Published:Updated:

``ஷான் ரோல்டன் மாதிரியான இளிச்சவாயனை நீங்க பார்க்க முடியாது!’’ - தனுஷ்

உ. சுதர்சன் காந்தி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யச் சம்பவங்களின் தொகுப்பு.

``ஷான் ரோல்டன் மாதிரியான இளிச்சவாயனை நீங்க பார்க்க முடியாது!’’ - தனுஷ்
``ஷான் ரோல்டன் மாதிரியான இளிச்சவாயனை நீங்க பார்க்க முடியாது!’’ - தனுஷ்

`வாயை மூடி பேசவும்', `ஜோக்கர்', `முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன், மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி அசத்தியுள்ளார். `அடியே அழகே' (ஒருநாள் கூத்து), `வா மச்சானே...' (இறுதிச்சுற்று), `கண்ணானக் கண்ணே...' (நானும் ரெளடிதான்) எனப் பல பாடல்கள் நல்ல உதாரணம். நேற்று முன்தினம் இவரது மியூசிக் கான்சர்ட் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. 4 மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யங்கள் இதோ...


அரங்கம் முழுக்க இசை ரசிகர்கள் நிரம்பத் தொடங்கினர். அட்டகாசமான லைட்டிங், அற்புதமான பேக்ரவுண்டு இசைக் கருவிகள் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ``இவரோட `முண்டாசுபட்டி' ஆல்பம் கேட்டிருக்கியா?', `அதைவிட அவர் இண்டிபெண்டென்ட் சாங்ஸ் கேட்டுப்பார். உனக்கு ரொம்பப் பிடிக்கும்', அந்தப் பாட்டுல ஒரு பீட் வரும்பாரு..." என ஷான் ரோல்டனின் ஃபிளேஷ்பேக்குகளை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள், இசை ரசிகர்கள். அவர்களின் உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே, `காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு' என மாஸ் என்ட்ரி கொடுத்தார், ஷான். அந்தப் பாடலை பாடிக்கொண்டிருக்கும்போது மிர்ச்சி சிவாவும், ஆர்.ஜே.பாலாஜியும் அரங்கத்துக்குள் நுழைய, மேடை இன்னும் கலகலப்பானது. சினிமா பாடல்கள், தனது தனிப் பாடல்கள் என ஒவ்வொரு பாடலாகப் பாடிக்கொண்டிந்தார், ஷான் ரோல்டன். அரங்கமே அவர் இசையில் நினைந்தபடி இருந்த சமயத்தில் சலைன்ட் என்ட்ரி கொடுத்தார், தனுஷ். தனுஷ் உள்ளே நுழைந்தவுடன், `அன்பு...' எனக் குரல் கேட்க, தனுஷ் மக்களுக்கு ஒரு ஹாய் சொல்லி அமர்ந்தார். அவருடன் ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் வந்திருந்தனர்.  

ஷானின் இண்டிபெண்டென்ட் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தொகுப்பாளர் திவ்யா, மிர்ச்சி சிவாவை மேடைக்கு அழைத்தார். தனக்கும் ஷான் ரோல்டனுக்குமான நட்பு பற்றிப் பேச ஆரம்பித்த சிவா, தொடர்ந்து ``எத்தனையோ பாடல் பண்ணியிருக்கீங்க. அதுல எனக்கு ரொம்ப ஃபேவரைட் `வெண்பனி மலரே' பாட்டுதான். அதுக்காகத்தான் இங்கே வந்தேன்" என்ற சிவாவிடம், ``அதுக்குக் காரணம் தனுஷ் சார்தான்" என்று ஷான் சொல்ல, ``அது எப்படி சார் எல்லாத்துக்கும் காரணமா இருக்கீங்க?! அமெரிக்காவுல எலெக்‌ஷன் வந்தாலும், நீங்கதான் காரணமா இருப்பீங்கபோல!" என்ற சிவாவின் கவுன்டருக்கு அரங்கமே அதிர்ந்தது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் தான் பாடிய `அடியே அழகே...' பாடலை ஷான் பாடத் தொடங்கிய அடுத்த நொடி, அரங்கமே அமைதியாகி அவரது இசையை ரசித்தது.

