Published:Updated:

திரையரங்க டிக்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு தீர்வு என்ன?

விகடன் விமர்சனக்குழு
திரையரங்க டிக்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு  தீர்வு என்ன?
திரையரங்க டிக்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு தீர்வு என்ன?

ஜூலை 22-ல் கபாலிக்கு தியேட்டர்கள் வசூலித்த கட்டணம் யாவரும் அறிந்ததே! என்னதான் சலித்துகொண்டாலும் தங்கள் ஆசை நாயகனை திரையில் காண எதுவும் தரத் தயாராக இருக்கிறான் தமிழ் ரசிகன். அவனது அன்பைச் சுரண்டி லாபம் பார்க்கின்றன திரையரங்குகள்! கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப திரையரங்குகளின் தரம் இல்லை என்பதும் உண்மை. இது கபாலிக்கு மட்டுமல்ல அனைத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கும் நடப்பது தான்.ஆனால் நாம் இதை பெரிய விஷயமாக கருதுவதில்லை.இதன் பின்னணியில் நடக்கும் ஊழல் மிகப்பெரியது.

உண்மையில் திரையரங்குகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் தான் என்னதிரையரங்க கட்டணங்களை சீரமைத்து 2009ம் ஆண்டு தமிழக அரசால் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது,அதன்படி

திரையரங்கம் 

அதிகபட்சகட்டணம்

குறைந்தபட்சகட்டணம்

மாநகராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்

50

10

மாநகராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்

30

7

நகராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்

40

5

நகராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்

30

4

பேரூராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்

25

5

பேரூராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்

20

4

ஊராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்

15

5

ஊராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்

10

4

இதைத்தவிர அரசின் 15 வரைமுறைகளை பூர்த்திசெய்யும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக95ம் குறைந்தபட்சமாக10ம் வசூலிக்க வேண்டும்.

1-5ல் 10 வரைமுறைகளை பூர்த்திசெய்யும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக85, குறைந்தபட்சமாக10ம் வசூலிக்க வேண்டும்.உணவகவசதி மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் உள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக120ம், குறைந்தபட்சமாக10 வசூலிக்கலாம். இதில் 30% பொழுதுபோக்கு வரியாக செலுத்தப்படவேண்டும். வரிவிலக்கு பெற்ற படங்களுக்கு 30% டிக்கெட் விலை குறைக்கப்படவேண்டும்.சென்னையில் உள்ள சில மல்டிப்ளெக்ஸ் தவிர வேறு எங்கும் இது பின்பற்றவில்லை என்பது தன உண்மை.

இதைப்பற்றி ட்விட்டரில் ஆந்தைகண்ணன் என்ற பெயரில் #தியேட்டர்கொள்ளை என்ற ஹேஷ்டேக் வழியாக பலநாட்களாக தனது கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த வினோத் கண்ணன் கூறியது "நான் முதலில் கருத்துக்கள் பதிவு செய்ய ஆரம்பித்தபோது நாட்டில் எத்தனையோ பிரச்னை இருக்கு.. இதெல்லாம் ஒரு பிரச்னையா என என்னை உதாசீனப்படுத்தினர், இதுவும் ஒரு பிரச்னைதானே என பல உண்மைகளை தேடிப் பதிவிட்டேன். ஆதரவு பெருகியது. இப்போதெல்லாம் திரையரங்குகளின் டிக்கெட்களில் விலைக்கான இடமே தரப்படுவதில்லை.. வெறும் காட்சி நேரமும், திரையரங்கு பெயரும் தான் அச்சிடப்படுகிறது, அவை எதுவும் உண்மையான டிக்கெட்கள் அல்ல, உண்மையான டிக்கெட்களில் Net trate (மொத்த விலை), E.T (பொழுதுபோக்கு வரி), T.M.C என விலைப்பட்டியல் தெளிவாகவும், பின்புறத்தில் வரித்துறையின் முத்திரையும் இருக்கும். இந்த டிக்கெட்களை பல திரையரங்குகள் மக்களின் கண்ணில் காட்டுவதேயில்லை. அவற்றைப் பதுக்கி போலிக் கணக்கு காட்டுகிறார்கள். இதில் நடக்கும் வரிஏய்ப்பு நம்பமுடியாததாக இருக்கும். முன்பெல்லாம் டிக்கெட் விலையை ஏற்றி விற்க சிறிது பயம் இருக்கும், முதல் மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்கள் கிடைக்காது, இப்போது வெளிப்படையாக ஆன்லைனிலேயே கொள்ளை நடக்கிறது.உண்மை கட்டணம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தவறியுள்ளது. எனது போராட்டத்தின் அடுத்த கட்டமாக மதுரையில் உள்ள திரையரங்குகளின் கட்டணவிவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளேன், பதில் வந்ததும் அதை போஸ்டர்களாக ஒட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்!" 

