Published:Updated:

"என் படம் சூப்பர் ஹிட்டாகும்னு சொன்னதில்லை; இப்போ சொல்லத் தோணுது!" - ‘சர்ச்சை’ சமயங்களில் விஜய் #SarkarVijay

ப.தினேஷ்குமார்

விஜய் படங்கள் இதுவரைச் சந்தித்த பிரச்னைகள் குறித்த கட்டுரை.

"என் படம் சூப்பர் ஹிட்டாகும்னு சொன்னதில்லை; இப்போ சொல்லத் தோணுது!" - ‘சர்ச்சை’ சமயங்களில் விஜய்  #SarkarVijay
"என் படம் சூப்பர் ஹிட்டாகும்னு சொன்னதில்லை; இப்போ சொல்லத் தோணுது!" - ‘சர்ச்சை’ சமயங்களில் விஜய் #SarkarVijay

விஜய், நடிகராக இருந்தவரை ரசிகர்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, செல்லப்பிள்ளையாக இருந்தார். ஆனால், அவருக்குள் அரசியல் ஆசை வந்த பிறகு, அப்போதிலிருந்து அவர் படங்களுக்குச் சிக்கல் ஆரம்பித்தது. `காவலன்’ முதல் `சர்கார்’ வரை விஜய் படத்துக்குப் பல தடைகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து நிகழ்கின்றன. இதோ, ஒரு ரீவைண்ட். 

புதிய கீதை: 

விஜய் படங்களின் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டது, `புதிய கீதை' படம்தான். கீதை எனப் படத்துக்குப் பெயர் வைக்க, இந்து அமைப்பினர் பிரச்னை செய்ய, படத்துக்குப் புதிய கீதை எனப் பெயர் மாற்றினார்கள். 

காவலன்:

`தனது முந்தைய படங்களின் நஷ்டத்துக்கான தொகையை விஜய் தந்தால்தான், படத்தை ரிலீஸ் செய்வோம். இல்லாவிட்டால் அந்தப் படத்துக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம்' எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து பிரச்னையைத் தொடங்கி வைத்ததுதான் தாமதம். தொடர்ந்து, ஃபைனான்ஸ் பிரச்னை, தியேட்டர் பிரச்னை, தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் பிரச்னை என அடுக்கடுக்காகக் `காவலனு'க்குப் பிரச்னைகள். 

அன்றைய தி.மு.க ஆட்சியில் எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபனு'க்குக் கொடுத்த நெருக்கடிக்குக் கொஞ்சமும் குறையாமல்  விஜய்யின் `காவலன்’ படத்துக்கும் நாலாப்புறமும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதற்கிடையில், திருச்சியில் இருக்கும் விஜய் ரசிகர்கள்  படம் வெளிவருவதில் குழப்பம் நீடித்ததைத் தொடர்ந்து, பஸ் கண்ணா​டிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். பவானி​யில் இருக்கும் விஜய் ரசிகர் ஒருவர் தியேட்​டர் வாசலில் தீக்குளிக்க முயன்றார். இப்படிப் பல்வேறு சச்சரவுகளில் சிக்கியது `காவலன்’. இந்தச் சர்ச்சைகளுக்கு நடுவே பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை அழைத்து, நஷ்டத் தொகையான 3 கோடிக்கு `செக்' கொடுத்தார், விஜய். 

துப்பாக்கி:

`துப்பாக்கி' போஸ்டரில் விஜய் பிடித்த சிகரெட் நிஜத்தில் பற்றி எரிந்தது. போஸ்டர் தொடங்கி டைட்டில் வரையில் `துப்பாக்கி’ படத்துக்கு அடுத்தடுத்து பிரச்னைகள். மேலும், படத்தில் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்திருப்பதாகத் தகவல் பரவியதால், பல அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

`கடுமையான முஸ்லீம் விரோதக் கருத்துகளை படம் வெளிப்படுத்தியிருக்கிறது' என மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, எஸ்.ஏ.சியிடம் தன் கண்டனத்தைப் பதிவு செய்ய, `சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுகிறேன். ஒரு சமூகத்தின் மனம் புண்படுவதை நான் விரும்பவில்லை’ என்று ஆறுதல் சொல்லி, சர்ச்சைக்குரிய காட்சிகளில் மியூட் செய்து வெளியிட ஏற்பாடு செய்தார், எஸ்.ஏ.சி.  