அடுத்ததாக மேடை ஏறிய பிரசன்னா, ``தனுஷ் சாரும் ஷானும் பேசிக்கிறதை ரசிக்க மட்டும்தான் முடியும். மியூசிக்கலி ஆப்ல எல்லோரும் பாட்டுதான் பாடுவாங்க. இவங்க மியூசிக்கலியில பேசிக்குவாங்க. அது ரொம்ப அழகா இருக்கும். இந்தக் குரலை வெச்சுக்கிட்டு எப்படிப் பாடுறனு நான் கேட்டிருக்கேன். எப்போதும் தொண்டை கட்டுனா மாதிரியே இருக்கும். ஆனா, பாடுறதைக் கேட்கும்போது அவ்வளவு அருமையா இருக்கும். `ப.பாண்டி' படத்துல தனுஷ் - ஷான் காம்போவைப் பார்த்தாச்சு, ரசிச்சாச்சு. இப்போ இதே காம்போவுல இன்னொரு படம் ரெடியாகிட்டு இருக்கு. அதுல மூணு பாட்டை நான் கேட்டேன். எல்லாமே அமேஸிங். நீங்க கம்போஸ் பண்ணிப் பாட்டு பாடி, அதுல நான் ஹீரோவா நடிக்கணும்னு ஆசைப்படுறேன். எனக்கும் ஷானுக்கு இருக்கிற ஒற்றுமை என்னன்னா, ரெண்டுபேருமே இளையராஜா சார் பைத்தியம்." என்றார். 


அடுத்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ``மூணு வருடத்துக்கு முன்னாடி ஷான் பண்ண கான்சர்ட்ல கலந்துக்கிட்டேன். அப்புறம், அவர் எங்கெல்லாம் இசை நிகழ்ச்சி பண்றாரோ, அங்கெல்லாம் நான் இருப்பேன். காரணம், நான் ஷான் ரோல்டன் ரசிகன். ரெண்டுபேரும் ராஜா சார் பைத்தியம்னு பிரசன்னா சொன்னமாதிரி, எனக்கு ஷானுக்கு இருக்க ஒற்றுமை என்னன்னா, நாங்க ரெண்டுபேரும் பேஸிக்காவே பைத்தியங்க. இந்தச் சின்ன வயசுல இவருக்கு ரொம்பத் திறமை. நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, இவரைக்கூட கல்யாணம் பண்ணியிருப்பேன். பாட வெச்சு கேட்டுக்கிட்டே இருக்கலாம்" என்றவரிடம், திவ்யா கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க, ``வேற யார் பேசினாலும் என்னடா பேசிக்கிட்டே இருக்காங்க. பாட்டு கேட்கத்தானே வந்தோம்னு தோணுச்சு. நானும் பேசிக்கிட்டே இருந்தா நல்லாயிருக்காது. கிளம்புறேன்" என்று விடைபெற்றார். 

