Published:Updated:

"நினைக்க மறந்ததாலும், மறக்க முடியாத பசுமை நினைவுகளின் காட்சிப்பேழை, 'ஆட்டோகிராஃப்'!" - #15YearsOfAutograph

அமுதினியன் இரா

'ஆட்டோகிராஃப்' திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இப்படம் குறித்த ஒரு ரீவெண்ட் கட்டுரை.

"நினைக்க மறந்ததாலும், மறக்க முடியாத பசுமை நினைவுகளின் காட்சிப்பேழை, 'ஆட்டோகிராஃப்'!" - #15YearsOfAutograph
"நினைக்க மறந்ததாலும், மறக்க முடியாத பசுமை நினைவுகளின் காட்சிப்பேழை, 'ஆட்டோகிராஃப்'!" - #15YearsOfAutograph

தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த பின் இயக்குநர் சேரன் இயக்கிய படம், ‘ஆட்டோகிராஃப்’. தனது சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களில் கற்பனைத் தூவி கதையாக்கியிருந்தார். முன்னணியில் இருக்கும் நாயகர்களிடம் கதை சொல்கிறார். ‘‘ரொம்ப ஃபீலிங்கா இருக்கு சார். ஆனா, இது கொஞ்சம் ரிஸ்க்கா இருக்குமோ?’’ எனத் தயங்குகிறார்கள். ஒரு வருடம் கால்ஷீட் தரணும்போலயே?! என சிலர் தட்டிக்கழிக்கிறார்கள். நீண்ட முயற்சிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட போதும், படம் மீண்டும் தடைப்படுகிறது. என்ன செய்வதெனத் தெரியாமல், உடைந்து போகிறார் சேரன். "நீயே பண்ணிடு சேரா!" என உறுதி உரமிடுகிறார்கள், நண்பர்கள். தானே நடிக்கிறார், தயாரிக்கிறார், இயக்குகிறார். படம் பார்த்தவர்கள் நெகிழ்கிறார்கள்.  

மழை பெய்ததும் வீசும் மண்வாசம் போல மனதில் புதைந்து கிடந்த காதல் உணர்வுகளில் மழையெனப் பெய்து நேச  நினைவுகளின் வாசனையை வீசச் செய்தது இப்படம். "அட , இது நம்ம கதை மாதிரியே இருக்குல்ல " எனக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். படம் மாபெரும் வெற்றி அடைகிறது.  தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, ஃபிலிம்பேர் விருது... என விருதுகளை வேட்டையாடுகிறது. அனைத்திற்கும் மேலாக, மக்களின் மனங்களில் சிம்மாசனம் இட்டு அமர்கிறது. 'இந்தப் படத்துல நடிக்கணுமா?' எனத் தவிர்த்தவர்களையெல்லாம், 'இப்படி ஒரு படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டோமே!' எனத் தவிக்க வைத்த அளவிற்குத் தமிழ் சினிமாவின் மிகச்சில எதார்த்தமான படங்களில் ஒன்றாகத் தடம் பதித்தது இது. 

எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தாலும், நினைவடுக்குகளில் புதைந்திருக்கும் காதல் நினைவுகளுக்கு நரம்பிட்டு இசை மீட்டும் 'ஆட்டோகிராஃப்' படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் பால்ய காலக் காதல், காதல் தோல்வி எனக் காதலை மையமிட்டு வரும் திரைப்படங்களில் எல்லாம் 'ஆட்டோகிராஃப்' படத்தின் சாயல் நிழலாடுவதை ரசிகர்கள் உணர்கிறார்கள். காரணம், காதலை பிரதானமாகக் கொண்டாலும், அதனூடே அக்காலகட்ட இளைஞர்களின் வாழ்வை அவ்வளவு இயல்பாகத் திரையிட்டுக் காட்டிய நேர்த்தியும், கதாபாத்திரத்தின் மென்மையான உணர்வுகளை எளிதில் ரசிகனுக்குக் கடத்திய திரைமொழியுமே!.

