Published:Updated:

"கமல், ரஜினி சொல்லட்டும்; விஜய் வேண்டாமே!" ஆர். கே சுரேஷ்

சுஜிதா சென்

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேட்டி.

"கமல், ரஜினி சொல்லட்டும்; விஜய் வேண்டாமே!" ஆர். கே சுரேஷ்
"கமல், ரஜினி சொல்லட்டும்; விஜய் வேண்டாமே!" ஆர். கே சுரேஷ்

" 'பில்லா பாண்டி' படத்துல வர்ற சில வசனங்களை நீக்கணும்னு சென்சார் போர்டு சொன்னப்போ, படக்குழு கேட்டுக்கிட்டு முறைப்படி அந்த இடத்துல மியூட் பண்ணிட்டாங்க. அதேதான் 'சர்கார்' படத்துக்கும் நடந்திருக்கு. சினிமாவுல அரசாங்கத்தை நேரடியா தாக்கும்போது இந்த மாதிரியான சில பிரச்னைகள் வரத்தானே செய்யும்" என்கிறார், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். இவர் தயாரித்து நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்தும், சர்கார் பிரச்னைகள் குறித்தும் பேசினோம். 

"இந்தப் படத்துல ஹீரோ ஒரு 'அஜித் ரசிகன்'னு எதுக்கு சொல்லிக்கணும், விளம்பரத்துக்காகவா?"

"அஜித்தை கடவுளா நினைக்கிற ஒருத்தனோட கதையா இருக்கணும்னுதான் இந்தப் படத்தை எடுத்தோம். தல அவரோட படங்கள்ல என்னனென்ன பண்ணுவாரோ, அதையெல்லாம் ஹீரோ இந்தப் படத்துல பண்ணுவான். 'அமராவதி' படத்துல இருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஆனா, 'தீனா'வுல இருந்துதான் தீவிர ரசிகரா மாறினேன். உண்மையான தல ரசிகனால மட்டும்தான் இந்தப் படத்துல நடிக்க முடியும். இந்தப் படத்தை பலர் இதுக்காக ட்ரோல் பண்ணாலும், அது பத்தி எனக்குக் கவலை இல்லை. 'விஸ்வாசம்' படத்துல ஹெல்மெட் போட்டு ஒரு போட்டோவுக்கு போஸ் பண்றதுல இருந்தே எந்தளவுக்கு அவருக்கு சமூக அக்கறை இருக்குனு பலருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதனால ஒரு உண்மையான அஜித் ரசிகனா இதுல நடிச்சதுக்கு நான் பெருமைப்படுறேன்." 

"தல ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை எடுத்துக்கிட்டாங்க?"

"முதல் படத்துலேயே இந்த மாதிரியான சண்டைக் காட்சிகள்ல நடிச்சா எல்லோரும் சிரிப்பாங்க. நான் 21 படம் பண்ணிருக்கேன். அதுல 14 படம் ரிலீசாகியிருக்கு. இருந்தாலும், பறந்து வந்து சண்டை போடுற காட்சிகள்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஐந்து நாள் கஷ்டப்பட்டு சண்டைக் காட்சியை ஷூட் பண்ணோம். சாம்பல் பொடி மீது சண்டை போடும்போது அது எங்க கண்ணுல குத்திக் கிழிச்சிருச்சு. அதையெல்லாம் எந்த ஆர்ட்டிஸ்டும் பொருட்படுத்தாம வேலை பார்த்தாங்க. ஏன்னா, இதுல நடிக்கிறது ஆர்.கே.சுரேஷ் கிடையாது; தல வெறியன். அதனால, இதை தல ரசிகர்கள் ஏத்துக்குவாங்கனு நினைச்சேன். அவங்களும் ஏத்துக்கிட்டாங்க."

"ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடினு பல விஷயங்கள் இருக்கு. இதை வெச்சு நிறைய ட்ரோல் பண்றாங்களே..."

