Published:Updated:

"சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருக்கிற அனுராக், எங்க திறமையைக் கண்டுபிடிச்சார்!" - நவலட்சுமி, நவதேவி

சனா

சினிமாவுல எங்க அப்பாவுக்கு இருக்கிற நல்ல பெயரை நாங்க காப்பாத்தணும். எங்க வளர்ச்சிக்கு அப்பாவோட ஆசீர்வாதமும் அனுராக் சார் எங்கமேல வெச்சிருந்த நம்பிக்கையும் காரணம்.

"சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருக்கிற அனுராக், எங்க திறமையைக் கண்டுபிடிச்சார்!" - நவலட்சுமி, நவதேவி
"சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருக்கிற அனுராக், எங்க திறமையைக் கண்டுபிடிச்சார்!" - நவலட்சுமி, நவதேவி

"சின்ன வயசில் இருந்தே எங்களுக்கு டான்ஸ் பிடிக்கும். அப்பா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எங்களையும் கூட்டிக்கிட்டு போவார். அங்கே டான்ஸ் மூம்மென்ட்ஸ் சொல்லிக்கொடுக்கும்போதும், அப்பா ஃபைட் சீன்ஸ் சொல்லிக்கொடுக்கும்போதும் பார்த்துக்கிட்டே இருப்போம்!" - கலகலப்பாப் பேசுகிறார்கள், மறைந்த ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள்கள், நவலட்சுமி மற்றும் நவதேவி.  

''எங்க டான்ஸூக்கு டிவிதான் குரு. வீட்டுல எங்களை டிவி பார்க்கக்கூடாதுனு யாருமே கண்டிக்க மாட்டாங்க. நான், என் தங்கச்சி, அண்ணன் எல்லோரையும் முழு சுதந்திரத்தோடதான் வளர்த்தாங்க. முக்கியமா, அப்பா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக்கூட எங்களைக் கூட்டிக்கிட்டுதான் போவார். இப்போ, அவர் இறந்தும் எங்ககூடதான் இருக்கார்" என அக்கா நவலட்சுமி தழுதழுக்க, தங்கை நவதேவி தொடர்கிறார். 

''அப்பா இறந்ததுக்குப் பிறகு அம்மாதான் எங்களை நல்லவிதமா பார்த்துக்கிறாங்க. நாங்க ரெண்டுபேர் மட்டுமில்ல, எங்க அண்ணனும் நல்லா டான்ஸ் ஆடுவான். நாங்க கலந்துக்கிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அம்மாவும் தவறாம இருப்பாங்க. தவிர, வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டுவந்து ஊட்டி விடுவாங்க. நாங்க மூணு பேரும் நல்ல நிலைக்கு வருவோம்னு நம்புனாங்க!'' என்று நவதேவி முடிக்க, நவலட்சுமி தொடர்கிறார். 

''அம்மாவோட கனவை நாங்க நிறைவேத்திக்கிட்டே வர்றோம். நவதேவி காலேஜ் முடிச்சுட்டு காஸ்டியூம் டிசைனரா வொர்க் பண்றா. 'இமைக்கா நொடிகள்' படத்துக்கு நவதேவி உதவி காஸ்ட்டியூம் டிசைனர். அப்போதான் இவளுக்கு அனுராக் காஷ்யப் சாரோட அறிமுகம் கிடைச்சது!" என்று சொன்ன நவலட்சுமியை இடைமறித்துத் தொடர்கிறார், நவதேவி.  

''சினிமாவை ரசிக்கிற எல்லோருக்கும் அனுராக் சாரோட திறமை தெரியும். ஸ்பாட்ல கொஞ்சமும் தலைக்கனம் இல்லாம பழகுவார். முக்கியமா, இளம் திறமையாளர்கள் அவர் கண்ல பட்டா, அவங்க சினிமாவுல வளரணும்னு ஆசைப்படுவார். நான் காஸ்ட்டியூம் டிசைன் பண்ற விதம் அவருக்குப் பிடிக்கும். தவிர, எனக்கு டான்ஸ் திறமை இருக்கும்னும் அனுராக் சாருக்குத் தெரியும். அதனாலதான், அவருடைய 'முக்காபாஸ்' படத்துல ஒரு மான்டேஜ் பாட்டுக்கு என்னை நடன இயக்குநரா வொர்க் பண்ண சொன்னார். எனக்கே அது பெரிய சர்பிரைஸ்! 

