். இதெல்லாம், உச்ச நடிகர் சொன்னாதான் கேப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனால், சாரு சார் சொன்னது உலக அளவில் டிரெண்டிங்ல இரண்டாவது இடத்துல இருந்துச்சு. சாரு சாரோட முழு வில்லத்தனத்தைப் பார்க்க எல்லாரும் வெயிட் பண்ணுங்க. சீக்கிரமே படம் வரும்.’’