Published:Updated:

தியேட்டருக்கு போனா இந்த சந்தேகமெல்லாம் உங்களுக்கும் வருமா?

விகடன் விமர்சனக்குழு
தியேட்டருக்கு போனா இந்த சந்தேகமெல்லாம் உங்களுக்கும் வருமா?
தியேட்டருக்கு போனா இந்த சந்தேகமெல்லாம் உங்களுக்கும் வருமா?
தியேட்டருக்கு போனா இந்த சந்தேகமெல்லாம் உங்களுக்கும் வருமா?

ஒவ்வொரு தடவை தியேட்டருக்குப் போகும்போதும் படம் பார்க்கத் தோணுதோ இல்லையோ சில சந்தேகங்கள் மட்டும் தவறாமத் தோணுது. இதெல்லாம் எனக்கு மட்டும்தான் தோணுதா? இல்லை உங்களுக்குமா? இந்தச் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் கிடைக்குமா கிடைக்காதா? சரி, என் சந்தேக லிஸ்ட்டைப் போடுறேன். நீங்களும் உங்களோட சந்தேகங்களைச் சேர்த்துக்கோங்க.

* அதிசயமா அடிச்சுப் பிடிச்சு கரெக்ட் டைமுக்குப் போய் உட்கார்ந்து ஸ்கிரீனை வெறிக்கும்போது முதல்ல வர்றது சென்சார் சர்ட்டிஃபிகேட்தான். அதில் நம்ம கண்ணு மறக்காம தேடுறது படம் எத்தனை நிமிஷம்ங்கிற டியூரேஷனைத்தான். 140 நிமிஷத்துக்கு மேல இருந்தா 'ப்ச்', 'ம்க்கும்'னு முனகல்கள் அப்போவே ஆரம்பிச்சுடுது. நாம காசு கொடுத்துப் போற படம் ரொம்ப நேரம் ஓடினா கொடுத்த காசுக்கு வொர்த்னு நாம சந்தோஷம்தானே படணும்? ஏன் சலிச்சுக்கிறோம்? வாட் இஸ் தி லாஜிக்?

* நெட்டில் டிக்கெட் புக் பண்ண 30 ரூபாய் சர்வீஸ் சார்ஜ். அப்போ எத்தனை டிக்கெட் போட்டாலும் ஒரே தடவைதானே சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கணும்? அதென்ன டிக்கெட்டுக்கு 30 ரூவா? சரி அந்த 30 ரூபாயை மிச்சம் பிடிக்க கவுன்ட்டருக்கே வந்து டிக்கெட் எடுத்தா, பைக் பார்க்கிங் சார்ஜ்னு அதே முப்பதை வேற வழியில் பிடுங்கிடுறீங்களே, என்னங்க சார் உங்க சட்டம்?

தியேட்டருக்கு போனா இந்த சந்தேகமெல்லாம் உங்களுக்கும் வருமா?

* ஆலுமா டோலுமாவுக்கே இன்னும் அர்த்தம் தெரியாம முழிக்கிற ஆளுங்கய்யா நாங்க. ஆனாலும் கலை தாகம் காரணமா இந்தி, மலையாளம், இங்கிலீஷ்னு படம் பார்க்க வர்றோம். இதில் முக்கால்வாசிப் படங்களுக்கு சப் டைட்டிலே வர்றது இல்லையே ஏன்? என்ன லாஜிக்? நாங்க ரெபிடெக்ஸ் இண்டெக்ஸையே ரெண்டு வருஷம் படிக்கிற குரூப் ஜி! கொஞ்சம் பார்த்துச் செய்ங்க.

* சரி இங்கிலீஷ் படத்துக்கு சப் டைட்டில்தான் இல்லை. இன்டர்வெல்லாவது கரெக்ட்டா விடலாம்ல. அதென்ன பெரிய ஸ்டன்ட் சீனுக்கு நடுவில் படக்குனு ஸ்க்ரீனை ஆஃப் பண்ணி இடைவேளை விடுறது? ரெண்டு பார்ட்டா பார்க்க அதென்ன பாகுபலியா? அதுகூட பரவால்லை, சட்டுனு ஸ்க்ரீன் ஆஃப் ஆனதும் அலறிப் பதறி விலகுற ஜோடிங்க நிலைமை இருக்கே! பாவம் மை சன்! ( யாருய்யா அது சொந்த அனுபவமானு கேட்கிறது? செய்வினை வெச்சுடுவேன், பீ கேர்ஃபுல்)

* கவுன்ட்டர்ல பாப்கார்ன், பெப்ஸி எல்லாம் 'ஒருகோடிப்பே' ரேஞ்ச்ல விற்கிறீங்க சரி, ஆனா அதே ஐட்டங்களை காம்போவா வாங்கினா மட்டும் பாதி விலை குறையுதே? இப்போ மட்டும் எப்படி உங்களுக்குக் கட்டுப்படியாகுது? அப்படிக் கட்டுப்படி ஆகும்னா தனித்தனியா வாங்குறப்பவும் விலை குறைச்சே தரலாமே பெரியோர்களே!

* படம் முழுக்க ஹீரோ வர்றாரோ இல்லையோ, 'புகை பிடிப்பது தீங்கு, மது அருந்துவது தீங்கு'னு அறிவிப்புப் போட்டு பாடம் எடுக்கிறீங்களே... இதை நியாயமா ஸ்கூல்லதானே சொல்லித்தரணும்? இதை பொதுவெளில பாட்டா பாடினா ஜெயில்ல போடுறாங்களே, அது ஏன்? (இதைக் கேட்டதுக்கு என் மேல தே.பா.ச பாய்ஞ்சா நான் என்ன செய்யணும்?)

* ஒரு ட்ராக்லிஸ்ட்ல அஞ்சு பாட்டு இருந்தா அதுல ஒரு பாட்டு ரொம்ப நல்லா இருக்கும். பாட்டே இப்படி இருந்தா விஷுவல் எப்படி இருக்குமோனு ஆவலா தியேட்டருக்குப் போனா கரெக்டா அந்தப் பாட்டு மட்டும் மிஸ் ஆகும். இந்தா வரும், அந்தா வரும்னு அடுத்த ஷிஃப்ட்க்கு ஆள் வரும்வரை உட்கார்ந்து இருந்தாலும் பாட்டு வரவே வராது? நல்லா இருக்கிற பாட்டை நரபலி கொடுக்கணும்னு ஏதும் வேண்டுதலா?

* படம் முடிஞ்சு எல்லோரும் எழுந்து போகும்போது ப்ளூப்பர்ஸ்னு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த காமெடி எல்லாம் போடுறீங்க சரி, ஆனா இந்த சீன் எல்லாம் படத்துல வர்ற காமெடி சீன்களை விட நல்லா இருக்கே! பேசாம அதெல்லாம் எடுத்துட்டு இனி ப்ளூப்பர்ஸையே வெச்சுடலாமே! செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?

- நித்திஷ்