பிறகு அவருடைய 'மன்மர்ஸியான்' படத்துல டாப்ஸிக்கு 'சங்கீத்' பாட்டு ஒன்னு டிசைன் பண்ணியிருந்தார். அதுக்கும் என்னை நடனம் அமைக்கச் சொல்லி கேட்டார். கூடுதல் சந்தோஷம் என்னன்னா, என்கூட சேர்ந்து அக்கா நவலட்சுமியும் சேர்ந்து வொர்க் பண்ணப்போகுது!" என நவதேவி முடிக்க, நவலட்சுமி தொடர்கிறார். 

"எனக்குக் கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்துல இந்தப் பாட்டுக்காக பஞ்சாப் கிளம்பிட்டேன். அனுராக் சார் என்னைப் பார்த்துட்டு விஷ் பண்னார். அவருக்கு எங்க அப்பாவைப் பற்றி நல்லா தெரிஞ்சிருக்கு. 'உங்க அப்பா பாலிவுட்ல எவ்ளோ பெரிய ஆள்னு தெரியுமா?'னு கேட்டார். அப்பாவைப் பத்தி அவர் தெரிஞ்சு வெச்சிருந்தது, எங்களுக்கு ஆச்சரியமா இருந்தது. ஏன்னா, அனுராக் சார் எங்க அப்பாகூட வொர்க் பண்ணதில்லை.  

எங்க ரெண்டுபேருக்கும் இந்தி அவ்வளவா தெரியாது. இருந்தாலும், எங்கமேல நம்பிக்கை வெச்சு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். பாலிவுட்ல மைக்கைப் பிடிச்சு, மொத்த யூனிட்டையும் ஹாண்டில் பண்ணது மறக்கமுடியாத அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த அபிஷேக் பச்சன் சாரிடமும் எங்களை அறிமுகப்படுத்தி வெச்சு, எங்க அப்பாவைப் பற்றி பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தார்'' - நவலட்சுமி சொல்லிகொண்டிருக்கும்போதே, குறுக்கிடுகிறார் நவதேவி. 

''மதிய சாப்பாட்டின்போது அனுராக் சார், அபிஷேக் சார் எல்லோரும் ஒன்னா உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். அவங்க அப்பாவைப் பற்றி பேசும்போது, எங்களுக்கு அழுகை வந்திடும். அப்போ, அனுராக் சார்தான் ஆறுதல் சொல்வார்" என்றவர், 'மன்மர்ஸியான்' படம் குறித்தும், டாப்ஸி குறித்தும் பேசினார்.

"நாங்க சொல்லிக்கொடுத்த டான்ஸ் ஸ்டெப்பை சரியா ஃபாலோ பண்ணாங்க, டாப்ஸி. படத்துல 'குந்தலி'ங்கிற பாட்டுக்குத்தான் நாங்க டான்ஸ் பண்ணியிருக்கோம். இந்தப் பாட்டு பொண்ணு, மாப்பிள்ளையைக் கிண்டல் அடிச்சுப் பாடுற விதமா இருக்கும். தமிழ்ப் படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்றதுக்கு முன்னாடியே பாலிவுட் வாய்ப்பு கிடைச்சிருக்கிறது, எங்களுக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு.  

'மன்மர்ஸியான்' படத்தோட ஆடியோ லான்ச்ல அனுராக், டாப்ஸி ரெண்டுபேரும்தான் எங்களைப் பற்றி மீடியாவுக்கு சொன்னாங்க. சினிமாவுல எங்க அப்பாவுக்கு இருக்கிற நல்ல பெயரை நாங்க காப்பாத்தணும். எங்க வளர்ச்சிக்கு அப்பாவோட ஆசீர்வாதமும் அனுராக் சார் எங்கமேல வெச்சிருந்த நம்பிக்கையும் காரணம். விஜய் சேதுபதி அண்ணா எங்க ஃபேமிலி ஃபிரெண்ட். பாலிவுட் படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ண விஷயத்தை அவர்கிட்டகூட சொல்லலை... சீக்கிரமா நேர்ல பார்த்து சொல்றதுக்காக வெயிட்டிங்!" என்கிறார்கள், நவலட்சுமி மற்றும் நவதேவி.