Published:Updated:

ரஜினி முதல் விஜய் வரை... ஹீரோ, வில்லனாகக் கலக்கிய படங்கள்..!

ப.தினேஷ்குமார்
ரஜினி முதல் விஜய் வரை... ஹீரோ, வில்லனாகக் கலக்கிய படங்கள்..!
ரஜினி முதல் விஜய் வரை... ஹீரோ, வில்லனாகக் கலக்கிய படங்கள்..!

சினிமாவை ரசிக்கும் அனைவருக்கும் ஹீரோ கதாபாத்திரம் நிச்சயம் பிடிக்கும். ஆனால், யாரும் மறக்க முடியாத பாத்திரம் வில்லனுடையது. அதனால்தான் படம் முடிந்த பின்பும் நம் மனதில் அவர்கள் தந்த தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் நாயகனை விட வில்லன் பாத்திரங்கள் வலுவாக அமைந்து விடுவதுண்டு. எனவே, அத்தகைய பாத்திரங்களை வேறு ஒரு நடிகர் செய்வதை விட சில சமயம் கதாநாயகர்களே அந்த வேடங்களை ஏற்கிறார்கள். அப்படி ரஜினி முதல் விஜய் வரை ஒரே நடிகரே ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்த படங்களின் லிஸ்ட்டு இதோ...

எந்திரன்:

விஞ்ஞானி ரஜினி உருவாக்கும் `சிட்டி' ரோபோவுக்கு, ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராய் மீது காதல் வருகிறது. இயந்திர-மனித வித்தியாசங்களைக் கடந்து ஐஸ்வர்யாவை அடைய, எந்த எல்லை வரை அந்த ரோபோ செல்கிறது என்னும் ஒற்றைவரியில் அடக்கக்கூடிய கதைதான். ஆனால், தொழில்நுட்ப நேர்த்தியில் ஒரு தமிழ்த் திரைப்படத்தை சர்வதேசத் தளத்துக்குள் அழைத்துச் சென்றது இந்த எந்திரன்.
ஓப்பனிங் பாடல், இன்ட்ரோ பில்டப்ஸ், பன்ச் டயலாக், பறந்து பறந்து அடிப்பது, காலைச் சுற்றும் காதலி என எதுவும் இல்லாமல், புது ரஜினி படமாக வந்தது `எந்திரன்'. படம் முழுக்கத் தெரியும் பிரமாண்டத்தில், நம்மையும் பாத்திரங்களோடு ஒருவராக்கி, `எந்திரன்’ மூலம் எந்திர   உலகில் உலவவிட்டார் இயக்குநர் ஷங்கர். 

வாலி:

தேவாவும் சிவாவும் இரட்டைச் சகோதரர்கள். இந்நிலையில், தனது தம்பி காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியா மீது தேவாவும் ஆசைகொள்கிறார். ஒருகட்டத்தில், தான்தான் சிவா எனப் பிரியாவை நம்பவைத்து தேன்நிலவுக்கு அழைத்துச் செல்கிறான் தேவா. அதன்பிறகு நடப்பதெல்லாம் `திடுக், திடுக்' காட்சிகளாக வாலியில் நிறைந்திருக்கும்.

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சவாலான கதாபாத்திரத்தில் `தேவா' வாக அஜித் மிரட்டியிருப்பார். இராமாயணத்தில் வரும் சுக்ரீவனின் சகோதரனான வாலியின் கதையை நிகழ்காலத்திற்கு ஏற்றதுபோல மாற்றி, அதில் `அட' போட வைக்கும் சுவாரஸ்யமான காட்சிகளால் நகர்த்தியிருந்தார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா 

வரலாறு:

வீல் சேரில் வாழும் பணக்கார அப்பா அஜீத்துக்கு செம ஜாலி மகனாக இன்னொரு அஜீத். அசினிடம் அஜீத் காதலாகி, நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆனால், அதன்பிறகு மகன் அஜீத்தால் பல பகீர் காரியங்கள் அரங்கேற மகனுக்கு மனநோயாக இருக்குமோ என மருத்துவமனையில் சேர்க்கிறார் அப்பா. ஷாக் ட்ரீட்மென்ட் வாங்கி அஜீத் துடிக்கிறபோது, என்ட்ரி ஆகிறார் மூன்றாம் அஜீத். எதற்காக இத்தனை குழப்பங்கள். அந்தக் குழப்ப முடிச்சுகளுக்குப் பதில் சொல்வதுதான் இந்தத் தல `வரலாறு' .

