Published:Updated:

" 'ரிதம்'... ஒருமுறை அல்ல... ஒவ்வொரு முறையும், மெஸ்மரிக்கும் ‘தீம்தனனா’ கீதம்!" - #18yearsOfRhythm

ராம் கார்த்திகேயன் கி ர

'ரிதம்' படம் ரிலீஸாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

" 'ரிதம்'... ஒருமுறை அல்ல... ஒவ்வொரு முறையும், மெஸ்மரிக்கும் ‘தீம்தனனா’ கீதம்!" - #18yearsOfRhythm
" 'ரிதம்'... ஒருமுறை அல்ல... ஒவ்வொரு முறையும், மெஸ்மரிக்கும் ‘தீம்தனனா’ கீதம்!" - #18yearsOfRhythm

ஃபீல்குட் படங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. அதற்கு ஆரவாரமான திரைக்கதையோ, மாஸ் வசனங்களோ தேவையில்லை. எதார்த்தம்தான் அதன் அழகே!. அத்தகைய படங்கள் நம்முள் பல மாற்றங்களை உண்டு செய்யும். அது இயற்கையை ரசிக்கச் செய்யும், நம் மனதில் உள்ள வன்மத்தை நீக்கும், மனிதர்களை நேசிக்கச் செய்யும், முரட்டு சிங்கிள்களையும் காதலிக்கத் தூண்டும், நம் வாழ்க்கையை அழகாக்கும். தமிழ் சினிமாவின் சிறந்த ஃபீல்குட் படங்களை எடுத்துக்கொண்டால், அதில் நிச்சயம் 'ரிதம்' படத்திற்கும் முக்கிய இடமுண்டு! இப்படத்திற்கு இன்று 18-வது பிறந்தநாள். 

யாரேனும் எங்கேயேனும் உறவுகளை இழந்துகொண்டுதான் இருக்கிறோம். அதுவே நம் வாழ்கையின் முற்றுப்புள்ளி என்று நினைத்து சிலர் குட்டை நீரைப்போல் அங்கேயே தேங்கி இருந்திருப்போம். அந்த முற்றுப்புள்ளிக்குப் பக்கத்தில் மீண்டும் சில புள்ளிகளாய் பல மனிதர்கள் வந்து வாழ்க்கையை தொடரச் செய்வார்கள் என்ற பாசிட்டிவ் சிந்தனையை நம் மனதில் புகுத்தும் படம், 'ரிதம்'.

ஒரு ரயில் பயணத்தில் எதிர்பாராதவிதமாக தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த இரு நபர்கள் சந்தித்து, அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மென்மையாகவும், எதார்த்தமான காட்சிகள் மூலமாகவும் சொல்வதுதான், 'ரிதம்' படத்தின் கதை.

இப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால், 'தீம்தனனா தீம்தனனா...' பாட்டு வருமே அந்தப் படம்தானே? என்று சொல்லும் அளவுக்குப் படத்திற்கு பாடல்களும் பின்னணி இசையும் உயிர் நாடியாக அமைந்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மெய்சிலிர்க்கும் இசையில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் மையமாகக் கொண்டு உருவான பாடல்கள் நம் ஐம்புலன்களையும் கட்டிப்போட்டு இன்றும் நம் பிளே லிஸ்டில் நீங்காமல் ஒலித்துகொண்டிருகின்றது. பெண்கள் தினம் என்றாலே சமூக வலைதளங்களில் ‘நதியே நதியே’ பாடலோ, அதன் வரிகளையோ கடக்காமல் போய்விட முடியாது. 'காதலியின் அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில், நீரின் அருமை அறிவாய் கோடையிலே..' என்ற வைரமுத்துவின் வரிகளுடன், ரஹ்மானின் இசை சேரும்போது காதுகளுக்கு அமிர்தம்!. அதன் விஷூவல் ரசனையின் உச்சம். பின்னணி இசையிலும் பின்னியெடுத்திருப்பார், ரஹ்மான். 'ரிதம்' படத்தின் காட்சிகளை மனதில் ஓட்டிப் பார்த்தால், கூடவே அதன் பின்னணி இசையும் சேர்ந்தே ஒலிக்கும். 

இப்படத்தின் தனித்தன்மையே காதலைக் கையாண்ட விதம்தான். கதாநாயகியின் அழகை வர்ணிக்கும் வசனங்கள் இல்லை, வெளிநாட்டில் டூயட் பாடவில்லை. இன்னும் சொல்லப்போனால் காதலை இருவரும் பரஸ்பரம் சொல்லிக்கொண்டதுகூட இல்லை. இவையெல்லாம் இல்லாமலேயே கார்த்திக் - சித்ரா இடையில் மலரும் காதலைப் பார்வையாளர்களான நமக்கு உணரச் செய்திருப்பார், இயக்குநர் வஸந்த். முதலில் சித்ரா - கார்த்திக்கிடம் காட்டும் தயக்கம், பின் பல சந்திப்புகள் கடந்து மெதுவாக அவர்களின் உறவு அடுத்த பரிமாணங்களுக்குச் செல்வதை ஒரு கவிதையாகக் காட்சிப்படுத்திய விதம்... வாவ்! 

