Published:Updated:

`கண்ணம்மா..கண்ணம்மா..' பாடிய ஜோதி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..?

வெ.வித்யா காயத்ரி

``என் பெண்ணிடம் இருக்கும் திறமையைக் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம், பெரிய மனதைரியம் வந்துச்சு. அவள் திறமையை உலகமே அங்கீகரிக்கணும்னு நினைச்சேன்."

`கண்ணம்மா..கண்ணம்மா..' பாடிய ஜோதி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..?
`கண்ணம்மா..கண்ணம்மா..' பாடிய ஜோதி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..?

`ஜோதி' என்கிற பெயரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. `றெக்கை' படத்தில் இடம்பெறும், `கண்ணம்மா... கண்ணம்மா' பாடலை ஒரு நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் பிரபலமானவர். வைரலான அந்த வீடியோவைப் பார்த்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தான் இசையமைத்து நடிக்கும் `அடங்காதே' படத்தில் பின்னணிப் பாடகியாக ஜோதியை அறிமுகப்படுத்தினார். அந்தப் பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ஜோதியின் குரல், புதிய பரிமாணத்தில் இருப்பதாகப் பலரும் பாராட்டியுள்ளனர். இப்போது, ஜோதி எப்படி இருக்கிறார். அவரின் அம்மா கலைச்செல்வியைத் தொடர்புகொண்டோம்.

``பிறந்ததிலிருந்து இப்போவரை பல கஷ்டங்களைச் சந்தித்தவள் ஜோதி. அவளை வளர்க்க ஓர் அம்மாவாக நிறைய சவால்களைச் சந்திச்சேன். பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்பட்டோம். ஆனாலும், என் பெண்ணிடம்  இருக்கும் திறமையைக் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம், பெரிய மனதைரியம் வந்துச்சு. அவள் திறமையை உலகமே அங்கீகரிக்கணும்னு நினைச்சேன். இப்போ, பி.ஏ வயலின் முதலாம் ஆண்டு படிக்கிறாள். ஹிந்துஸ்தானியும் கத்துட்டிருக்கா. கீபோர்டு, வயலின், பாட்டு என மல்டிடேலன்ட் இருக்கு. பல இடங்களிலிருந்து மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்க ஜோதியைக் கூப்பிடறாங்க. அவளுக்குப் பார்வைகுறைபாடுடன் கொஞ்சம் மூளை வளர்ச்சிக் குறைவும் இருக்கு. ஒவ்வோர் அடியையும் யோசிச்சுதான் எடுத்துவைக்கிறோம். ஒரு விஷயத்தில் செட்டாகும் வரை கொஞ்சம் கஷ்டம். செட்டாகிட்டா பக்காவாப் பண்ணுவா.

மியூசிக் டீச்சர் ட்ரெயினிங்கை ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணியாச்சு. டீன் ஏஜ் பசங்க பேசுறதைப் புரிஞ்சுட்டு ரிப்ளை பண்ண முடியாது. அதனால், குழந்தைகளுக்கு மட்டும் கிளாஸ் எடுக்கிறா. பசங்களைப் பார்த்துக்கிறதுக்காக ஒரு டீச்சர் இருப்பாங்க, அவங்க சொல்றதை வாசிச்சு பசங்களுக்குச் சொல்லிக்கொடுப்பா. இப்போதைக்கு இரண்டு பேட்ஜ் கிளாஸ் எடுக்கிறா. நிறைய மியூசிக் குழுவில் பாடும் வாய்ப்பும் வருது. மலேசியாவில் ஜோதியின் பர்ஃபார்மென்ஸ் எல்லோருக்கும் பிடிச்சுப்போச்சு. தொடர்ந்து அவங்களே டிக்கெட் புக் பண்ணி கூப்பிடறாங்க. 17 வயசு ஆகிட்டாலும் இப்பவும் குழந்தை மாதிரி இருக்கும் ஜோதியை குட்டீஸ்கள் எல்லோரும் விரும்புறாங்க. `கடுமையா உழைக்கணும்' என்பதை மட்டும் தினமும் ஜோதிக்குச் சொல்லிக்கொடுக்கிறேன்'' என்கிற கலைச்செல்வி குரலில் தாய்மையின் பெருமிதம்.

`அடங்காதே' படத்தின் பாடல் குறித்துச் சொல்லும்போது, ``ஜி.வி. பிரகாஷ் சாரின் `அடங்காதே' படத்தில், `நிலவின் நிறமும்' என்கிற பாடலைப் பாடியிருக்கா. அந்தப் பாட்டு ரொம்ப அருமையா வந்திருக்கு. அவருக்கு ஜோதியை ரொம்பப் பிடிக்கும். `இந்தப் பாட்டு அவளுக்கு ஒரு திருப்புமுனையா இருக்கும்'னு சொன்னார். ஆடியோ லான்ச் நேரத்தில், நாங்க மலேசியாவில் இருந்ததால், அந்த நிகழ்ச்சியில் கலந்துக்க முடியலை. பாட்டு வெளியானதும் இரண்டு டைரக்டர்கள் போன் பண்ணிப் பேசினாங்க. ரஹானா மேமும் சப்போர்ட்டா இருக்காங்க.

இளையராஜா சாரின் மெட்டில், 20 நிமிஷம் நான்ஸ்டாப்பா பிளே பண்ணுவா. வீட்டுல அதுக்குத் தொடர்ந்து பிராக்டிஸ் பண்ணிட்டிருக்கா. நவீந்தர் மூர்த்தி என்ற தம்பிதான் எங்களின் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தவர். அந்தத் தம்பிக்கு நன்றியைச் சொல்லிக்கிறோம். தொடர்ந்து பாடல் நிகழ்ச்சிகள், சினிமா பாடல்கள் மூலம் என் மகளின் குரல் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தணும். இதுதான் கண்ணு என் ஆசை. என் பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணும் எல்லோருக்கும் ரொம்ப நன்றி'' என நெகிழ்கிறார் அந்தத் தாய்.

``உங்க ஆசை என்ன ஜோதி?'' எனக் கேட்டால், ``உலகம் முழுக்க ஃபிளைட்ல பறக்கணும்'' எனச் சிரிக்கிறார் ஜோதி.