Published:Updated:

உதவி இயக்குநர் முதல் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் வரை - விஷால்! #HbdVishal

விகடன் விமர்சனக்குழு
உதவி இயக்குநர் முதல் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் வரை - விஷால்! #HbdVishal
உதவி இயக்குநர் முதல் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் வரை - விஷால்! #HbdVishal

'நானும் மதுரக்காரன் தான்டா!' எனத் திரையில் திமிறும் நடிகர் விஷால், இன்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடல், கறுத்த மேனி என ஆக்சன் ஹீரோவுக்கான மொத்த பேக்கேஜாக இருக்கும் இவர், போலீஸ் கதாபாத்திரத்திற்கு எய்ட் பேக் வைத்தால், பாலாவின் படத்தில் மாறுகண் கொண்டவராய் மாதக்கணக்கில் கஷ்டப்படுகிறார். நடிப்பு தவிர்த்து தயாரிப்பாளராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் பரபரப்புடன் செயல்பட்டு வரும் இவரைப் பற்றிய சிறு ப்ளாஷ் பேக்.

சரத்குமார், கவுண்டமணி-செந்தில் கூட்டணி நடித்து ஹிட் அடித்த 'மகாபிரபு' உள்பட பல திரைப்படங்களின் தயாரிப்பாளரான ஜி.கே.ரெட்டியின் இரண்டாவது மகன் தான் விஷால். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, கதாநாயகனாக சினிமாவில் பெரிய வெற்றி பெறாதபோதும், இன்று வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் முடித்த விஷால், நடிகர் அர்ஜூனிடம் 'வேதம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தயாரிப்பாளர் வி.ஞானவேலுவின் பார்வையில் பட்ட விஷால், அவரது தயாரிப்பில் உருவான 'செல்லமே' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சம்மதித்தார். விஷால் திரையுலகிற்குக் கதாநாயகனாக அறிமுகமானது இப்படித்தான் . 2004-ம் ஆண்டு வெளியான அப்படம் ஹிட்டானதோடு, ரசிகர்கள் மத்தியில் விஷாலுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்தது.

அடுத்த படமான சண்டைக்கோழி திரைப்படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிக்க, இயக்குநர் லிங்குசாமி இயக்கினார். இத்திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அனைத்து சென்டர்களிலும் இத்திரைப்படம் மாஸ்ஹிட் ஆனதால், விஷாலால் டாப் கியரைப் போட்டு ஆக்சன் ரூட்டில் எளிதாகப் பயணிக்க முடிந்தது. சண்டைக்கோழி வெற்றியைத் தொடர்ந்து  'திமிரு' படமும் கமர்சியல் ஹிட். (இத்திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ஷ்ரேயா ரெட்டி அதன்பின் அவரது சொந்த அண்ணியானது தனிக்கதை). ஆக்‌ஷன் ஹீரோவாக விஷால் உருவானதற்கு அடித்தளமாக இவ்விரண்டு திரைப்படங்களும் அமைந்தன. 'திமிரு' படத்தில் விஷாலின் நடிப்பு சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. நரம்பு புடைக்க இவர் பேசும் பன்ச் வசனங்கள் ரசிகர்களால் கவரப்பட, கம்பீரமான இவரது தோற்றம் மிகவும் உதவியாய் அமைந்தது. ஹிட், ஆவரேஜ், ப்ளாப் என இவரது சினிமா வாழ்க்கையும் அதன்பின் ஏற்ற இறக்கத்தோடுதான் அமைந்தது. என்றபோதும் வித்தியாசமான கதை, கதாபாத்திரம் போன்றவற்றால் விஷால், ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தார். 

பல்வேறு மொழித் திரையுலகினரும் கலந்துகொண்ட செலிப்ரட்டி கிரிக்கெட் லீக் விஷாலின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. போட்டியைத் தாண்டி சக நடிகர்கள் இடையே நட்புறவு வளர இதுதான் அடித்தளமாக இருந்தது. கோலிவுட்டைச் சேர்ந்த 'சென்னை ரைனோஸ்' அணியில் விளையாடிய ஆர்யா, விக்ராந்த், ஜெயம் ரவி, ஜீவா, விஷ்ணு விஷால், ரமணா போன்ற இளம் நடிகர்கள் ஒன்றாய் சேர்ந்து ஊர்சுற்றும் அளவுக்கு இவர்களுக்கிடையில் நட்பு மலர்ந்தது. இந்த நட்பானது இத்துடன் முடியவில்லை. தனது பாண்டியநாடு திரைப்படத்தில் விக்ராந்தை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். விஷ்ணு விஷாலுக்கு முக்கியப் படமாக அமைந்த 'ஜீவா' திரைப்படத்தை நடிகர் ஆர்யாவுடன் இணைந்து தயாரித்து விநியோகம் செய்தார். பின்னாளில் நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் பொறுப்பாளராக வெற்றி பெறவும் இந்த நட்பு உதவியது.