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள்தான் 'டிரெண்ட் செட்டரா'க அமையும். அடிதடி, பாட்டு, ஐட்டம் சாங் என மசாலா படங்களை பார்த்துப் பார்த்து அலுத்த ரசிகர்கள், ஆத்மார்த்தமான ஒரு படைப்பு வருகையில் அள்ளி அணைத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோகிராஃப்' அதிகமானோரால் அள்ளி அணைத்துக் கொள்ளப்பட்டது. 

ஒரு சாதாரண இளைஞனின் கதை.  திடுக்கிடும் திருப்பங்களோ, விறுவிறு கதையமைப்போ இல்லை. எளிய மனிதன் ஒருவனின் வாழ்வை அதன் இயல்பிலேயே இழைத்து ஓடவிட்டிருப்பார், இயக்குநர் சேரன். காதலென அறியா பால்ய கால நேசத்தை, கல்லூரியில் ஏற்படும் காதலை, பெண் நட்பைக் காட்சியாலேயே கவிதையாக வடித்திருப்பார். நடிகர் சேரனும் சோடை போகவில்லை. நடிப்பில் இரண்டாவது படமாயினும், எதார்த்த நடிப்பினால் படத்திற்கு உயிரூட்டி, மொத்தப் படத்தையும் தூக்கிச் சுமந்திருப்பார். வேறு யார் வேண்டுமானும் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம். ஆனால், சேரன் நடித்ததால்தான் 'செந்தில்' கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை கூடியது. ஒரு நடிகனாகத் தொடர்வதில் அவருக்கு இருந்த தயக்கத்தை உடைத்து நம்பிக்கை ஊட்டியது.

விவரமற்று  'ஹேப்பி வயசுக்கு வந்த டே' என வெகுளியாக வாழ்த்திய ஒட்டுமொத்த அண்ணன்களின் மொத்த உருவமாகவே வாழ்ந்து இருந்தார், சிறுவயது சேரனாக நடித்த சிவப்பிரகாசம். 'நீ அழகா இருக்க' என வழிவதும், வெகுளியாகச் சிரிப்பதும் என அப்பட்டமான கிராமத்துப் பையன். குறும்பு, வெட்கம், காதல், சோகம் என சகல உணர்வுகளிலும் பின்னி எடுத்திருந்தனர். சிவப்பிரகாசமும் மல்லிகாவும் காதல் எனத் தெரியாமல் மலரும் விடலைப் பருவ புழுதிக்காட்டுக் காதலில் அவ்வளவு இயல்பு கசிந்தோடும். 

முதல் காதலியின் வீடு தேடிச் சென்று பத்திரிகை தருவதும், சேரனைக் கண்டதும் மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவான மல்லிகா பரவசமாகி, கண்ணாடியில் முகம் பார்ப்பதும் அடடே அழகு!. காதலியின் மகன் பெயர் தன் பெயராக இருப்பது தெரிந்து, சேரன் நெகிழ்ந்ததும், அடுத்த பையனின் பெயர் கேட்டுவிட்டு ' உனக்கு முன்னாடியே சுரேஷுனு ஒருத்தன் இருந்துருக்கான்' எனச் சேரனின் நண்பன் கலாய்ப்பது கிராமத்துக் குசும்பு.

லத்திகா வீணை மீட்டுக்கொண்டிருக்க, சுற்றிலும் ஏற்படும் இரைச்சல் தொந்தரவை ஏற்படுத்தும். அதனைத் தடுக்க செந்தில் கதவடைத்து, காற்று வசதி ஏற்படுத்தும் காட்சியில் கண்களாலேயே இருவரும் பேசிக்கொள்வது அழகு. அறிமுகப் படத்திலேயே அசத்தலாக நடித்திருப்பார், கோபிகா. சினேகாவிற்கு வலுவான கதாபாத்திரம். அதற்குத் தன் நடிப்பின் மூலம் மேலும் வலு சேர்த்திருப்பார். உள்ளுக்குள் கஷ்டங்களையும், பலவீனத்தையும் வைத்துக்கொண்டு வெளியில் சிடுசிடுவென இருப்பதும், உண்மையறியாமல் பகடி செய்த சேரனை, 'ப்ரெண்டாடா நீ' என அடிப்பதும், பின் உடைந்து அழுவதும் எனப் பெண் கதாபாத்திரங்களில் அதிகமாக ஸ்கோர் செய்தது, சினேகாதான். 

