Published:Updated:

ரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி... நடந்ததை விவரிக்கும் அர்ச்சனா!

அய்யனார் ராஜன்

ரஜினியைப் பேட்டி எடுத்த அனுபவத்தைப் பகிர்கிறார் ஆங்கர் அர்ச்சனா

ரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி... நடந்ததை விவரிக்கும் அர்ச்சனா!
ரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி... நடந்ததை விவரிக்கும் அர்ச்சனா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ரஜினியின் பேட்டி நாளை (6/11/18) ஒளிபரப்பாக இருக்கிறது. விரைவில் `2.0' ரிலீஸாக இருக்கிற சூழலில் ஜீ தமிழ் சேனலுக்கு ரஜினியை ஒன் டூ ஒன் பேட்டி கண்டுள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா. `2.0' படம் பற்றிய தகவல்களைத் தாண்டி, மற்ற பொதுவான கேள்விகளுக்கும் உற்சாகத்துடன் பதிலளித்து, ரஜினி பேசியிருக்கிற அந்தப் பேட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிற சூழலில் அர்ச்சனாவிடம் பேசினோம்.

``நான் டிவிக்கு வந்திருந்த புதுசு. 2002ம் வருஷம்னு நினைக்கிறேன். நல்லா ஞாபகம் இருக்கு. சென்னை காமராஜர் அரங்கத்துல ஒரு நிகழ்ச்சி. ரஜினி சார் கலந்துக்கிட்டார். சன் டிவியிலிருந்து நாங்க போயிருந்தோம். `ரஜினிகிட்ட சின்ன பைட்டாவது வாங்கிடுங்க'ன்னு எங்களுக்கு ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தாங்க. நானேதான் வாங்கணும். நிகழ்ச்சிக்கு ரஜினி சார் வர்றார். வரும் போது எங்க அவர் பக்கத்துல போறது? பேச முடியலை. கிளம்புகிற போது எப்படியும் வாங்கிடணும்னு ரஜினி சார் கார் பக்கத்துல போய் நின்னுக்கிட்டேன். ஃபங்ஷனும் முடிஞ்சது. தனக்கே உரிய விறுவிறு ஸ்டைல்ல வர்றார். `சார், சார்’னு பக்கத்துல போய் கார் கதவு வரைக்கும் போனவரை மறிச்சு மைக்கை நீட்டினேன். நல்லாவே சிரிச்சபடி கேமராமேன்களுக்கு மட்டும் போஸ் தந்தவர், என்னைப் பார்த்தும் சிரிச்சார். ஆனா அடுத்த செகண்ட், `ரொம்ப சந்தோஷம்' என்றபடி கையசைத்து காரில் ஏறி விட்டார். அன்னைக்கு நான் அவரை எடுத்த பேட்டி `ரொம்ப சந்தோஷம்'ங்கிற அந்த ரெண்டு வார்த்தைதான்.

அந்த நாள்ல இருந்து (அதுக்கு முன்னாடியே இருந்ததுன்னுதான் சொல்லணும்) `ஃபீல்டுல இருந்து ரிட்டயர்டு ஆகறதுக்குள்ள ரஜினி சார் பேட்டி'ங்கிறதே என் வாழ்நாள் டார்கெட்டா இருந்தது.

நாள்கள்தான் போச்சே தவிர அந்தப் பேட்டி கைகூடவே இல்லை. நானும் கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை பெத்துக்கிட்டு, ஃபீல்டுல இருந்தே ஒதுங்கிட்டேன். அப்ப `கடைசி வரை கனவு கை கூடாமலேயே போச்சே'ன்னு நொந்துகிட்டேன்.

ஆனா, இப்ப பாருங்க, என்னோட செகண்ட் இன்னிங்ஸ்ல அந்த ஆசை நிறைவேறியிருக்கு'' என்றவர், தற்போது எடுத்த பேட்டி குறித்துச் சிலாகித்தார்.

``திடீர்னு சேனல்ல இருந்து ஒரு ஃபோன் கால். `நாளை ரஜினியைப் பேட்டி எடுக்கணும்; தயாராகிடுங்க'ன்னு சொல்றாங்க. வீட்டு மாடியில இருந்தவ, திடுதிடுன்னு கீழே ஓடிவந்து என்னோட அம்மாகிட்ட `என் கையைக் கிள்ளுங்க'ன்னு சொல்ல, அவங்களும் கிள்ளினாங்க. `அட நிஜம்தான்'னு அந்த நிமிஷத்துல இருந்து தலைகால் புரியலை. அந்தளவு சந்தோஷம். `முதல்வன்' படத்துல ரகுவரனைப் பேட்டி காண கண்ணாடி முன்னாடி நின்னு அர்ஜூன் ஒத்திகை பார்ப்பாரே, அந்த மாதிரியெல்லாம் பார்த்தேன். வாங்க, அந்த செகண்டுக்குப் போயிடலாம்..' எனப் பரபரத்தவர், தொடர்ந்தார்.

``சென்னை கடற்கரையில இருக்கிற நட்சத்திர ஓட்டல். குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியா வந்து நிற்கிறார். பேட்டி எடுக்கப் போறது நான்தான்கிறது ஸ்பாட்டுக்கு வந்த பிறகே அவருக்குத் தெரியுது. பேட்டி ஆரம்பிச்ச இருபது நிமிஷம் `2.0’ படம் குறித்துப் பேசினோம். பிறகுதான் பேட்டியோட பரபரப்பு, விறுவிறுப்பு தொடங்குச்சு. பல அரசியல் கேள்விகளுக்கு உற்சாகமாகவும், ஜாலி மூட்லயும் அவர் தந்த பதில்கள் ஒண்ணு ஒண்ணும் வேற லெவல். சரியா ஒரு மணி நேரம் இருபது நிமிஷம் போச்சு. அந்த வாவ் சிரிப்பு, கேள்வியில் அவர் தந்த ட்விஸ்ட் எல்லாத்தையும் வார்த்தைகளால விவரிக்க முடியாது.

பேட்டி முடிஞ்சதும், `கட்டிப்பிடிச்சு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா’ன்னு கேட்டு, அந்த க்ளிக்கும் கிடைச்சது.

அதோட, என் வாழ்நாள் டார்கெட்டும் நிறைவேறிடுச்சு'’ என்ற அர்ச்சனா, பெர்சனலாக தான் கேட்க விரும்பிய ஒரு கேள்வி என ரஜினி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான `அபூர்வ ராகங்க'ளின் அந்த கேட் குறித்துக் கேட்டாராம். அதற்கான பதிலிலிருந்தே பேட்டி தெறிக்கத் தொடங்கியதாம்.