"நான் பொதுவாகவே ரொமான்டிக்கான ஆள். சினிமா துறைக்கு விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரா மாறுனத்துக்குப் பிறகு வாழ்க்கை டென்க்ஷனா மாறிடுச்சு. எனக்கு இதுவரை சினிமாவுல ரொமான்ஸ் பண்ற வாய்ப்பு கிடைக்கலை. கிடைக்கும்போது விடக்கூடாதுனு இந்தப் படத்துல புகுந்து விளையாடிட்டேன். எனக்கு இந்தியில் வரவேற்பு இருக்கு. நான் தயாரித்த நிறைய படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கு. 'பில்லா பாண்டி' படமும் இந்தியில் டப் பண்ணி வெளியாகப் போகுது. பாலா சார், 'டேய்... படம் நல்லாயிருக்கு. பார்த்துப் பண்ணு'னு ஒரு வார்த்தையில என்னை நெகிழ வெச்சுட்டார். 'தாரை தப்பட்டை' படம் பண்ணும்போது என் முதுகுல சுளீர்னு ஒரு அடி வெச்சு, 'நல்லா நடிச்சிருக்கடா. சினிமாவுல பெரிய ஆளா வரணும்'னு சொன்னார்." 

" 'சர்காரோ'ட சேர்ந்து ரிலீஸ்... எப்படி இருந்துச்சு?"

"விஜய் சார் எனக்கு நல்ல நண்பர். நல்ல உள்ளம் கொண்ட சில சினிமா நபர்கள்ல ஒருத்தர். அவர்கிட்டேயே, 'நான் தல ரசிகன்'னு சொல்லிருக்கேன். தளபதி ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். சிறிய பட்ஜெட் படமா இருந்தாலும், கன்டென்ட்ல நாங்க ரொம்ப ஸ்ட்ராங். தளபதி ரசிகர்கள் என்னைக் கலாய்க்காத அளவுக்குப் படம் இருக்கணும்னு மெனக்கெட்டிருக்கோம். சிவா நடிச்ச தமிழ்ப்படம் மாதிரி யாரையும் நான் ஓட்டல. ஒரு காட்சிகூட தவறா மக்கள்கிட்ட போய் சேர்ந்துடக்கூடாதுனு அவ்வளவு நுணுக்கமா வேலை பார்த்திருக்கோம். அதனால அவர் ரசிகர்கள் கலாய்ப்பாங்கங்கிற எந்தவித பயமும் எனக்கில்லை. 'சர்கார்' படத்தோட என் படமும் ரிலீசானது வாழ்நாள்லயே மறக்க முடியாதது. ஒரு பக்கம் விஜய் சார் போஸ்டர், இன்னொரு பக்கம் என் போஸ்டர். இது போதும் எனக்கு! ஒரு தயாரிப்பாளரா எனக்கு 'தர்மதுரை', 'சூதுகவ்வும்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' ஆகிய படங்கள் எல்லாமே ஹிட். ஒரு தயாரிப்பாளரா வெற்றியை பார்த்த எனக்கு, ஒரு நடிகனாகவும் வெற்றியை பார்க்கணும்னு ஆசைப்படுறேன். 

தல தளபதி ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள். அதே மாதிரி அவரோட ரசிகர்களும் ஏன் நல்ல நண்பர்களா இருக்கக்கூடாது? தளபதி தனக்கு சரினு படுற விஷயங்களை பொதுவெளியில் துணிச்சலா பேசுவார். ஆனா, தல  அப்படியில்லை, பல விஷயங்கள்ல தலையிடவே மாட்டார். ரசிகர்களும் முன்னாடி மாதிரி பாலாபிஷேகம்லாம் பண்ணாம, ரத்ததான முகாம் மாதிரியான சேவைகளை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இவங்களுக்குள்ள நடக்குற சண்டையை மட்டும் தவிர்த்துட்டா நல்லாயிருக்கும்." 

" 'சர்கார்' பிரச்னை குறித்து நீங்க சொல்ல விரும்புவது..."  

"சமூகப் பிரச்னையை வெளிய சொல்ற மாதிரியான படங்களை எடுக்கிறப்போ கொஞ்சம் கவனமா இருக்கணும். 'சர்கார்'ல சில காட்சிகள் சில கட்சிகளுக்கு எதிரா இருக்கு. விஜய் சார் மிகப்பெரிய ஸ்டார். அவர் கருத்து சொல்றதுக்கு நிறைய மேடைகள் இருக்கு. சினிமாவுல அவர் கருத்து சொல்லணும்ங்கிற அவசியமில்லை. இதுவே கமல், ரஜினி சார் சொன்னா ஏத்துக்கலாம். ஏன்னா அவங்க ரெண்டு பெரும் அரசியல் கட்சி வெச்சிருக்காங்க. அவங்க இதை திரையில பேசுனா சரியா இருக்கும். கட்சி இல்லாம சினிமாவை பயன்படுத்தி கருத்து சொல்றதை கொஞ்சம் குறைச்சுக்கலாம்னு நினைக்கிறேன்." என்று முடித்தார் ஆர்.கே.சுரேஷ்.