திரையரங்கில் அதிகவிலையில் டிக்கெட் விற்பனையாவது குறித்து சென்னை ஆல்பர்ட் திரையரங்க மேலாளர் மாரியப்பனிடம் கேட்டபோது, ‘அதிகபட்சமாக மால்களில் 120 வவிற்கப்படுகிறது. கபாலி மாதிரி பெரிய படங்களே ரிலீஸானாலும் சென்னையைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே டிக்கெட் விற்பனை நடைபெறுவதால் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ய வாய்ப்பே கிடையாது. அரசு என்ன விலை நிர்ணயம் செய்திருக்கிறதோ அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். சென்னை சிட்டிக்கு வெளியே உள்ள திரையரங்குகளில் வேண்டுமென்றால் நடக்கலாம். அவ்வாறு நடந்தாலும் அதற்கான விசாரணை, நடவடிக்கைகளை நாங்களே எடுப்போம்.

ஆனாலும், அரசு டிக்கெட் விலை நிர்ணயம் செய்து பலவருடங்கள் ஆகிறது. இன்றைய பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு டிக்கெட் விலையை மாற்றி நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதே எங்களது வேண்டுகோள். ஏனெனில் தமிழ்நாட்டில் தான் டிக்கெட் விலை மிகவும் குறைவு. எனவே, மால்களில் அதிகபட்சமாக 150 ரூபாயும், .சி. திரையரங்கில் 100, .சி. இல்லாத திரையரங்கில் 80, 90 என்ற விகிதத்தில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும். அவ்வாறு டிக்கெட் விலை மாற்றப்பட்டால், படம் ஓடாதோ என்ற பயத்திலேயே டிக்கெட் விலையை முதல் இரண்டு நாட்களில் அதிகரித்து திரையரங்கில் யாரும் டிக்கெட் விற்பனை செய்யவும் மாட்டார்கள், ரசிகர்களுக்கும் புகார் இருக்காது.   

இறுதியாக, சினிமா ஒரு உச்சகட்ட பொழுதுபோக்கு, ரசிகர்களுக்கும், திரையரங்கினருக்கும் ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டால் எல்லாமே சரியாகிடும். அதை அரசுதான் செய்ய வேண்டும்’ என்று நம்மிடம் கூறினார்.

திருட்டு விசிடி ஒழிப்பில் அவ்வளவு அக்கறை காட்டும் திரைத்துறையினர் திரையரங்க கட்டண சீரமைப்பிலும் அக்கறை காட்டினால் பொதுமக்கள் தானாக திரையரங்குகளுக்கு வரத்துவங்குவார்கள். 2009ல் விற்ற பொருட்கள் எல்லாம் விலை ஏறிவிட்ட போதிலும் திரையரங்க டிக்கெட்களை மட்டும் அதே விலையில் விற்கச் சொல்வது சரியாகாது. எனவே அரசு இப்போது உள்ள நிலைக்கேற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இப்படி மிகப்பெரிய கருப்புபணச் சந்தையாக சினிமா மாறி வருவதை ஒவ்வொரு ரசிகனும்,திரைத்துறையும் அரசும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.இல்லையெனில் சினிமா கனவுத்தொழிற்சாலையாக மட்டும் அல்லாமல் களவுத்தொழிற்சாலையாகவும் மாறிவிடும்.

- .காசி விஸ்வநாதன் (மாணவர் பத்திரிகையாளர்)