தலைவா:

2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தது விஜய்யின் மக்கள் இயக்கம். பிறகு, வென்ற அ.தி.மு.க-வுக்கு `அணிலாக உதவினோம்’ என்று விஜய் தரப்பு சொல்ல, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோபம். கூடவே, அந்தச் சமயத்தில் `டைம் டு லீட்’ என்ற டேக் லைனுடன்  படம் வரவே, பலத்த சர்ச்சையில் சிக்கியது `தலைவா'.  

ஆகஸ்ட் 9, படம் ரிலீஸ். ரிசர்வேஷனும் ரெடி. இந்நிலையில், 7- ம் தேதி `தமிழ் இளைஞர் மாணவர் படை’ என்ற அமைப்பு ஐநாக்ஸ், எஸ்கேப் ஆகிய திரையரங்குகளில் வெடிகுண்டு வைப்பதாகவும் `தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் தலையைக் கொய்வோம்’ என்றும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதைத் தொடர்ந்து, எல்லா தியேட்டர்களிலும் ரிசர்வேஷன் நிறுத்தப்பட்டது. இந்த மிரட்டல்களைக் காரணமாக வைத்து ரிலீஸுக்கு அனுமதி தராமல் இழுத்தடித்தது அரசு.

தமிழகம் தவிர மற்ற இடங்களில் `தலைவா' படம் வெளியானது. இந்நிலையில், நடிகர் விஜய், டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மூவரும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க கொடநாடு செல்லத் திட்டமிட, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது விஜய் முதன்முறையாக வீடியோவில் தோன்றி, "என் படம் சூப்பர் ஹிட்டாகும்னு சொன்னதில்லை; இப்போ சொல்லத் தோணுது!" என்றெல்லாம் பேசினார். இறுதியாகப் பல நாள்கள் கழித்து தமிழகத்தில் `தலைவா' வெளியானது, `டைம் டூ லீட்' என்ற டேக்லைன் நீக்கப்பட்டு!  

கத்தி:

`கத்தி' படம் ஆரம்பித்தபோதே `இலங்கை அரசுக்கு ஆதரவான லைகா நிறுவனம் தயாரிக்கும் படம்’ என்ற செய்திகள் வந்தன. இதைத் தயாரிப்பு நிறுவனமான லைகாவும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் மறுத்தனர். படம் தயாராகி டிரெய்லர் வெளியான பிறகு, `` `கத்தி' படத்தின் கதை என்னுடையது" என்று மீஞ்சூர் கோபியும், ``தான் இயக்கிய `தாகபூமி' குறும்படத்தைத் தழுவித்தான் `கத்தி' படமாக எடுத்திருக்கிறார்கள்" என அன்பு ராஜசேகரும் கோர்டில் வழக்கு தொடுத்தனர். 

`கத்தி' படத்தை வெளியிடக் கூடாது என 65 அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில், விடிந்தால் படம் ரிலீஸ். இரவு 10 மணிக்கு சத்யம் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீச, தியேட்டரின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இத்தனை  பரபரப்புக்கு நடுவே, தமிழகத் திரையரங்குகளில், `லைகா' என்ற பெயரை நீக்கிய பிறகே படத்தைத் திரையிட முடிந்தது. பிறகு தமிழில் லைகா நிறுவனம் டஜன் கணக்கில் படங்களைத் தயாரித்தது தனிக்கதை. 

புலி:

`புலி’ படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள், நடிகர் விஜய் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதனால் ஃபைனான்ஸ் பிரச்னைகள் முழுவதும் தீர்க்கப்படாமல் பட வெளியீட்டில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், `புலி' திரைப்படத்தின் முதல் காட்சிகள் ரத்தானது. காலைக் காட்சி ரத்தானதால், மதுரை உள்ளிட்ட சில இடங்களில் ரசிகர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். சில ஊர்களில் தியேட்டர்களில் கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது.

