Published:Updated:

பெற்றால்தான் பிள்ளையா?! தத்தெடுத்திருக்கும் ஹீரோயின்கள்

விகடன் விமர்சனக்குழு
பெற்றால்தான் பிள்ளையா?! தத்தெடுத்திருக்கும் ஹீரோயின்கள்
பெற்றால்தான் பிள்ளையா?! தத்தெடுத்திருக்கும் ஹீரோயின்கள்


தத்தெடுத்தல்... இன்றளவும் நம் சமூகத்தில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படாத  விஷயங்களுள் ஒன்று. ‘இதெல்லாம் சரியா வருமா?’ என்பதில் தொடங்கி அதை முன்னிறுத்தி எழுப்பப்படும் கேள்விகளும் விமர்சனங்களும் நிறைய. சாமான்யர்களின் நிலையே இது என்றால், எப்போதும் விமர்சன வளையங்களுக்குள் இருக்கும் சினிமா ஹீரோயின்கள், ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்று
முடிவெடுக்கும்போது, அது பல அதிர்வலைகளை உருவாக்கும். அத்தனையும் தாங்கிநின்று, தங்களின் தத்துப் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் இந்த ரியல் ஹீரோயின்ஸ்!

சுஷ்மிதா சென்
 

இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். திருமணம் என்னும் கூட்டிற்குள் இன்றுவரை தன்னை அடைத்துக்கொள்ளாத இவர், 2000ம் ஆண்டு, தன் 25வது வயதில், ஆறு வயதான ரெனியைத் தத்தெடுத்தார். இன்று பள்ளிப் படிப்பின் இறுதி வருடத்தில் இருக்கிறார் ரெனி சென். முதல் குழந்தைபோல, இரண்டாவது குழந்தையைத் தத்தெடுப்பது சுலபமாக இல்லை சுஷ்மிதாவுக்கு. ‘இந்து அடாப்ஷன் மெயின்டனன்ஸ் ஆக்ட்’டின் படி, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளைத் தத்தெடுப்பதை, சட்டம் அனுமதிக்கவில்லை. எனினும் போராடி, பாம்பே ஹை கோர்ட்டிடம் இருந்து அனுமதி பெற்று, அலிஷாவை 2010-ம் ஆண்டு தத்தெடுத்தார். இன்று 6 வயதாகும் அலிஷா, அப்போது மூன்று மாதக் கைக்குழந்தை. இப்போது தன் மகள்களுடன் ஆனந்தமாக வாழும் 39 வயதாகும் சுஷ்மிதா, அகத்திலும் அழகி!

ரேவதி
 

தமிழ்நாட்டை வருடிய மௌனராகம், ரேவதி. 1986-ம் ஆண்டு மலையாள நடிகர் சுரேஷ் மேனனை திருமணம் செய்துகொண்டார். திரைப்பயணம் சுவையாக அமைந்த இவருக்கு ஏனோ திருமண பந்தம் சுவையாக அமையவில்லை. 2002-ம் ஆண்டு முதலே ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ ஆரம்பித்த இந்தத் தம்பதி, 2013-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்துப் பெற்றனர். 2012லேயே ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்த ரேவதி, 2013 ஜூலை 8, தனது 48வது பிறந்தநாள் அன்று அதை அதிகாரப்பூர்வமாக
அறிவித்தார். அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்புகளுக்காகவே தனது ஸ்க்ரீன் ப்ரசன்ஸை குறைத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். ரேவதியின் மகளுக்கு இன்று வயது நான்கு. பெயர், மகீ!

ஷோபனா:

கதாநாயகியாக 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஷோபனா, நாட்டியத்துறையில் தவிர்க்க முடியாத சாதனையாளர். கேரளாவைச் சேர்ந்த ஆறு மாதப் பெண் குழந்தையை 2014-ம் ஆண்டு தத்தெடுத்து இருக்கிறார் இவர். அதன் மூலம் தன் வாழ்வை மேலும் அழகாக்கிக்கொண்ட ஷோபனா, பலருக்கும் முன் உதாரணமாகத் திகழ்கிறார். குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் தன் மகளுக்கு அமுதூட்டும் (முதல் முறையாக சாதம் ஊட்டும்) சம்பிரதாயத்தை நடத்திய ஷோபனா, அப்போது அந்தக் குழந்தைக்கு ‘அனந்த நாராயணி’ எனப் பெயர் சூட்டினார். இன்று இரண்டு வயதாகும் அனந்த நாராயணியின் மழலையிலும் குறும்புகளிலும் மலர்ந்திருக்கிறார் ஷோபனா அம்மா!

ரவீனா டான்டன்

பாலிவுட்டின் கலக்கல் ஹீரோயினான ரவீணா டான்டன், 1995-ம் ஆண்டு தன் 21வது வயதில் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தார். அவர்கள் இருவரும் ரவீனாவின் உறவினரின் குழந்தைகள். தாய் இறந்துவிட, தந்தை குடியின் கைகளில் இருக்க, அந்தத் தம்பதியின் பெண் குழந்தைகளான சாயாவும் பூஜாவும் கதியற்று நின்றார்கள். அவர்களுக்கு தான் தாயாகி, அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அந்தச் சிறுமிகளின் வயது 11 மற்றும் 8. இன்று இருவரும் திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிட்டார்கள். இவர்களைத் தத்தெடுத்த பிறகுதான் 2004-ம் ஆண்டு ரவீணாவின் திருமணம் நடைபெற்றது. ரவீனா & அணில் தந்தானி தம்பதிக்கு ராஷா, ரன்பீர் என ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.


‘தாய்மை’ என்பது உறவுச்சொல் மட்டுமல்ல, அது உணர்வுச்சொல் என்று வாழ்ந்து
காட்டும் இந்த நாயகிகளுக்கு ராயல் சல்யூட்!

- எஸ்.எம். கோமதி (மாணவப் பத்திரிகையாளர்)