ரசிகர்களின் ஆரவாரத்தோடு, `வெண்பனி மலரே...' பாடலைப் பாடி முடித்தவுடன் தனுஷை மேடைக்கு அழைத்தார், ஷான் ரோல்டன். ``தனுஷ் ரொம்ப எனர்ஜியான நபர். நமக்கும் அந்த எனர்ஜியைக் கொடுத்துக்கிட்டே இருப்பார். பாடும்போது என் வாய்ஸ் உங்க வாய்ஸ் மாதிரியே இருக்குனு சொல்வாங்க. இப்போ நீங்க எனக்காக ஒரு பாட்டு பாடணும்." என்றதும், கூட்டத்திலிருந்து `தென்றல் வந்து...', `பார்த்தேன்...', `தென்பாண்டிச் சீமையிலே' எனப் பல பாடல்களின் கோரிக்கைகள். முதலில் தயங்கிய தனுஷ், `ரெண்டுபேரும் சேர்ந்து பாடலாம்' என்று ஷான் சொன்னவுடன, பாடலுக்குத் தயாரானார். `வெண்பனி மலரே...' பாடலைத் தொடர்ந்து, `தென்பாண்டிச் சீமையிலே' பாடலைப் பாடினார். பிறகு, `பாலாஜி, ரெண்டு நிமிடம் பேசிக்கிறேன்' என்று ஆரம்பித்த தனுஷ், ``ஷான் பிரமாதமான இசைக் கலைஞர். அது நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதை விட்டுடுவோம். ஷான் ஒரு அற்புதமான பிறவி. நல்லதைக்கூட கெட்டதா பார்க்கிற உலகத்துல, கெட்டதையும் நல்லதா பார்க்கிற இளிச்சவாயன். எத்தனைபேர்கிட்ட இந்தத் தகுதி இருக்கும்னு தெரியலை. ரொம்ப நாளைக்கு அப்படியே இருந்தா ஏமாத்திடுவாங்க. உங்க மியூசிக் மாதிரியே உங்க மனசையும் மாசுபடாமா பத்திரமா அப்படியே பார்த்துக்கோங்க. உங்களுடைய எண்ணம் மாதிரியே உங்க வாழ்க்கையையும் சிறப்பா அமைய ஆண்டவனை வேண்டிக்கிறேன். ஆல் தி பெஸ்ட் ஷான்." என்று முடித்தார்.  

``என் மியூசிக்கை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோன படம், `ஜோக்கர்'. சமுதாயத்துக்குத் தேவையான படம் பண்ணணும்னு அலைஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்போதான் ராஜு முருகன் சார் இந்த வாய்ப்பைக் கொடுத்தார். கூத்துக் கலைக்குப் பாடுற சில பாடகர்களை வெச்சு `என்னங்க சார் உங்க சட்டம்?' பாடலை உருவாக்கினோம்." என்று சொல்லி, அந்தப் பாடலைப் பாடிய ஷான், இந்தப் படத்தில் இடம்பெற்ற `ஜாஸ்மினு' பாடலுக்காக தேசிய விருது வென்ற பாடகர் சுந்தர் ஐயரை அழைத்தார். `ஜாஸ்மினு' பாடலுக்குக் காரணமாக இருந்த சுந்தர் ஐயரின் வேறொரு பாடலைப் பற்றிப் பேசிய ஷான், அந்தப் பாடலைப் பாடச் சொன்னார். ``தேசிய விருது வாங்கிய பிறகு என் செல்லெல்லாம் செத்துப்போய் இருந்தது. இப்போ, அதுக்கெல்லாம் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கார், ஷான் ரோல்டன். நிறைய பாடல்களைப் பாட ஆரம்பிச்சிருக்கேன். எனக்கு ஆதரவா இருந்த எல்லோருக்கும் நன்றி." என்று நெகிழ்ந்தார், சுந்தர் ஐயர். பிறகு, இருவரும் இணந்து `ஐ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு' பாடலைப் பாடினார்கள்.  

`எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலுக்கு ஆலாப் ராஜு வாசிக்க, ஷான் ரோல்டன் பாடினார். ``மத்தவங்க இசையில நான் பாடுற முதல் ஷோ இதுதான். அது இனிமே தொடரும்." என்றார் ஷான். இளையராஜா இசையில் உருவான `கோடைக்கால காற்றே', ஏ.ஆர்.ரஹ்மானின் `பச்சை நிறமே' உள்ளிட்ட பாடல்களை ஷான் ரோல்டனும், ஆலாப் ராஜுவும் இணைந்து பாடினார்கள். சந்தோஷ் நாராயணின் `வா மச்சானே...' பாடலைப் பாடும்போது, அரங்கமே ஆர்ப்பரித்தது. ``எப்போவும் இந்தப் பாடலைப் பாடித்தான் நிகழ்ச்சியை முடிப்போம். இந்த முறையும் அப்படியே பண்ணிடலாம்." என்று `விடுதலை வேணுமா ஒரு முட்டாளா இரு...' என்ற பாடலுடன் தன் இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார், ஷான் ரோல்டன். இந்நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், கோவிந்த் வசந்தா, பாடகர் உன்னி மேனன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த இசை நிகழ்ச்சி, தீபாவளி தினத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.