படத்தின் ஆரம்பத்தில் மெதுவாக நகரும் காட்சிகள், மூன்று அஜீத்களும் வந்த பிறகு ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்துவிடும். வழக்கமான அப்பா- மகன் கதைதான் என்றாலும், சொன்ன விதத்தாலும், தனது தடதட திரைக்கதையாலும் படத்தைப் பரபரப்பாகக் கொண்டு சென்றிருப்பார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

 24:

கைகளில் கட்டக்கூடிய கால கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி சேதுராமன். ஆனால், அந்தக் கடிகாரத்தை அடைய  நினைக்கிறார் தம்பி ஆத்ரேயா. அந்த முயற்சியில் சேதுவும் அவரது மனைவியும் இறந்து விட மகன் சூர்யா மட்டும் சரண்யாவோடு சென்னைக்குத் தப்புகிறார். 26 வருடங்கள் கழித்து மகன் சூர்யாவுக்கு அந்தக் கடிகாரம் கிடைக்க, மீண்டும் கால கடிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார் ஆத்ரேயா. காலமும் கடிகாரமும் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் இந்த `24'.

முதல்முறையாக மூன்று முகம் காட்டிய சூர்யா, ஆத்ரேயா கதாபாத்திரத்தில் வில்லனாக நம்மை ஆச்சர்யப்படுத்தவும் தவறவில்லை. அறிவியல் சார்ந்த திரைப்படம் என்பதால், தேவையில்லாத எந்தக் காட்சியையும் காட்டி நேரத்தை வீணாக்காமல் முதல் காட்சியிலிருந்து நேர்த்தியாகப் படத்தை இயக்கிருப்பார் இயக்குநர் விக்ரம்.கே.குமார் 

ஆதிபகவன்:

தாய்லாந்தின் மிகப்பெரிய டானாக வரும் ஆதி, தனது காதலி நீத்து சந்திராவின் தந்தையைக் காண்பதற்காக மும்பை வருகிறார். அப்போதுதான் தெரிகிறது நீத்து சந்திரா ஆதியைத் தந்தையிடம் காட்ட அழைத்துச் செல்லவில்லை, கொலை செய்ய என்று. அங்கே கொடூர தாதாவாக இருக்கும் பகவான் என்று நினைத்து ஆதியைப் போட்டுத் தள்ள போலீஸ், தாதாக்கள் எனப் பெரிய கூட்டமே தேட, அதிலிருந்தெல்லாம் எப்படி ஆதி தப்பிக்கிறார் என்பதைச் சொன்னது இந்த அமீரின் ஆதிபகவன்.

ஆதி, பகவான் என இரண்டு பாத்திரங்களில் வித்தியாசம் காட்ட நிறையவே மெனக்கெட்டிருப்பார் `ஜெயம்’ ரவி. கனத்த மீசையும் கம்பீர நடையுமாக வரும் ஆதியைக் காட்டிலும் லிப்ஸ்டிக் பூசி, நெளிந்து நடந்து வெட்கப்படும் மும்பை பகவானாக `ஸ்கோர்' செய்திருப்பார் ஜெயம் ரவி. அமீர் இயக்கத்தில் பருத்திவீரனுக்குப் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து வெளியானது இந்த ஆதிபகவன். 

சிங்கம்புலி:

ஒரே குடும்பத்தில் பிறந்த இரட்டை வாரிசுகள் சிவாவும், அசோக்கும். அசோக்கால் அவனது காதலி இறந்து விட, தம்பி என்றும் பாராமல்  அசோக்கை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார் சிவா. தான் வாதாடப்போகும் கோர்ட்டிலேயே தன்னைக் குற்றவாளியாக நிறுத்தும் அண்ணணைப் பழிவாங்கத் துடிக்கிறார் அசோக். படத்தின் இறுதியில், இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்த `சிங்கம்புலி'.

அண்ணன் ஜீவாவுக்குத் தம்பி மீது கோபமும், பாசமும் ஒருங்கே பொங்கும் காட்சிகளில் `சிவா'வாகவும், சொந்த அண்ணனிடமே உள்ளுக்குள் விஷமத்தையும், வில்லத்தனத்தையும் வைத்துக்கொண்டு வெளியில் இனிக்க இனிக்கப் பேசும் `அசோக்'காகவும் `டபுள் தமாக்கா' ரோலுக்குச் சரியான நியாயம் செய்தார் ஜீவா. ஆள்மாறாட்ட கதை அப்படி, இப்படி என்று எடுக்காமல், கொஞ்சம் புதுமையாக ஒரே வீட்டில் எதிரும், புதிருமாக இருக்கும் இரட்டைச் சகோதரர்களின் கதையாக 'சிங்கம்புலி'யைத் தந்தார் இயக்குநர் சாய்ரமணி. 

சண்டமாருதம்:

கல்வித் தந்தை என்ற போர்வையில் நிழல் உலகில் சர்வ வல்லமை படைத்தவராக இருக்கும் வில்லன் சர்வேஸ்வரன், நாடு முழுக்க 101 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறார். சர்வேஸ்வரனின் இந்தத் திட்டத்தை முறியடிக்கக் கிளம்புகிறார் ரகசிய போலீஸாக இருக்கும் நாயகன் சூர்யா. வில்லன், நாயகன் ஆகிய இரு தரப்புக்கும் இடையில் நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்த சரத்குமாரின் `சண்டமாருதம்'. 