உதவி இயக்குநராகப் பணிபுரிந்து நடிகரான விஷால், எதிர்காலத்தில் நிச்சயமாக ஒரு படத்தை இயக்குவேன் எனத் தனது ஆசையை அடிக்கடி வெளிப்படுத்தியுள்ளார். அப்படி இயக்கினால் இளைய தளபதி விஜய் தான், தனது படத்தின் கதாநாயகனுக்கான முதல் சாய்ஸாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் பயின்ற லயோலா கல்லூரி மீது விஷாலுக்கு உணர்வுப் பூர்வமான தொடர்பு உண்டு. அது எந்த அளவுக்கு என்றால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்த முதல் படமான பாண்டியநாடு படத்தின் ஒத்தக்கடை பாடல் சிங்கிளை இங்கு வெளியிடும் அளவிற்கு! அப்படமும் பெரிய ஹிட். இதேபோல் பூஜை உள்ளிட்ட சில படங்களின் ஒரு பாடலையாவது இக்கல்லூரியில் வெளியிடுவதை ஒரு சென்டிமென்ட்டாகவே கருதுகிறார். அதேநேரத்தில் பொறுப்பாளராகப் பதவியேற்றபின், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழுவும் இங்கு தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தாயாரின் பெயரில் தொடங்கப்பட்ட 'தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை' மூலம் மூலம் கொல்லங்குடி கருப்பாயி உள்பட பல நலிந்த திரையுலகக் கலைஞர்களுக்கும், நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கும் கல்வி பயில ஒவ்வொரு ஆண்டும் உதவி அளித்து வருகிறார் விஷால்.

தமிழ்த் திரையுலகிற்குப் பெரும் சவாலாக உள்ள திருட்டு விசிடிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் விஷால். பல முறை இது தொடர்பாக புகார் அளித்ததோடு, ஸ்பாட்டில் இறங்கி கையும் களவுமாகப் பிடித்து நிஜ வாழ்க்கையிலும் தனது ஹீரோயிசத்தைக் காட்டியவர் இவர். தெறி, மனிதன் போன்ற எந்தப்படம் திருட்டு விசிடியாக வந்ததாக தனக்குப் புகார் வந்தாலும், உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, தனது படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் திருட்டு விசிடிகளுக்கு எதிராகப் பொங்கும் நடிகர்களிலிருந்து விஷால் வேறுபட்டார்.

கதாநாயகனாக முதல் ஐந்து திரைப்படங்களில் நடித்திருந்த போதும் நடிகர் சங்க உறுப்பினராகத் தன்னை அனுமதிக்கவில்லை என்ற ஆதங்கம் விஷாலுக்கு உண்டு. அதனால்தான் என்னவோ பின்னாளில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதில் இருந்து, நடிகர் சங்கத் தலைவர், பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு முறையாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முனைப்புக் காட்டினார். நாடக நடிகர் சங்கத்தினர் உட்பட பலரது ஆதரவும் முதுபெரும் உறுப்பினர்களுக்குத் தான் உண்டு என்ற மாயையை, பாண்டவர் அணியான விஷால் அணி உடைத்தெறிந்தது. பல வாரங்கள் மீடியாக்களின் ஹாட் டாபிக்காக விளங்கிய நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்தது. விஷால் பொறுப்பாளரானார். அவரது அணி பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. தான் பதவியேற்றதும் லயோலா கல்லூரியில் நடந்த முதல் நடிகர் சங்க பொதுக்குழுவில், நடிகர் சங்கத்திற்கான கட்டடத்திற்கான பழைய ஒப்பந்தம் நீக்கப்பட்டது. சங்கக் கட்டடம் கட்டுவதற்காக விஜயகாந்த் பாணியில் நடிகர்களை ஒன்றிணைத்து பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டினார். இந்தக் கட்டடம் 2018-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதும் முதல் வைபோகமாக தனது திருமணம்தான் நடக்கும் என்றும் அறிவித்திருக்கிறார். 

திருட்டு விசிடிகளுக்கு எதிராக ஆதாரப் பூர்வமாகக் குற்றச்சாட்டுகள் வைத்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செய்தியாளர்களின் மத்தியில் பேட்டி அளித்தார். விஷாலின் அடுத்த கவனம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு தயாரிப்பாளராக அவர் அங்கும் உறுப்பினர் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது. அனல் பறக்க புரட்சியாய் சுற்றித்திரியும் புரட்சித் தளபதிக்கு இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். #HBDVishal

- கருப்பு