Published:Updated:

வருண்-நித்யா காதலுக்கு வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்! #4YearsOfNEPV

நமது நிருபர்
வருண்-நித்யா காதலுக்கு வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்! #4YearsOfNEPV
வருண்-நித்யா காதலுக்கு வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்! #4YearsOfNEPV
வருண்-நித்யா காதலுக்கு வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்! #4YearsOfNEPV


தமிழ் சினிமாவில் அநேகப் படங்கள் காதலை மையமாகக் கொண்டவைதான்.  காதலின் அணுக்கத்தை ஒரு படம் பேசினால், இன்னொரு படம் காதலின் பிரிவைப் பேசும். ஆக, தமிழ் சினிமாவில் காதலைத் தவிர்க்க, படத்தின் இயக்குநர்களும் தயாராக இல்லை. ரசிகர்களும் ஏற்கத் தயாராக இல்லை. காதலையும், அதன் அடிப்படை விஷயங்களான ஊடலையும், ஊடல் நிமித்தங்களையும் பேசிய கதைதான் 'நீதானே என் பொன்வசந்தம்'. வருண்-நித்யா இருவருக்கும் இடையேயான காதலை மற்ற எல்லாவற்றையும் போல எளிதாகக் கடந்துவிட முடியாமல் ரசிக்கவைத்த காரணத்தால் நீதானே என் பொன்வசந்தம் நான்கு ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்பட வேண்டிய படம்தான். 
#4YearsOfNeethaaneEnPonvasantham 

பார்வையாளர்களுக்கு பழக்கப்பட்ட கதைக்களம் என்றாலும், அதை வித்தியாசப்படுத்திச் சாத்தியமாக்கும் வித்தைகள் கற்றோரே இங்கே வெற்றி பெறுகிறார்கள். இதுவும், சிறுவயது முதலே காதலித்து வந்த இருவர் ஈகோ முட்டல் மோதல்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவாறு இணையும் இயல்பான கதைதான். அதை கௌதம் மேனன்  தனது ஸ்டைலில் படைத்ததுதான் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. கௌதம் இதற்கு முன்பு இயக்கிய 'வின்னைத்தாண்டி வருவாயா' படத்தின் சாயல் இந்தப் படத்தில் இருந்தாலும், காதலைக் காட்சிப்படுத்துவதில் நுணுக்கம் காட்டுவதில் காட்டி இயக்குநர் நம்மை ஈர்த்திருப்பார். பொதுவாக,  க்ளைமாக்ஸில் கைகூடும் காதல்கள் மிகுந்த நேசிப்பைப் பெறுவதுண்டு. சந்தர்ப்பவசத்தால் தனக்கு வாய்க்காத ஒரு மகிழ்ச்சி இன்னொருவருக்குக் கிடைக்கும்போது இயல்பாக தோன்றும் உவகையை ரசிகர்களுக்குக் கடத்தி அதில் ஜெயித்திருப்பார் கௌதம். ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, முதல்முறை பார்ப்பதைப் போன்ற உணர்வையும், சில காட்சிகளின் வீரியத்தால் பிரிவின் வலியில் துயரத்தின் உச்சத்திற்குக் கொண்டுசெல்வதும் பின் மகிழ்வின் உச்சத்தில் ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைப்பதும்தான் படத்தின் வெற்றி. 

இந்தப் படத்திற்கு முதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டு, தவிர்க்க இயலாத  சூழலில் முடியாமல் போகவே, இளையராஜா இசையமைத்தார். இளையராஜாவின் இசையைத் தாங்கிப் படத்தில் வந்த எட்டுப் பாடல்களும் ரசிகர்களிடையே  மிகுந்த வரவேற்பைப் பெற்றன.  இசைஞானியின் இசையை வருடியபடி குறிப்பிட்ட சூழல்களின் தன்மையை ரசிகர்களுக்கு அப்படியே அள்ளித் தெளிக்கும் நா.முத்துக்குமாரின் வரிகளும் பொருந்தியது இன்னும் சிறப்பு. 'சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்...' பாடலும், 'சற்று முன்பு பார்த்த...' பாடலும் அந்த வருடத்தின் மெலடி ஹிட். 