நட்பில் தொடங்கும்  ஆண் - பெண் உறவு காதலிலே முடியும் என்ற தமிழ்  சினிமாவின் கிளிஷேவை உடைத்த படம், 'ஆட்டோகிராஃப்'.  அதை, 'எல்லோரும்போல சராசரி உறவு அமைச்சுக்க விரும்பல. நீ எனக்கு ஒரு நண்பனா, என்னோட எல்லா சுக, துக்கத்துக்கும் தோள் கொடுத்து என்னோட எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துக்க, என்னோட கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும், என் கூடவே வரப்போற ஒரே ஒரு நண்பாக நீ வேணும்' எனப் பெண் கதாபாத்திரத்தை வைத்தே பேச வைத்தது, சேரனின் டச்!.

'செந்தில் எனக்கு இரண்டு பீசு தாயேன்' என சேரனின்  நண்பர் பசியில் கேட்கும் காட்சி மனதில் ஊசி இறக்கும். அந்த ஒற்றைக் காட்சி  வேலைதேடி அலையும் ஒட்டுமொத்த இளைஞர்களின் வலியைப் பார்வையாளனுக்குக் கடத்தியிருக்கும். நான்கு காலகட்டத்திற்கு நான்கு ஒளிப்பதிவாளர்கள். கிராமத்தின் மண்பாதையினூடே பயணித்து, கேரளாவின் இயற்கை அழகில் திளைத்து, சென்னையின் பரபரப்பில் நுழைந்து, திருமண மண்டபத்தில் முடிகிறது. இந்த வித்தியாசமான பலனுள்ள முயற்சிக்கு ஒரு பூங்கொத்து. திரைப்படத்தின் வரும் இடங்களும் ஓர் தனி அழகு. தேடித் தேடித் கண்டைந்திருக்கிறார்கள், இயக்குநர் - கலை இயக்குநர்களும்!.

ரம்மியமான பின்னனி இசையும் நினைவுகளின் பயணத்திற்கு இனிமை கூட்டுகிறது. நிச்சயம் இரண்டு பாடல்களைத் தமிழ் ரசிகர்களால் மறக்கவே இயலாது. பா.விஜயின் வரிகளில் சின்னக்குயில் சித்ராவின் குரலிலும் ஒலிக்கும் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல்  வாழ்வில் உடைந்துபோன மனங்களுக்கு நம்பிக்கை டானிக் . சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னனிப் பாடகி என இரண்டு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல். 'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..' பாடல் 90'ஸ் கிட்ஸ்களின் ஒட்டுமொத்த நாஸ்டாலஜி. 

இன்று ஆட்டோகிராஃபின் இடத்தை செல்பிகள் ஆக்கிரமித்துவிட்டன. ஆனால், பிரியமானவர்களின் கையெழுத்தில் மிளிரும் ஒற்றை ஆட்டோகிராஃப் மனதில் நிகழ்த்தும் மாயாஜாலத்தினை ஆயிரம் செல்பிகளாலும் கொடுக்க முடியாது. இன்னும் ஆயிரமாயிரம் காதல் திரைப்படங்கள் வரலாம். அவற்றை மக்களும் கொண்டாடலாம். ஆனால், 'ஆட்டோகிராஃபி'ன் இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனெனில், நினைக்க மறந்ததாலும், மறக்க நினைக்காத  பசுமையான நினைவுகளின் காட்சிப் பேழை ' ஆட்டோகிராஃப்'.