தியேட்டருக்கு  பிரின்ட்டுகளை அனுப்புவது குறித்து, விஜய்யே பிரசாத் லேப்பிற்கு நேரடியாக வந்து தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட, வெளியீட்டு தினத்தில் மதியக் காட்சிக்குப் `புலி' படம் வெளியானது. வருமான வரித்துறையின் சோதனை `புலி' படத்துக்கு பப்ளிசிட்டியாக அமைந்தாலும், படம் தோல்வியடைந்தது. 

தெறி:

`தெறி' படத்துக்கு விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையேயான பிரச்னையால், வெளியீட்டு தேதியன்று தமிழகத்தின் மிகப்பெரிய விநியோக ஏரியாவான செங்கல்பட்டு உட்பட பல இடங்களில் படம் வெளியாகவில்லை. அந்த வாரம், `தெறி' படத்தைத் தவிர்த்து வேறு படங்கள் எதுவும் வெளியாகாத நிலையிலும், `தெறி' படத்தை ரிலீஸ் செய்யாதது தமிழ் சினிமாவில் இருந்த பலருக்கும் அதிர்ச்சி. 

மெர்சல்:

`மெர்சல்’ படத்துக்கும் டைட்டில் பிரச்னை வெடித்தது. அதனால், `மெர்சல்' என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்காலத் தடை விதித்தது, நீதிமன்றம். தவிர, விலங்குகள் நல வாரியத்திடம் இருந்தும் பிரச்னை. இதனால், படத்துக்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்தது. தவிர, அதே சூழலில் கேளிக்கை வரி விதிப்பால் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம், `மெர்சல்' படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஏற்கெனவே வாங்கி வெளியிட்ட படங்கள் மூலமாக ஏற்பட்ட நஷ்டங்களைக் கேட்டு விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியது... என ஏகப்பட்ட களேபரங்களைக் கடந்து வெளியானது, `மெர்சல்'. 

தொடர்ந்து கர்நாடகாவில் `மெர்சல்' திரையிடப்படுவதை கன்னட அமைப்பினர் எதிர்த்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி வரி வசனம், மருத்துவர்களை தவறாகச் சித்திரித்திருப்பது போன்ற காட்சிகளை நீக்கச் சொல்லி பாஜக கண்டனம் தெரிவித்தது. ஆனால், பாஜக எந்தக் காட்சியை மக்கள் பார்க்கக் கூடாது, நீக்க வேண்டும் என்று நினைத்ததோ... அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகிவிட, ஹெச்.ராஜா `ஜோசப் விஜய்' எனத் தன் பங்குக்குக் கொளுத்திப் போட்டார். இதெல்லாம், படத்துக்கு பப்ளிசிட்டியாக மாற, படம் வெற்றிக்கும் உதவியது.  

சர்கார்:

`துப்பாக்கி' திரைப்படத்தைப் போலவே சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரிலிருந்து தொடங்கியது, `சர்கார்' பஞ்சாயத்து. உடனடியாக சமூக வலைதளங்களில் இது வேகமாகப் பரவ, அந்த போஸ்டரை நீக்க வேண்டுமென தமிழகச் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. பிறகு, வருண் ராஜேந்தரின் என்ற துணை இயக்குநர் `சர்கார்’ படத்தின் கதை தன்னுடைய `செங்கோல்' கதையின் தழுவல் என்று கூற, அது எழுத்தாளர் சங்கத்தில் பஞ்சாயத்தாக நின்றது. முருகதாஸும், வருணுக்கான கிரெடிட் படத்தில் இருக்கும் எனச் சொல்லியிருக்கிறார்.  

`காவலன்' தொடங்கி `சர்கார்' வரையிலான பிரச்னைகளுக்கு, வழக்கம்போல சைலன்ட் மோடிலேயே இருக்கிறார், விஜய். இனி, தீபாவளிக்குள் என்னென்ன காட்சிகள் மாறுகிறதெனப் பார்ப்போம்!