வருண்-நித்யா காதலுக்கு வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்! #4YearsOfNEPV


கதை, பின்னணி இசை, பாடல்கள், திரைக்கதை ஓட்டம் இவை எல்லாவற்றையும் தாண்டி படத்தில் இன்னும் இன்னும் வசீகரிக்கும் ஒரு ஜீவன் சமந்தா. பத்தாவது படிக்கும் பெண்ணாக பால்யத்தின் அழகைக் காட்டும் காட்சிகள், அவர் பேசும் வசனங்கள் எல்லாமே வெறும் நடிப்பாக அல்லாமல்  உணர்வின் வழியாகப் பேசும் மொழியாக வெளிப்படும். அந்த வயதில் ஒரு பெண்ணுக்கு உரிய பண்புகளைக் காட்டுவதாகட்டும், கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் வரும் மெச்சூர்ட் நடிப்பை வெளிப்படுத்துவதாகட்டும் ஒவ்வொரு காட்சிகளிலும், முகபாவனைகளிலும், கண்ணசைவிலும், குதூகலச் சிரிப்பிலும், ஏறிடும் பார்வையிலும், கெஞ்சலிலும், கொஞ்சலிலும் என... ஒவ்வொரு நொடியிலும்  ஆயிரம் உணர்வுகளை வெளிக்காட்டி அத்தனை உணர்ச்சிகளையும் ரசிகர்களிடத்தில் இறக்கி வைக்கிற அந்த நித்யா கதாபாத்திரம்தான் படத்தின் பாதி. அதற்குப் பின்னே சமந்தா பல படங்கள் நடித்திருந்தாலும் எப்போதும் மேற்கோள் காட்டப்படக்கூடிய நடிப்பு மைல்கல் அந்த நித்யா கேரக்டர்தான்.

தனக்குப் பிடித்தவன் ஒரு வார்த்தை தன்னிடம் பேசிவிட்டாலே குதூகலிக்கும் காதலிகள் சூழ்ந்ததுதான் நம் சமூகம். பொருள் ஈட்டும் பொருட்டு தேசம்விட்டுத் தேசம் செல்லும் தலைவன் பலமாதங்கள் கழித்து வரும்வரை அவனுக்காகவே வாசலைப் பார்த்தபடிக் காத்திருந்து தலைவன் வீடடைந்ததும் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கக் கழுத்தைக் கட்டிக்கொள்ளும் பெண்களை வழிவழியாகக் கொண்டது நம் இலக்கியப் பாரம்பரியம். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எவ்வளவு ஊடல்கள், பிரிவுகள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்தல் எனும் மாண்பு இருக்கும்வரை காதலுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. அந்த வகையில் காதலையும், பிரிவின் சோகத்தையும், எத்தனை ஆண்டுகளானாலும் உண்மையான காதல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெடித்துப் பெருகும் கண்ணீரைப் போல அணைபோட முடியாமல் வெளிப்படும் என்பதைத்தான் இந்தப்படம் காட்சிகளாய் விவரித்தது. காண்பவர்களையும் மகிழ்வித்தது. 

கதாநாயகன் ஜீவா பள்ளிப்பருவத்தில் காதலிக்கும்போதும், குடும்ப சூழல்களாலும் ஈகோ பிரச்னைகளாலும் சமந்தாவைப் பிரியும்போதும், திரும்பவும் தேடி மணப்பாடுக்குச் செல்லும்போது சமந்தாவின் தவிர்த்தலை எதிர்கொண்டு ஏங்குவதுமாக ஒரு பெண்ணின் கனவுக்காதலனாக வருண் கதாபாத்திரத்தை அழகாக வெளிக்காட்டியிருப்பார் ஜீவா. 

நானி ஹீரோவாகவும் சமந்தா நாயகியாகவும் நடிக்க, தெலுங்கில் 'யேதோ வெள்ளிப்போயிந்தி மனசு' எனும் பெயரில் வெளிவந்து அங்கேயும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இந்தியில் ஆதித்யா ராய் கபூர் ஹீரோவாக நடிக்க அங்கேயும் சமந்தாதான் நாயகி. இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், தெலுங்கிலும் சமந்தாவே டப்பிங் பேசி இதே ஃபீலை தெலுங்கு ரசிகர்களிடமும் கொண்டுசேர்த்தார். 

நம் வாழ்விலும் எத்தனையோ காதலன்களையும், காதலிகளையும் நாம் கடந்திருக்கலாம். ஆனால், எல்லாக் காதலிகளும்  நித்யாக்கள் அல்ல. எல்லாக் காதலன்களும் வருண்கள் அல்ல. காதலர்களுள் சிலரே வருண் ஆகின்றனர். காதலிகளில் சிலரே நித்யாவாகின்றனர். காதலனோ /காதலியோ நம் வாழ்க்கையினை வருடிச்செல்லும் பொன்வசந்தமாகிப்போக, எப்போதும் காதல் மட்டுமே நிஜமாகிறது.

- விக்கி