Published:Updated:

" 'எக்ஸ்கியூஸ் மீ பாலுமகேந்திரா' முதல்... `மூணே நாள் ஒடுற கதை சொல்லட்டுமா?' வரை... வெற்றிமாறன் ரூட்!" #HBDVetrimaran

தார்மிக் லீ
" 'எக்ஸ்கியூஸ் மீ பாலுமகேந்திரா' முதல்... `மூணே நாள் ஒடுற கதை சொல்லட்டுமா?' வரை... வெற்றிமாறன் ரூட்!" #HBDVetrimaran
" 'எக்ஸ்கியூஸ் மீ பாலுமகேந்திரா' முதல்... `மூணே நாள் ஒடுற கதை சொல்லட்டுமா?' வரை... வெற்றிமாறன் ரூட்!" #HBDVetrimaran

`இவர் விருது வாங்குகிறதுக்காகப் படம் எடுக்கிறாரா இல்லை, இவர் எடுக்கும் படங்கள் விருது வாங்குகிறதா?!' என்ற குழப்பம் ஒரு சில இயக்குநர்கள்மீது வந்தே தீரும். அந்த இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறனுக்கு நிச்சயம் ஒரு முக்கிய இடம் உண்டு. அவரது பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு! 

சைதாப்பேட்டை பக்கம் பேர்ன்பேட்டை என்ற இடத்தில் ஒண்டிக்குடித்தன ரூமிலிருந்து பள்ளிக்குப் போய் வந்த சிறுவன்தான், வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் தான் இயக்கிய படத்துக்காக விருது வாங்கினார். வெற்றியின் இந்தப் பயணத்தை ஒரு வரியில் சொல்லி முடித்துவிட்டாலும், இந்தப் பயணத்தில் பல இடையூறுகளைக் கண்டிப்பாக இவர் சந்தித்திருக்கக்கூடும். ஆரம்பத்தில் நான் வெற்றி என்று குறிப்பிட்டது பெருமையல்ல, அந்த பெருமைமிகு சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பெயர். 1999-ல் இருந்து சினிமாத் துறையில் இருந்தாலும், இத்தனை வருடங்களில் நான்கு படங்களை மட்டுமே படைத்த ஓர் இயக்குநர். தனுஷ் என்ற மனிதருக்குள் இருந்த நடிகரை வெளிக்கொண்டுவந்த பெருமை செல்வராகவனை மட்டுமல்ல, வெற்றியையும் சாரும். இவர் நினைத்திருந்தால் 2007-ல் `பொல்லாதவன்' கொடுத்த வெற்றியை வைத்துப் பல கமர்ஷியல் படங்களை எடுத்து கல்லா கட்டியிருக்க முடியும். ஆனால், சினிமாவை ஆத்மார்த்தமாக நேசித்து, தேர்ந்த படைப்பை மட்டுமே இன்று வரை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். 

`விசாரணை' படத்துக்காக வெனிஸில் இவர் விருது வாங்கிய கதையையே ஒரு படமாக எடுக்கலாம். `விசாரணை' கதையை தனுஷிடம் தயாரிக்கக் கேட்கும்போது, `தியேட்டர்ல மூணே நாள் ஓடுற ஒரு கதை இருக்கு. தயாரிக்கிறீங்களா?' எனக் கேட்டிருக்கிறார், வெற்றி. எந்தவோர் இயக்குநரும் தன் தயாரிப்பாளரிடம் இப்படிக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. என்ன செய்வது தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை இதுதான். 'வெற்றி' மீது நம்பிக்கை வைக்காத தனுஷ், வெற்றிமாறனை நம்பி படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார். `இந்தப் படம் விருது வாங்கணும்' என்ற தாரக மந்திரத்தை மட்டுமே வைத்து, `விசாரணை’ படத்தை இயக்கினார். நாடகம் எனும் கலையிலிருந்து ஆரம்பித்ததுதான் சினிமா. காலப்போக்கில் கலை என்பதை மறந்து வணிக நோக்கில் மட்டுமே இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இதைத் தகர்த்தெரிய இவரைப் போல் ஒரு சில இயக்குநர்களாலேயே முடியும். சரி நாம் வெனிஸில் `விசாரணை’ கதைக்குள் வருவோம். படமும் நல்லபடியாக எடுத்து முடிக்கப்பட்டது. வெற்றியும் வெனிஸ் புறப்பட்டுவிட்டார். 

சினிமா எனும் கலையை கொலைவெறியோடு காதலிக்கும் ஆட்கள் வெனிஸில் ஏராளம். அதனால்தான், வெனிஸ் திரைப்பட விழா என்றால் விருதைத் தாண்டிய ஓர் உணர்வு இருக்கும். அப்படித்தான் வெற்றிமாறனுக்கும். கண்ணில் தென்படும் இடமெல்லாம் சினிமாவால் சூழப்பட்டிருந்ததை வெற்றி திகைத்துப் பார்த்திருக்கிறார். ஹோட்டலுக்கு வெளியே இருந்த ஒரு சேரில் ஒரு நடிகையின் சிலை அமைக்கட்டிருந்தது. அதுதான் அந்த நடிகை கடைசியாக உட்கார்ந்து சாப்பிட்ட இடமாம். அந்தளவுக்கு கலையையும் கலைஞனையும் அடையாளம் காணும் ஊர், வெனிஸ். இப்படியோர் இடத்தில் `விசாரணை’ படத்தை எப்படி அரங்கேற்றுவது என எடிட்டர் கிஷோரோடு கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார். 