தான் ஒரு 'ஆக்ஷன் கிங்' என்று சொல்லிக்கொள்வதற்குப் பல படங்கள் அர்ஜுனுக்கு இருந்தாலும், தேர்ந்த நடிகர் என்பதற்கு இந்த ஒரு படம் போதுமானது. சித்ராவின் வளர்ப்பு மகனுடன் மழையில் ஆனந்தம் பாடும் காட்சியில் 'ஆகஷன் கிங்' கியூட்னஸ் கிங்காக மாறி, எல்லோரையும் ரசிக்க செய்திருப்பார். முந்தைய படங்களின் பிம்பங்கள் அனைத்தையும் தூக்கி எறியச்செய்து கார்த்திகேயனாக நம் மனதில் பதிந்து போய்விடுகிறார். ப்ளீஸ்... இதுமாதிரி நிறைய படங்கள் பண்ணுங்க, அர்ஜூன். அதிகம் பேசாமல் கண்களாலேயே பாதி செய்தியை சொல்லிவிடும் பெண்ணாக மீனா. 'சித்ரா'வாக அப்படி பொருந்திப்போகிறார். மும்பையில் குண்டு வெடிப்பு என்ற செய்தியைக் கேட்டவுடன், பதறியடித்து கார்த்திகேயன் பணிபுரியும் இடத்திற்கு போன் செய்து, அவர் ‘சேஃப்’ என்ற செய்தியைக் கேட்டதும் படும் நிம்மதியை அத்தனை அழகாகக் கண்களாலேயே வெளிக்கொண்டு வந்திருப்பார். 

பிளாஷ்பேக்கில் வரும் ரமேஷ் அரவிந்த், ஜோதிகா கதாபாத்திரங்கள் ஹைக்கூ கவிதைகள்போல மனதில் ஈரமாகப் பதிந்துவிடுகின்றன. மகன் மறுமணம் செய்ய ஆசைப்படும் நாகேஷ் மற்றும் அவரது மனைவி, அக்ரஹாரத்துப் பெண்மணியைக் கச்சிதமாக வெளிக்கொண்டுவந்த லக்ஷ்மி.. அனைவரும் இயல்பான நடிப்பைத் தந்து படத்திற்கும் நமக்கும் உள்ள இடைவெளியை உடைத்துப் படத்துடன் ஒன்றச் செய்தார்கள். 

"நீங்க மேல வரும்போதாவது கார்த்திக் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்ங்கிற நல்ல செய்தியோட வாங்க” என்று கார்த்திக்கின் அம்மா அந்தத் துயர நேரத்திலும் சொல்லும் இடம், நம் மனதையும் கரைத்து விடும். நாகேஷும் அவர் மனைவியும் வெறுமையைத் தங்கள் உரையாடல்களால் விரட்டும் காட்சிகள் அத்தனை க்யூட்!

“நான் இப்போ சொல்ற செய்தியைக் கேட்டு உன்னோட அந்த ரெண்டு முண்டக் கண்ணு பெருசா ஆகுறதைப் பார்க்க முடியாதுங்கிற வருத்தம்தான் இருக்கு” போன்ற வசனங்கள் கவிதை.

'ரிதம்' நல்ல மனிதர்களின் கதை. நாம் அன்றாடம் வாழ்கையில் சந்திக்க ஆசைப்படும் கதாபாத்திரங்களாக சூழ்ந்திருக்கும். கார்த்திக் சார் வரப்போகிறார் என்று வீட்டை அலங்காரப்படுத்தும் சிவா, காதலை ஏற்க மறுத்தவர், முதுமையின் தனிமையில் அடைக்கலம் தேடி வந்தவரை முகம் சுளிக்காமல் ஆழ்ந்து அணைக்கும் சித்ரா, அம்மாவை சமையலறையில் நுழையவிடாமல் பார்த்துக்கொள்ளும் கார்த்திக்... எனப் படம் முழுக்க அன்பும் நேசமும் நதிபோல் வழிந்தோடும். படம் பார்த்து முடித்த பிறகு, மனதில் உள்ள பாரம் குறைந்த உணர்வும், இதழின் ஓரம் மென்சிரிப்பு வரும். இது ஒரு முறை மட்டுமல்ல, படம் பார்க்கும் ஒவ்வொருமுறையும் வரும்... அதுதான் 'ரிதத்'தின் கீதம்! ஆம், 'ரிதம்' நம் மனதின் நாடி.