Published:Updated:

``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி!" #HBDSoori

உ. சுதர்சன் காந்தி.

வாய்ப்புத் தேடி அலையும்போது எந்தத் தெருவில் பசி மயக்கத்தில் கீழே விழுந்தாரோ, அதே தெருவில்தான் இன்று ஆபீஸ் அமைத்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் சூரி.

``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி!" #HBDSoori
``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி!" #HBDSoori

சூரி... இந்த இரண்டு எழுத்துக்குத் தமிழ் சினிமாவில் அவ்வளவு கிராக்கி. தமிழ் சினிமா எத்தனையோ நகைச்சுவை நடிகர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால், அதில் சிலர் மட்டுமே எல்லா வரையறைகளையும் மீறி, காலம் தாண்டி ஜொலித்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நிச்சயம் சூரியின் பெயர் இடம்பெறும். `சினிமா நமக்கு சோறுபோடும்' எனக் கனவுக் கோட்டையோடு பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு, சென்னை கோடம்பாக்கத்துக்கு வந்தவர்கள் ஏராளம். ஆனால், அந்தப் பந்தியில் ஒரு சிலருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். அப்படிப் பொறுமையுடன் எதிர்பார்த்து நாள்களை எதிர்கொண்டு, இப்போது சூரி அடைந்திருக்கும் இடம் அசாதாரணமானது, அசாத்தியமானது. வெண்ணிலா கபடிக்குழுவில் அவர் புரோட்டா சாப்பிட ஆரம்பித்தபோது, கோடு போட ஆரம்பித்த கோலிவுட். இன்னும் கோடு போட்டுக்கொண்டே இருக்கிறது. 

எண்ணெய் வடியும் முகம், மெல்லிய கருந்தேகம், ஷேவ் செய்யாத தாடி, டவுசர் தெரியுமளவு கட்டியிருக்கும் அழுக்கு வேட்டி... எனச் சினிமாக்காரர்களுக்கான அடையாளமே இல்லாமல், 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் களமிறங்கிய சூரியை 'அந்த ஊர்காரர்போல. சும்மா நடிக்க வெச்சிருக்காங்க' என்றே நமக்கு உணர வைத்தது. கள்ளங்கபடமில்லாமல் கபடி ஆடி நண்பர்களோடு லூட்டியடிக்கும் சுப்ரமணியாக வரும் சூரிக்கு, இயக்குநர் சுசீந்திரன் கொடுத்த 'புரோட்டா'தான் சினிமா எனும் இரும்புத்திரையைத் திறந்து வைத்தது. அதுவரை வெறும் சூரியாக இருந்தவர், 'புரோட்டா' சூரியாக மாறி, தமிழ் சினிமாவில் கதகளி ஆடத் தொடங்கினார். பின் யார் இவர்... இதுதான் இவரது முதல் படமா... என்று பல தேடல்களுக்கு ஆளானார். 'நினைவிருக்கும் வரை', 'காதல்', 'ஜி', 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் வந்த அன்றைய சூரிதான் இன்றைய 'புரோட்டா' சூரி. 

தொடர்ந்து கிராமத்து வாசனை கொண்ட படங்களில், குறிப்பாக மதுரை சார்ந்த படங்களில் மதுரை இருக்கோ இல்லையோ, சூரி கண்டிப்பாக இருப்பார். காரணம், 'அட! நம்ம ஊர்க்கார பய' என்று சொல்லும் அளவுக்கு, கிராமத்துக்காரனுக்கான பிரத்தியேக முகம் சூரியிடம் உள்ளது. இந்தக் கிராமத்துக்காரனுக்கு, ஒரு தனி ரசிகர் படையே உருவானது. அவ்வப்போது சிட்டி வாசனைகொண்ட படங்களில் நடித்தாலும், 'இதெல்லாம் நான் பண்ணா சிரிச்சிருவாங்க மாப்ள' என அதிலும் சொல்லியடித்துச் சிரிக்க வைத்தார். இதுதான் சூரி ஸ்பெஷல். 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்த சூரியுடன் 'கேடி பில்லா'வும் 'கில்லாடி ரங்கா'வும் படத்தில் கைகோத்தார். இந்த அசத்தல் காம்போவின் அட்ராசிட்டிகளுக்கு அளவே இருக்காது. பின், 'தேசிங்கு ராஜா' படத்தில் 'ஸ்ஸ் பை மாமா..!' 'எதுவும் பிரச்ச்ச்ச்னையா' எனப் பஞ்சுமிட்டாய் கலர் சொக்காவில் சூரி பேசும் வசனங்களுக்கு அரங்கமே சிரிப்பால் நிறைந்தது. 'வின்னர்' படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சூரி, சிவகார்த்திகேயன் தலைமையில் அந்தச் சங்கத்தின் செயலாளராகப் புரொமோஷன் ஆனார். ஹீரோ - ஹீரோயின் ஜோடியைவிட போஸ் பாண்டி - கோடி ஜோடிக்குத்தான் மவுஸ் ஜாஸ்தி. அந்தக் கூட்டணி, 'ரஜினி முருகன்', 'சீமராஜா' எனப் படையெடுத்து வருகிறது. 