படத்தை அனுராக் காஷ்யப்பிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். படத்தைப் பார்த்த அனுராக், `இந்திய சினிமாவுக்கு ஒரு புது திரைமொழி வரப்போகுது' என்று `விசாரணை' படத்துக்கு மேலும் மரியாதை செலுத்தினார். தவிர, கேன்ஸ் பட விழாவுக்குப் படத்தின் டிவிடி-யை அனுப்பச் சொல்லியிருக்கிறார். படமும் தேர்வானது. அந்தச் செய்தி வெற்றியை வந்தடையும்போது, குடும்பத்துடன் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கேன்ஸிலிருந்து வந்த மெயிலைப் பார்த்துவிட்டு, `வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்குத் தேர்வான முதல் தமிழ் சினிமா இதாம்மா!' என்று நெகிழ்ந்துபோய் தன் மனைவியிடம் தெரிவித்திருக்கிறார், வெற்றி. வெனிஸில் படம் பார்த்த பல்வேறு இயக்குநர்கள், நடிகர்கள் அங்கு படம் பார்த்து இங்கே வந்து நெகிழ்ந்து பிரஸ் மீட் வைத்து, `விசாரணை’யின் புகழ் பாடியிருக்கிறார்கள். இதுதான், `விசாரணை’ கடந்துவந்த பாதை. வெற்றியின் வெற்றிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். 

இந்த மனிதன், இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநர் என்பது ஊரறிந்தது. அவருடனான முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது தெரியுமா. டிசம்பர் 26, 1997... சாலிகிராமத்துக்கு பெரிய பூட்ஸ், இன் பண்ணிய சட்டை, நிறைய வளர்ந்த சுருள் சுருளான முடி, லயோலா மாணவன் என்கிற பெருமிதம், சினிமா அதிகம் பார்த்ததால் எல்லாம் தெரியும் என்கிற மனோபாவம். இப்படிப் பல அம்சங்களோடு `எக்ஸ்க்யூஸ் மீ' என்று பாலு மகேந்திராவை அழைத்திருக்கிறார், வெற்றி. எதையோ வாசித்துக்கொண்டிருந்தவர், `என்ன வேணும்' என்கிற தோரணையில் இவரைப் பார்த்திருக்கிறார். `ஹலோ மிஸ்டர் பாலு மகேந்திரா. மை நேம் இஸ் வெற்றிமாறன். ஃபாதர் ராஜநாயகம் ஆஸ்க்டு டு மீட் யூ' எனச் சொல்லியிருக்கிறார். `வெளியில் போ... நாளைக்கு வா, பார்க்கலாம்' எனச் சொல்லி விரட்டியடித்திருக்கிறார். 

வெற்றியின் வெற்றிப் பயணம் இப்படித்தான் ஆரம்பித்தது. முன்பே சொன்னதுபோல, நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் படத்தை எடுப்பார், படமும் வெற்றியடையும். இப்படித்தான் `பொல்லாதவன்’ படத்தை இயக்கினார். செல்வராகவன் தாதாவாக தனுஷின் வாழ்க்கையைப் பொருத்திப் பார்த்தால், தாதாவின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு சாமான்யனாக தனுஷை நுழைத்துப் பார்த்திருப்பார் வெற்றி. `Amores perros' என்ற படம்தான், `ஆடுகளம்' படத்தின் இன்ஸ்பிரேஷன். இதை வெற்றியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் படத்தின் நாய்ச் சண்டை, இந்தப் படத்தில் சேவல் சண்டை. சிறுவயதில் வெற்றிக்குச் சேவல் வளர்த்த அனுபவம் இருந்ததால், படத்தையும் நேர்த்தியாகக் கொடுக்க முடிந்தது. சேவல் சண்டைதானே என அவ்வளவு எளிதாக அந்தப் படத்தைக் கடந்துவிட முடியாது. அதற்குள் ஒளிந்திருக்கும் அவர்களது வாழ்வியல்தான் படத்தின் வெற்றி. இப்படி தமிழ் சினிமாவை வணிகம் நோக்கி மட்டுமே நகரவிடாமல், கலையாகவே இறுக்கிப் பிடித்துக்கொண்டிருப்பது வெற்றியைப் போல் சில இயக்குநர்களே! 

பிறந்தநாள் வாழ்த்துகள் வெற்றிமாறன். பெயரில் இருக்கும் வெற்றியை வாழ்நாள் முழுக்க ருசிப்பதோடு, மேலும் ஆத்மார்த்தமான படைப்புகளையும் தமிழ் சினிமாவுக்கு வழங்க வாழ்த்துகள்!