Published:Updated:

"கலை மீதான போதையும், மது மீதான பிரியமும்!" - 'மதுபானக் கடை' அய்யப்பனின் நினைவுகள்

சனா

"அய்யப்பன் இன்று இல்லை என்பதை மனசு ஏற்க மறுக்குது. அவருடைய படைப்பு `நிலம் நீர் காற்று'. கடைசியா அய்யப்பனும் அதிலேயே கலந்துட்டான்!"

"கலை மீதான போதையும், மது மீதான பிரியமும்!" - 'மதுபானக் கடை' அய்யப்பனின் நினைவுகள்
"கலை மீதான போதையும், மது மீதான பிரியமும்!" - 'மதுபானக் கடை' அய்யப்பனின் நினைவுகள்

``ஒரு தனி அறையில் எழுத்துகள் சூழ மரணித்துக் கிடந்தான் அந்தப் பேரன்பு கொண்ட படைப்பாளி, அய்யப்பன். கலை போதையும், மது போதையுமே அவன் மரணத்துக்குக் காரணம். அவன் என்றும் நம்பும் மனிதர்கள் அவனைச் சூழ மனம் நிதானம் ஆகிறது. கதை பேசினான், கவிதை பேசினான், அரசியல் பேசினான். திமிர் பிடித்த அந்தக் கலைஞனை மரணம் கொண்டு சென்றிருக்கிறது'' - வசனகர்த்தா அய்யப்பன் முகநூலில் அவருடைய நண்பர்கள் பலரும் அய்யப்பன் இறந்த துக்கத்தை வார்த்தை மாலைகளாகக் கோத்து எழுதியிருக்கின்றனர். 

இயக்குநர் சீனு ராமசாமியின் `தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர், அய்யப்பன். பிறகு, 2012-ம் ஆண்டு வெளியான `மதுபானக் கடை' படத்தில் வசனகர்த்தாவாக எல்லோரது கவனத்தையும் கவர்ந்தவர். தனது முதல் படைப்பான `நிலம் நீர் காற்று' படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். தான் சந்திக்கும் நண்பர்கள் பலரிடமும் முதல் படைப்பைப் பற்றி மூச்சு முட்டப் பேசியவர், தனது மூச்சை நிறுத்தியிருக்கிறார். 33 வயது நிரம்பிய அய்யப்பனைக் காலன் கடத்திச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் வேலையில், அய்யப்பன் குறித்து எழுத்தாளர் அஜயன் பாலாவிடம் பேசினேன். 

``அய்யப்பன் அமைதியான நபர். இயக்குநர் சொன்ன வேலையைச் சரியா முடிக்கணும் என்பதில் மட்டுமே அவரது கவனம் இருக்கும். `மதுபானக் கடை' படம் ரிலீஸான சமயத்தில் நண்பர்களுடன் பேசிக்கிட்டு இருந்தேன். அங்கே இருந்த அய்யப்பன், அவரை அறிமுகப்படுத்திக்கொண்டார். அதற்குப் பிறகு அடிக்கடி நண்பர்கள் அறையில் அவரைப் பார்த்திருக்கிறேன். நிறைய புத்தகங்கள் படிப்பார். சினிமா பற்றிய நிறைய கனவுகளுடன் வலம் வந்தார். ஆனால், எப்போவும் தன்னைப் பற்றி முழுமையாக வெளிப்படுத்திகொள்ளாத நபர். கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர். தன்னடக்கத்துடன் இருப்பார். 

அவர் தெரிஞ்சோ தெரியாமலோ... மதுப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்தார். அவரது மதுப்பிரியம் எனக்கு அதிர்ச்சியா இருந்தது. அவரைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். நல்லா வளர்ந்து வர்ற எழுத்தாளர், இயக்குநர் இப்படி வீணா போறாரேனு கவலைப்பட்டிருக்கேன். `மதுபானக் கடை' படங்கள் போல நிறைய படங்கள் அவருக்குக் கிடைத்திருந்தால், அவருடைய வாழ்க்கையில் ஒரு மாற்றம் கிடைத்திருக்கும். தீவிரமா உழைக்கக்கூடிய, நல்ல படைப்புகளைக் கொடுக்கணும்னு நினைக்கிற படைப்பாளிகளுக்கு இந்தச் சமூகம் கொடுக்கக்கூடிய பரிசு வறுமைதான். `நீ எதுக்கு நல்லா சிந்திக்கிற'னு அவருக்கு இந்தச் சமூகம் கொடுத்த தண்டனையாகத்தான், இதைப் பார்க்கிறேன். 

கிட்டத்தட்ட மூன்று வருடங்களா அவருடைய `நிலம் நீர் காற்று' படத்தை எடுத்துக்கிட்டு இருந்தார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் படத்தைப் பற்றிப் பேசுவார். இந்தப் படம் அவருடைய இண்டிபெண்டன்ட் படம்னு சொல்லலாம். ஏன்னா, அவருக்குச் சொல்லிக்கொள்ளும்படியா தயாரிப்பாளர் கிடைக்கலை. `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்துக்கு விஜய் சேதுபதி என்ற நல்ல தயாரிப்பாளர் கிடைத்ததால், சினிமா சார்ந்த படமாக அது இருந்தது. ஆனா, அய்யப்பனுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. பெரிய பின்புலம் இல்லாத காரணத்தால், பணம் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் காடு மேடாக அலைந்துகொண்டிருந்தார். 

எனக்கு அவரது இறப்புச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய அறையில் உயிர் பிரிந்திருக்கு. எனக்குத் தெரிந்தவரை, அவருக்கென்று அறைகூட கிடையாது. நண்பர்கள் அறையில் நாடோடியாகத் திரிந்தவர். சென்னையில் இப்படிப் பல உதவி இயக்குநர்கள், நல்ல படைப்பாளிகள் இருக்காங்க. அவர்களுக்கெல்லாம் பெரிய நடிகர்கள் உதவி செய்யணும். நடிக்கக்கூட வேண்டாம். சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க முன்வந்தால் போதும். விஜய் சேதுபதிக்கு பெரிய மனசு இருந்ததால, `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தைத் தயாரித்தார். ஆனா, மற்ற நடிகர்கள் தங்களுடைய படங்களில் மட்டுமே கவனம் செலுத்துறாங்க. மற்ற இயக்குநர்களைப் பண்படுத்துவதன் மூலம்தான் தமிழ்ச் சமூகத்துக்கு நல்ல படைப்பும், படைப்பாளியும் கிடைப்பார்கள். அய்யப்பன் இன்று இல்லை என்பதை மனசு ஏற்க மறுக்குது. அவருடைய படைப்பு `நிலம் நீர் காற்று'. கடைசியா அய்யப்பனும் அதிலேயே கலந்துட்டான்!" எனக் கண்ணீருடன் முடிக்கிறார், அஜயன் பாலா. 

``நாம தள்ளாடிக்கிட்டு இருந்தாதான் கவர்மென்ட்டு ஸ்டடியா இருக்கும்; நாம ஸ்டடி ஆயிட்டோம்னா, கவர்மென்ட்டு தள்ளாட ஆரம்பிச்சிடும்!" - `மதுபானக் கடை' படத்துக்காக, அய்யப்பன் எழுதிய வசனம் இது. அய்யப்பனுக்கு இரங்கல்கள்!