Published:Updated:

வெளிநாட்டில் ஷூட்டிங்; அஜய் தேவ்கானுடன் ஆக்‌ஷன்... நயன்தாரா கன்ஃபார்ம்! - இந்தியன் 2 அப்டேட்ஸ்

எம்.குணா
வெளிநாட்டில் ஷூட்டிங்; அஜய் தேவ்கானுடன் ஆக்‌ஷன்... நயன்தாரா கன்ஃபார்ம்! - இந்தியன் 2 அப்டேட்ஸ்
வெளிநாட்டில் ஷூட்டிங்; அஜய் தேவ்கானுடன் ஆக்‌ஷன்... நயன்தாரா கன்ஃபார்ம்! - இந்தியன் 2 அப்டேட்ஸ்

தமிழ்சினிமாவில் இரண்டாம் பாகம் எடுக்கும் படலம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முதலில் `பில்லா' அடுத்து `சிங்கம்'  அதற்குப் பிறகு `அரண்மனை'. 2003- ம் ஆண்டு ரிலீஸான `சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தை 15 ஆண்டுகள் கழித்து இப்போது எடுத்திருக்கிறார்கள். அதுபோல, 1996- ம் ஆண்டு வெளிவந்த `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம், `இந்தியன் 2' என்ற பெயரில் 22 ஆண்டுகள் கழித்து உருவாகவிருக்கிறது.

இதுவரை சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த அலுவலகத்தில்தான் தன் படங்களின் கதை, திரைக்கதை விவாதங்களை செய்துவந்தார், இயக்குநர் ஷங்கர். இப்போது கிழக்கு கடற்கரைச் சாலைக்கு அலுவலகத்தை மாற்றிவிட்டார். அங்கேதான் `இந்தியன் 2' படத்தின் டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கிறது. நடிகர் சிவகுமார் வீட்டுக்கு அருகில் இருந்த தனது வீட்டையும் ஈசிஆர் பகுதிக்கு மாற்றிவிட்டார். ஷங்கரின் அதிநவீன பங்களாவில் எந்தப் பகுதிக்குச் செல்வது என்றாலும், ரிமோட் கன்ட்ரோல் பயன்படுத்துகிறார்கள்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் `இந்தியன் 2' படத்துக்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. `பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார், கமல். அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் `இந்தியன் 2' படத்துக்கான படப்பிடிப்பில் இருப்பார், கமல்.  

`இந்தியன் தாத்தா' கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை போலந்து, உக்ரைன் அகிய நாடுகளில் 20 நாள்கள் தொடந்து நடத்தவிருக்கிறார்கள். அங்கே சென்று `இந்தியன் 2' படப்பிடிப்புக்கான லொகேஷன்களைத் தேர்வு செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ஷங்கர்

முதல் பாகத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம்தான், `இந்தியன் 2' படத்தையும் தயாரிக்கிறார். முதல் பிரின்ட் அடிப்படையில் லைக்கா நிறுவனத்துக்குத் தயாரித்து தருவதாக முதலில் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. `இந்தியன் 2' படத்தை லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. `இந்தியன்' டைட்டிலுக்குச் சன்மானமாக இப்படம் ரிலீஸாகும்போது தெலுங்கு மொழியில் என்ன விலை பேசப்படுகிறதோ, அதைவிட 5 கோடி ரூபாய் குறைவாக ஏ.எம்.ரத்னத்துக்குக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.   

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் `2.0 ' படத்தில் ரஜினியுடன் மோதும் அதிரடி வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். அதுபோல,  கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகியிருக்கிறார்கள். பெருந்தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து அவரது கால்ஷீட் தேதிகளை வாங்கி வைத்திருக்கிறது, லைக்கா நிறுவனம். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.  

தமிழ் சினிமாவில் த்ரிஷா நடிக்கவந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ரஜினி தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார், நடிகை த்ரிஷா. இப்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் மூலம், அவரோடு இணைந்துவிட்டார், த்ரிஷா. அதுபோல, `ஐயா' படத்தில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டை நெருங்கியிருக்கும் நடிகை நயன்தாரா கமல்ஹாசன் தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்படத்தின் மூலம், `கமலுடன் இணைந்து நடிக்கவேண்டும்' என்ற நயன்தாராவின் கனவும் நனவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறது, லைக்கா நிறுவனம். 

இந்தியன் தாத்தாவை இரண்டாவது முறையாகப் பார்க்க, ரசிகர்கள் வெயிட்டிங்!