Published:Updated:

ஸ்டெம்செல் ஊசி, கருக்கலைப்பு... அபி சரவணன் புகார்களுக்கு அதிதி மேனனின் பதில் இதோ!

வே.கிருஷ்ணவேணி
எஸ்.மகேஷ்

"அபி சரவணன் அந்தச் செய்திக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியதோடு சிலரின் பெயரை என்னிடம் தெரிவித்தார். அவர்களிடமும் விசாரித்தேன். அதன்பிறகுதான் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொண்டேன்."

ஸ்டெம்செல் ஊசி, கருக்கலைப்பு...  அபி சரவணன் புகார்களுக்கு அதிதி மேனனின் பதில் இதோ!
ஸ்டெம்செல் ஊசி, கருக்கலைப்பு... அபி சரவணன் புகார்களுக்கு அதிதி மேனனின் பதில் இதோ!

`பட்டதாரி' படத்தின் ஹீரோயின் அதிதி மேனன் கடந்த 18ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிடமிருந்து மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், `` `பட்டதாரி' படத்தில் அவருடன் நடித்த போது நட்பாகி பிறகு அதுக் காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை யாவும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார். அதன் பின் என் சமூக வலைதளங்களின் கணக்குகளில் நுழைந்து போலியான ஆவணங்களை அவரே பதிவேற்றியுள்ளார். அதை ஆதாரமாகக் காண்பித்து வருகிறார். அவை யாவும் போலியானது என நிரூபித்திருக்கிறேன். அதனால்தான் புகார் அளிக்க வந்தேன். நான் அவருடைய வீட்டில் எந்தப் பொருள்களையும் திருடவில்லை. யாருடனும் எனக்குத் தொடர்பில்லை. அவருக்குச் சமூக சேவை என்கிற பெயரில் பணம் சார்ந்த பிரச்னைகள் இருந்தன. அதனால் அதற்குப் பயந்துதான் அவரை விட்டு விலகி இருக்கிறேன். மேலும், நான் மட்டுமல்ல இன்னும் சில பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கிறது'' என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று காலை அதிதி மேனன் விஷயம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அபி சரவணன். அப்போது, 

``அவர் குறித்து நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கான எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன" எனக் காட்டினார். ``எங்களுக்குள் நல் இணக்கம், சமாதானம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார். 

இந்தப் பிரச்னைகள் குறித்து அபி சரவணன் நம்மிடம் பேசியபோது,  

``நானும் அவரும் கடந்த 3 வருடங்களாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம். ஆரம்பத்தில் நட்பாக இருந்த நாங்கள் பிறகு காதலிக்க ஆரம்பித்தோம். வீட்டில் பெற்றோரின் அனுமதியோடு பதிவுத் திருமணமும் செய்து கொண்டோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் இருந்ததில்லை. சந்தோஷமாகத்தான் இருந்தோம். அவர் தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நான் `கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்திற்கான ஷூட்டிங்கில் இருந்தேன். அந்த நேரம் கேரளா வெள்ளத்திற்கான உதவிக்கான பணிகளில் இருந்தேன். அந்த நேரம் பார்த்து சுஜித் என்பவருடன் என் வீட்டில் இருந்த பொருள்களுடன் அதிதி வெளியேறிவிட்டார். நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது எவ்வளவோ சமாதானமாகப் பேச நினைத்தேன்.

ஆனால், `நீ என்னை மூன்று வருஷம் யூஸ் பண்ணல்ல, அதுக்கு சரியாப் போச்சு'னு சொல்லி போனை வச்சிட்டாங்க. ஏற்கெனவே ஒரு லவ் ஃபெயிலியர். அதிலிருந்து மீண்டு வரவே ரொம்ப காலம் ஆகிடுச்சி எனக்கு. இது எல்லாமே அவருக்கும் தெரியும். அதை வைத்தே சில நாள்கள் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். லவ் ஃபெயிலியர் ஆன பிறகு, `எதுவும் வேண்டாம்'னு இருந்தப்போ இவங்க வந்தாங்க. உண்மையாக நேசிக்கிறதா நினைத்து, ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இன்னொரு பையன்கூடப் போறதுக்கு என்னை ஏன் ரிஜிஸ்டர் பண்ணணும்? அவளால் இப்போது என் குடும்பமே மன உளைச்சலில் இருக்கு'' என்ற அபி சரவணன், 