என்கவுன்ட்டர் போலீஸ் ஆபீஸராக சூர்யா செய்யும் சாகசங்கள் அதிரடி என்றால், அண்டர்கிரவுண்ட் தாதாவாக வில்லன் சர்வேஸ்வரனின் கெட்டப்பும், பில்டப்பும் சரவெடி. அதேநேரம், இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பத்துடன் `சண்டமாருதம்' என்னும் டைட்டிலுக்கு ஏற்ப சண்டைக்காட்சிகளும் மிகப்பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கும். 

அமைதிப்படை:

காதலிப்பது போல நடித்து, தன்னுடைய காதலி தாயம்மாவுக்கு வயிற்றில் பிள்ளையைத் தந்துவிட்டு, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார் எம்.எல்.ஏ அமாவாசை. தனது தாய்க்கு துரோகம் செய்த தந்தையைப் பழிவாங்கும் மகனின் கதைதான் இந்த `அமைதிப்படை'. 

காலம் கடந்தும் கொண்டாடும் சத்யராஜ் - மணிவண்ணனின் கூட்டணியில் உருவான `அமைதிப்படை’ சமகால அரசியலை நையாண்டி செய்யும் வேலையைச் சரியாகச் செய்தது. அமாவாசை கதாபாத்திரத்தைப் பார்த்து விட்டு சத்யராஜுக்கு இப்படியும் ஒரு முகம் உண்டா என்று கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். மணிவண்ணனுடைய மிகப்பெரிய வெற்றிப்படம் என்னும் மைல்கல்லைத் தொட்டது இந்த அமைதிப்படை. 

ஆளவந்தான்:

குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளின் விளைவு, குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்ற ஒன்லைனுடன் மாறுபட்ட திரைக்கதையைக் கொண்ட படம் `ஆளவந்தான்’. இரண்டு கமலில் ஒருவர் கமேண்டோ, மற்றொருவர் சைக்கோ. 

1984ல் தான் எழுதிய ``தாயம்” என்ற கதையை மையமாகக் கொண்டு, படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் மூன்றையும் கமலே பார்த்துக் கொண்டார். ஆசியாவிலேயே, `ஆளவந்தான்’ திரைப்படத்தில்தான் முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவைப்  பயன்படுத்தினார்கள். படம் வெளியான சமயத்தில் மக்கள் தகுந்த வரவேற்பு தரவில்லை என்றாலும் கூட, கமல்ஹாசனின் ஆகச்சிறந்த பத்துப் படங்களில் சர்வ நிச்சயமாக ஆளவந்தானும் அடங்கும். 

தசாவதாரம்:

அமெரிக்க விஞ்ஞானி கோவிந்த் கண்டுபிடித்த உயிர்க்கொல்லிக் கிருமியைக் கவர்ந்து தீவிரவாதிகளிடம் விற்க, அமெரிக்க வில்லன்  ஃப்ளெட்சர் துரத்தி வருகிறார். இவர்களுக்கிடையிலான கண்ணாமூச்சி விளையாட்டின்போது பல கமல்கள் வந்துபோக, இறுதியில் வருகிறது `சுனாமி'. பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட சுனாமியை இப்படி ஒரு கோணத்தில் அணுகலாம் என்ற ஒரு புள்ளிதான் கமல் எடுத்த இந்த `தசாவதாரம்'. 

நம்பியின் மிரட்டும் நடிப்பு, பல்ராம் நாயுடுவின் அசட்டு நகைச்சுவை, மிக முக்கியமாக வின்சென்ட் பூவராகன் எனப் படம் முழுக்க கமல்கள் இருந்தாலும் வெரைட்டியில் வெளுத்தெடுத்தது `ஃப்ளெட்சர்' கமல்தான்! பத்து கதாபாத்திரங்களில் நடித்தது மட்டுமன்றி அந்தப் பத்து கதாபாத்திரங்களுக்கும் விதவிதமான குரல் மாற்றம் என தசாவதாரத்துக்காக கமல் கொடுத்த உழைப்பு, காலம் கடந்து நிற்கும் பிரமிப்பு. 

அழகிய தமிழ் மகன்:

எதிர்காலத்தை அறியும் சக்திகொண்ட குரு, தனது காதலி ஸ்ரேயாவுக்குத் தன்னாலேயே ஆபத்து இருப்பதை உணர்ந்ததும், அதிர்ச்சியாகி அவரிடமிருந்து விலகுகிறார். அவர் இடத்தில் அதகளமாக நுழைகிறார் வில்லன் பிரசாத். வாழ்க்கையைக் குறுக்கு வழியில் அனுபவிக்கத் துடிக்கிற பிரசாத், ஸ்ரேயாவின் பணத்துக்காக குரு வேஷம் கட்டுகிறார். இறுதியில், பிரசாத் திருந்திவிட குருவும் அவனது காதலியும் இணைந்துவிடுகிறார்கள். இது விஜய் நடித்த முதல் டபுள் ஆக்‌ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.