வருடத்துக்கு 10 படங்களில் நடித்து வந்த சூரி, இப்போது அதைக் குறைத்திருக்கிறார். காரணம், ஹீரோவோடு டிராவல் ஆகும் கேரக்டர்களாக வருவதால் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார். இங்கிலீஷ் வார்த்தைகளை உச்சரிப்பது சூரிக்கு கடுமையான டாஸ்க். ஆனால், அதையே தனக்கான பாசிட்டிவ் மெட்டீரியலாக மாற்றியமைத்து அதில் அப்ளாஸ் அள்ளி அசத்தி வருகிறார். டயலாக் பேப்பரில் இல்லாத பல வசனங்களை ஸ்பாட்டில் போட்டதுதான், இவரை தற்போது லைம்லைட்டில் நிற்க வைத்திருக்கிறது. எல்லோரையும் ஆட்கொள்ளும் விமர்சனக் கணை இவர் மீதும் வைக்கப்பட்டது. `அட போப்பா... சூரி காமெடிக்கு இப்போல்லாம் சிரிப்பே வரமாட்டேங்குது' என்று எழுந்த விமர்சனத்துக்குப் பிறகு, 'கடைக்குட்டி சிங்கம்' படம் நல்ல பதிலையும் பெயரையும் கொடுத்திருக்கும். 'ஆயில் எல்லாம் மாத்தி இன்ஜினை சரி செஞ்சு மறுபடியும் ஸ்டார்ட் பண்ணி விட்டிருக்கீங்க பாண்டி அண்ணே!' எனக் 'கடைக்குட்டி சிங்கம்' சக்சஸ் மீட்டில் அவர் பேசியது, அனைவரையும் நெகிழ வைத்தது. சுப்ரமணி, முருகேசன், சின்று, சூர்யா, கோடி, தோத்தாதிரி, கொக்கரக்கோ, சூரணம் என சூரியின் கேரக்டர்கள் எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை. 'பங்கு', 'பீட் ரூட்டு', 'டொமாட்டோ', 'பொங்கச்சோறு' எனச் சூரி பயன்படுத்தும் வார்த்தைகள் ட்ரெண்ட் லிஸ்டில் சேர்ந்துவிடும். அன்று கால்கடுக்க வாய்ப்பு தேடி அலைந்த சூரியிடம் இன்று கால்ஷீட் கேட்டு பலர் கால் கடுக்கக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இயக்குநர் சுசீந்திரனின் மேல் கொண்ட மரியாதையால், தனது வீட்டில் அவரது புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார் சூரி. மதுரக்காரங்களுக்கு மரியாத தர சொல்லிக்கொடுக்கணுமா என்ன (!) மேலும், 'வெண்ணிலா கபடிக்குழு' தன் வாழ்க்கையை மாற்றியதால், தன் மகளுக்கு வெண்ணிலா என்றே பெயர் வைத்துள்ளார். " 'விஸ்வாசம்' என்ற வார்த்தையைச் சொன்னால் எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது சூரிதான். அந்த விஸ்வாசமும் பணிவும்தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது" எனச் சிலாகித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். 'நான் சினிமாவில் சம்பாதித்த சொத்து, என் தம்பி கார்த்திதான்' என்று சிவகார்த்திகேயனை நினைத்து உருகும் சூரி... ' அவர் என் அண்ணன்' என்று உரிமையோடு அழைக்கும் சிவகார்த்திகேயன்... இவர்களது இந்த உறவு, திரை தாண்டியும் ஆழமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. 

வாய்ப்பு தேடி அலையும்போது எந்தத் தெருவில் பசி மயக்கத்தில் கீழே விழுந்தாரோ, அதே தெருவில்தான் இன்று ஆபீஸ் அமைத்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் சூரி. இவரின் இந்த வெற்றிப் பயணம் கிராமத்திலிருந்து மஞ்சப்பை தூக்கிக்கொண்டு வரும் ஒவ்வொருவருக்கும் முன் உதாரணம். ஜ்ஜூப்பர் சூரி... ஆஜம்..! ஹேப்பி பர்த்டே சூரி.