``என்னிடம் திருமணம் ஆன சான்றிதழ், இருவரும் தங்கியிருக்கும் வீட்டின் அக்ரிமென்ட், கார் வாங்கிய சான்றிதழ் மற்றும் என் வீட்டிலிருந்து அதிதி யாருடன் கிளம்பிச் சென்றார் என்கிற வீடியோ ஃபுட்டேஜ் வரை எல்லா ஆதாரமும் இருக்கிறது. இதுவரை வெளியிடாத ஒரு விஷயத்தையும் சொல்கிறேன். என் அப்பாவுக்குப் பேரன், பேத்திகளைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம். கடந்த 3 வருடங்களில் கர்ப்பமான நேரங்களில் எல்லாம் கருவைக் கலைத்திருக்கிறார். காரணம் கேட்டதற்கு, `அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்' என்றும் கூறினார். பின்பு, தொடர்ந்து கண்காணித்ததில் உடலை அழகாக்கக்கூடிய ஸ்டெம்செல் ஊசியை அடிக்கடி போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். இதனால் உடல் பளபளப்புடன் மிளிரும். இந்த ஊசியைப் போட்டால் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. இந்த ஒரு ஊசிக்கு 20,000 ரூபாய் வரை செலவாகும். மேலும், இந்த ஊசிப் போடும்போது கர்ப்பம் தரிக்கக் கூடாது. ஏனென்றால், அந்த மருந்தால் குழந்தைக்குப் பாதிப்பு உண்டாகும். இதையும் எச்சரித்தேன், கேட்கவில்லை. இதுதான் எங்கள் மனஸ்தாபத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது' என்றார் அபி சரவணன். 

அபி சரவணன் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து நடிகை அதிதி மேனனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 

``நானும் அபிசரவணனும் `பட்டதாரி' படத்தில் ஒன்றாக நடித்தோம். அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லை. அதுபோலத்தான் எங்களுடைய காதலும் கருத்துவேறுபாடு காரணமாக முறிந்துவிட்டது. அபி சரவணனின் குடும்பத்தினர், எங்களின் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் காதல் குறித்து சில கருத்துகளை  என்னிடம் பகிர்ந்துகொண்டனர். `பட்டதாரி' படத்துக்குப் பிறகு நான் சில படங்களில் நடித்தேன். அப்போதுதான் அபி சரவணனுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை மனதளவில் பாதித்தது. இது தொடர்ந்ததால் அவரை விட்டுப் பிரிந்து செல்ல முடிவு செய்தேன். கடந்த 2018 நவம்பர் மாதத்தில் இருவரும் பிரிந்தோம். அதன்பிறகு அபிசரவணன் என்னைப்பற்றி தவறான தகவலைப் பரப்பிவந்தார். அதையெல்லாம் பொறுமையாகச் சகித்துக்கொண்டேன். இந்தச் சமயத்தில்தான் நான் ஓடிபோய்விட்டதாக ஒரு செய்திவெளியானது. ஆனால், நான் சென்னையில்தான் இருந்தேன். அதுதொடர்பாக எனக்குப் பல போன் அழைப்புகள் வந்தன. செய்தி தொடர்பாக அபி சரவணனிடம் போனில் பேசினேன். அப்போது அவர் அந்தச் செய்திக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியதோடு சிலரின் பெயரை என்னிடம் தெரிவித்தார். அவர்களிடமும் விசாரித்தேன். அதன்பிறகுதான் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொண்டேன். 

இதையடுத்துதான் எனக்கும் அபிசரவணனுக்கும் திருமணம் நடந்ததுபோல பதிவுச் சான்றிதழை அவர் வெளியிட்டார். உண்மையிலேயே எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனால், திருமணப் பதிவுச் சான்றிதழில் உள்ள தகவலின்படி ஒரு சங்கத்தில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. மேலும், `பட்டதாரி' படத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களைப் பயன்படுத்தித்தான் இந்தப் பதிவு சான்றிதழைச் பெற்றிருக்கவேண்டும் என்று கருதுகிறேன். அதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

என்னுடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தது; என்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது எனச் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். போலீஸார் விசாரித்துவருகின்றனர். புகார் கொடுத்தபிறகு அவர் பிரஸ்மீட்டில் என்னைப்பற்றிப் பேசியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போதே அபி சரவணனுக்கு பயம் வந்துவிட்டது தெரிகிறது. நான் ஆதாரங்களுடன்தான் புகார் கொடுத்துள்ளேன். எனக்கும் அபிசரவணனுக்கும் திருமணம் நடந்திருந்தால் நான் விவாகரத்து கேட்டிருப்பேன். நண்பர்களாக இருப்போம் என்றுதான் பிரிந்தோம். என்பக்கம் உண்மையிருக்கிறது. அது நிச்சயம் வெற்றிபெறும். என் மீது அபிசரவணன் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அவர் நிரூபிக்கட்டும். அதற்குப் பதில் சொல்கிறேன்" என்றார்.