Published:Updated:

``ஃபேமிலிகிட்ட இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கல!" சன்னி லியோன் 

சுஜிதா சென்
``ஃபேமிலிகிட்ட இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கல!" சன்னி லியோன் 
``ஃபேமிலிகிட்ட இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கல!" சன்னி லியோன் 

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், `கரன்ஜீத் கௌர்- தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' எனும் வெப் சீரீஸில் நடித்து வருகிறார். இதன் முதல் பாகத்தை வெளியிட்ட ஜீ-5 நிறுவனம், இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளது. முதலாம் பாகத்தில் சன்னி லியோனின் பெயர் காரணம், குடும்பப் பின்னணி, அடல்ட் ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் நுழைந்தது, அதற்கான எதிர்ப்புகளை சந்தித்தது போன்ற பல்வேறான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில், சன்னி லியோனின் காதல், திருமணம், குழந்தைகள் மற்றும் இவர் செய்த சமூக சேவைகள் போன்ற சம்பவங்கள் இடம்பெறவிருக்கின்றன. இந்த வெப் சீரீஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராட்டி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வரும் 18-ம் தேதியன்று ஜீ-5 ஆப்பில் ரிலீஸாக இருக்கிறது. இது குறித்து, இன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சன்னி லியோன், இயக்குநர் ஆதித்யா பட், ஜீ-5 நிறுவனர் மணீஷ் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார், சன்னி லியோன்

``வெப் சீரீஸ் ஷூட்டிங் சமயத்துல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க?" 

``முதல்ல எனக்கு சப்போர்ட் பண்ண தமிழ் மக்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்த மாதிரியான ஒரு கதையைத் தேர்வு செஞ்சு நடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை. இதுல நடிக்கும்போதுதான் என்னோட வாழ்க்கை எவ்வளோ கஷ்டமானதா இருந்திருக்குனு தெரிய வந்துச்சு. ஒரு அடல்ட் ஃபிலிம் நடிகையாதான் என்னை எல்லோருக்கும் தெரியும். இந்த வெப் சீரீஸ் மூலமா என்னோட மறுமுகத்தை நீங்க பார்ப்பீங்க. என் வாழ்க்கையில நடந்த அழுகை, கோபம், ஏமாற்றம் மாதிரியான எல்லாவிதமான உணர்ச்சிகளையும் இன்னொரு தடவை கடந்து வந்த மாதிரி இருந்துச்சு. நான் பொதுவா எமோஷனலான ஆள் கிடையாது. இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல தினந்தினம் அழுதுருக்கேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட கணவர் வெபரைப் பார்க்கும்போதுதான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்."

``வெப் சீரீஸ் முதல் பாகத்துக்கு மக்கள்கிட்ட ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சு?"

``இதுக்கப்புறம் மக்கள் என்னைப் பார்க்கிற விதமே மாறியிருச்சுனு சொல்லலாம். `நான் உங்களோட பெரிய ஃபேன்'னு சொல்லி கேட்குறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கும். `நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, இனிமேல் வாழ்க்கையில நீங்க சந்தோஷமா இருக்கணும்'னு ரசிகர்கள் என்கிட்ட வந்து பேசுற அந்தச் சில தருணங்கள் எனக்கு முக்கியமானது. ரெண்டாவது பார்ட்டும் ரசிகர்களுக்குக் கண்டிப்பாப் பிடிக்கும்னு நெனக்கிறேன்."

``உங்க கதையை ஒரு படமாப் பண்ணாம, வெப் சீரீஸாப் பண்றதுக்கான காரணம் என்ன?"

``ஒரு படம்னா 3 மணிநேரத்துக்குள்ள நீங்க சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிடணும். அதுவே ஒரு வெப் சீரீஸா இருக்கும்போது, உங்களுக்கான நேரத்தை நீங்க முடிவு பண்ணி, டீடெயிலா எடுக்கலாம். இதுக்காக நிறைய தயாரிப்பாளர்களை நான் சந்திச்சப்போ, ஒவ்வொருத்தவங்களும் அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரி கதையை மாத்திக்கிறாங்க. ஸோ, வெப் சீரீஸ்தான் பெஸ்ட்!"

``தமிழ் சினிமா பத்தி என்ன நினைக்குறீங்க? சினிமாவுல நடிக்கிறதைப் பத்தி உங்களோட கருத்து என்ன?"

``தமிழ் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டிருக்கேன். அவங்க என்மேல அன்பும், பாசமும் அதிகமா வெச்சுருக்காங்க. `வீரமாதேவி' படத்துக்கான ஷூட்டிங் கூடிய சீக்கிரத்துல ஆரம்பிக்கப்போகுது. தமிழ் ரசிகர்கள் சீக்கிரமே என்னைத் திரையில பார்ப்பீங்க. சினிமாவுல நீடிச்சு நிலைக்குறதுக்குக் கடின உழைப்பு அவசியம்."

``பெண்களுக்கு எதிரா நடக்குற பாலியல் வன்கொடுமை பத்தி என்ன நினைக்குறீங்க?"

``எங்க போனாலும் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்யுது. நம்ம சமூகம் இது குறித்த விழிப்புஉணர்வையும், அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மக்களுக்குக் கத்துக்கொடுக்கணும். பெண்களுக்கு மட்டும் இது நடக்கலை, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. யாரையும் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை கிடையாதுங்கிறதை எல்லோரும் புரிஞ்சுக்கிட்டாலே போதும்."

``வாழ்க்கையில நீங்க பட்ட மிகப்பெரிய கஷ்டம் என்ன?"

``நான் என்ன பண்றேன், என்னோட வேலை என்னனு என் அம்மா, அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியலை. அவங்க என்மேல கோபப்பட்டாங்க. கடைசி வரைக்கும் அவங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பொண்ணுக்குக் குடும்பத்துல இருந்து கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவு எதுவும் எனக்குக் கிடைக்கலை." என்று வருத்தத்தோடு கூறினார் சன்னி லியோன்.