Published:Updated:

``என் மனைவிக்கு நன்றி!’’ - சிவகார்த்திகேயன்

உ. சுதர்சன் காந்தி.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் 'கனா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு இது!

``என் மனைவிக்கு நன்றி!’’ - சிவகார்த்திகேயன்
``என் மனைவிக்கு நன்றி!’’ - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் 'கனா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவை மிர்ச்சி விஜய், ஷா இருவரும் தொகுத்து வழங்கினர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ், ``நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்தப் படத்தைப் பண்ணோம். எல்லா நண்பர்களும் என் கூட இருந்தாங்க. இனிமேல் இப்படி ஒரு கூட்டணி அமையுமானு தெரியாது. இந்தப் படத்துல பேசியிருக்க விஷயங்களான விவசாயம், கிரிக்கெட் ரெண்டுமே என் மனசுக்கு ரொம்ப நெருக்கம். படிப்பைத் தாண்டி திறமைங்கிற ஒரு விஷயம் எல்லோருக்கும் எதிலாவது இருக்கும். அதைக் கண்டுபிடிச்சு அதுல போனோம்னா கண்டிப்பா ஜெயிக்கலாம். என் நன்றிகள் எப்போவுமே நண்பர்களுக்கு உண்டு. இதுக்கு காரணமாக இருந்த சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப நன்றி. ஆரம்பத்துல கிரிக்கெட் பிளேயரை நடிக்க வெச்சிடலாம்னு நினைச்சேன். இதுவரை கிரிக்கெட் விளையாடாத ஐஷ்வர்யா, நான் டிரை பண்றேன்னு சொல்லி இதுக்காகக் கத்துக்கிட்டு, காயப்பட்டு இப்போ சூப்பரா விளையாடுறாங்க. படத்தோட பெரிய தூணா இருந்த சத்யராஜ் சாருக்கு ரொம்ப நன்றி!" என்றார். 

ஐஸ்வர்யா பேசும்போது, "முதல் படமே ஹீரோயின் சென்ட்ரிக் படம் எத்தனை பேர் எடுப்பாங்கனு தெரியலை. 'கிரிக்கெட் விளையாடுவீங்களா'னு சிவகார்த்திகேயன் மெசேஜ் பண்ணார். 'தெரியாது'னு சொல்லிட்டேன். அப்புறம், நானே அருண்ராஜாவுக்குப் போன் பண்ணி, 'இந்தப் படத்துல நான் நடிக்கிறேன்'னு சொன்னேன். ஒரு வாரம் பிராக்டீஸ் பண்றேன், செட் ஆகலைனா வேற யாராச்சும் நடிக்கட்டும்னு சொன்னேன். என்மேல நம்பிக்கை வெச்ச அவருக்கு நன்றி. அசோக், தமிழ்நாடு டீம் கோச் ஆர்த்தி, தியாகராஜன் இவங்க மூணு பேரும்தான் எனக்குப் பயிற்சிகள் கொடுத்தாங்க. எனக்குப் பந்து பொறுக்கிப்போட்டே அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் இளைச்சுட்டாங்க. இப்போ பெண்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சது மட்டுமில்லாம, கிரிக்கெட் விளையாடவும் ஆரம்பிச்சுட்டாங்க!" என்றார். 

படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், "தயாரிப்பாளர் எனக்கான கிரெடிட். ஆனா, நான் எப்போவும் வேலைக்காரன்தான். அருண்ராஜாவோட பாடல்கள் ஹிட்டானபோது வாழ்த்திட்டு, 'இதுலேயே கம்ஃபோர்ட் ஆகிடக் கூடாது. நீ டைரக்டர் ஆகணும்'னு சொல்லிக்கிட்டே இருப்பேன். ஒருநாள் நான் கூப்பிட்டு, கிரிக்கெட் சம்பந்தமான படம் பண்ணுனு சொன்னேன். நாலு நாள் கழிச்சு பெண்கள் கிரிக்கெட்டை வெச்சு ஒரு கதையைச் சொன்னான். இதைச் சொன்னவுடனே நான்தான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, அவன்கிட்ட சொல்லலை. கதையை எழுதி முடிச்சு என்கிட்ட சொன்ன பிறகுதான் நான் தயாரிக்கிறேன்னு சொன்னேன். சின்ன பட்ஜெட்ல படத்தை எடுக்கல. கொஞ்சம் அதிகமா செலவு பண்ணியே படத்தை எடுத்திருக்கோம். காரணம், என் நண்பன்மேல இருந்த நம்பிக்கை. அதுக்குனு இவன் அதிகமா சம்பாதிக்கிறான் அதுனால இப்படி செலவு பண்ணிட்டான்னு யாரும் சொல்லிடக் கூடாதுனு பார்த்து பார்த்துதான் செலவு பண்ணேன். இந்தப் படத்துல எனக்கு வர்ற லாபம், என் அடுத்தடுத்த படங்களுக்கான முதலீடுதான். காலேஜ்ல நான், அருண்ராஜா, துபி மூணு பேரும் கண்ட கனா, இந்தக் 'கனா'வா மாறியிருக்கிறது ரொம்ப சந்தோஷம். ஆராதனாவைப் பாட வெச்சதுக்கு திபுவுக்கு நன்றி. இது நண்பர்களுக்கு நான் செய்ற உதவினு சொல்றாங்க. இது உதவி இல்லை; கடமை. ஃப்ரீயா இருக்கிற நேரத்துல தண்னி அடிக்கப் போலாம், தம் அடிக்கப் போலாம்னு என்னைக் கூட்டிக்கிட்டு போகாம, என்னை நல்ல வழியிலேயே வழிநடத்திய நண்பர்களுக்கு நான் செய்ற கடமை. என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் சந்தோஷமா இருக்கிறதுதான் என்னோட வெற்றினு நம்புறேன். கையில இருக்கிற காசுல வீடு வாங்கலாம், சொத்து சேர்க்கலாம்னு சொல்லாம, அருண்ராஜா அண்ணனுக்கு சூப்பரா படம் பண்ணலாம்னு என் மனைவி ஆர்த்தி சொன்னது எனக்குப் பெரிய ஆதரவா இருந்தது" என்றவர், "என் அடுத்த தயாரிப்பில், 'பிளாக் ஷீப்' டீம் வொர்க் பண்ணப்போறாங்க. தம்பி ரியோ ஹீரோவா பண்றாப்ள. ஆல் தி பெஸ்ட் டீம்!" என்று முடித்தார்.

விழாவில், இயக்குநர்கள் பாண்டிராஜ், துரை.செந்தில்குமார், ரவிகுமார், ராஜேஷ், விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர்கள் இமான், அனிருத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, விவசாயி 'விதை' யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.