Published:Updated:

‘தோனி’ சுஷாந்த் சிங்... இப்போ பைலட்! #BollywoodBits

முத்து பகவத்
‘தோனி’ சுஷாந்த் சிங்... இப்போ பைலட்! #BollywoodBits
‘தோனி’ சுஷாந்த் சிங்... இப்போ பைலட்! #BollywoodBits

ர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்தத் துறையிலும் எளிதில் சாதித்துவிடமுடியாது. ஆர்வத்தையும் தாண்டி, முறையாக மேற்கொள்ளபடும்  கூடுதல் பயிற்சிகளும் தேவை. நடிப்பையும் தாண்டி, படத்திற்காக ஸ்பெஷல் பயிற்சிகளை நடிக-நடிகைகள் கற்றுக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் பாலிவுட்டில் எதிர்பார்க்கப்படும் சில படங்களுக்காக அதில் நடிக்கும் பாலிவுட் நடிகர்கள் என்னென்ன வித்தையெல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? 

சாஹித் கபூர்: 

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, மிரளவைத்த ‘பாஜிரா(வ்) மஸ்தானி’ பட இயக்குநர் சஞ்சை லீலா பன்சாலி மீண்டும் ‘பத்மாவதி’ என்றொரு  வரலாற்றுக் காவியத்தை இயக்கிவருகிறார். சாஹித் கபூர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவரும் அந்தப் படத்தில் ராணி பத்மினியாக தீபிகா நடிக்கிறார். இப்படத்திற்காக சாஹித் கபூர் முறையாக வாள் சண்டை மற்றும் குதிரையேற்றத்தைப் பயின்று கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ராவல் ரத்தன்  சிங் என்ற மன்னராக சாஹித் நடிக்கிறார். அதற்காகத்தான் இந்தக் கடினப்பயிற்சி.  படத்தில் கச்சிதமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வித்தையையும் நுணுக்கமாக கற்றுவருகிறார். அதற்காக இரவுகளில் ஷூட்டிங் என்றால் பகலிலும், பகல் ஷூட்டிங் நேரத்தில் இரவிலும் பயிற்சி மேற்கொள்கிறார். சின்சியாரிட்டி சிங்கம்

ரன்பீர் கபூர்: 

‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’ தமிழில் வசூல்ராஜாவாகவும், ‘3 இடியட்ஸ்’ தமிழில் நண்பனாகவும் ரிலீஸாகி ஹிட்டடித்தது. சமீபத்தில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான ‘பிகே’ படத்தையும் தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுவருகிறார்கள் நம்ம ஊரு இயக்குநர்கள். இந்த சமயத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையாமாக கொண்டு பயோபிக் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் ராஜ்குமார். இந்தப் படத்தில் சஞ்சய் தத் கேரக்டரில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். 80களில் சஞ்சய் தத் எப்படி இருந்தாரோ அதே போல உடலமைப்பை, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமாக மாற்றிவருகிறார் ரன்பிர் கபூர். அதற்காக முறையான உடற்பயிற்சியை இரவுபகலாக மேற்கொண்டுவருகிறார். 

சுஷாந்த் சிங்: 

எம்.எஸ். தோனியின் பயோபிக் படத்திற்காக கிரிக்கெட் மைதானத்திலேயே தவம் கிடந்தவர், இப்பொழுது விமான நிலையத்தைச் சுற்றிவருகிறார். இவரின் அடுத்த படத்தின் பெயர் ‘சன்ட மாமா தூர் கே’ (Chanda mama door ke). இந்தப் படத்தில் விண்வெளி வீரராக நடிக்கிறார். அதற்காக விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியில் இருக்கிறார் ஹீரோ.  அதுவும் தனியாகவே விமானத்தை ஓட்டும் அளவிற்கு எக்ஸ்பர்ட்டாகிவிட்டார். ஒவ்வொரு படத்திற்காகவும் புதிதாக எதாவது கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர்களில் சுஷாந்த்தும் ஒருவர்.  

சஞ்சய் தத்: 

ஒரு காலத்தில் சஞ்சய் தத் படங்கள் என்றாலே,  ரசிகர்கள் பட்டாளம் குவியும். இப்பொழுது முதுமை தட்டிவிட்டாலும் இவருடைய ரசிகர்கள், இவரைத் திரையில் பார்த்தாலே பரவசமாகிவிடுகிறார்கள்.  ரசிகர்களுக்காக சஞ்சய் தத் இனிமேல் குடிக்கமாட்டேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக முறையான பயிற்சியும் மேற்கொண்டுவருகிறார். “ரசிகர்களுக்கு என்னைப் பிடிக்கவேண்டுமென்றால், நான் ரசிகர்கள் ரசிக்கிறமாதிரி இருக்கவேண்டும். அவர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்று நினைக்கிறேன். அதற்காக புதுசுபுதுசான பயிற்சிகளும், கற்றலும் அவசியம்” என்கிறார். 

சாரா அலிகான்: 

கரண் மல்கோத்ரா இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் மூலம் அறிமுகமாகவிருக்கும் வாரிசு நடிகை சாரா அலிகான். இவர் சைஃப் அலிகான் மற்றும் அமிர்தா சிங் இணையின்  மகள்.  முதல் படத்திலேயே நடிப்பில் சிக்ஸர் விளாசி, பெற்றோர்களுக்கு புகழும் பாராட்டையும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்று திட்டமாம். அதற்காக நடிப்பையும் தாண்டி   பைக் ரைடிங் கற்றுக்கொண்டிருக்கிறார் இந்த அழகுப் பதுமை. ஏனென்றால் அந்தப் படத்தில் ஹீரோ ஹிருத்திக் ரோஷன். இருவரும் தனித்தனி பைக்குகளில் ரைடிங் செல்வது போல காட்சிகள் இருக்கிறதாம். அதற்காகத்தான் பயிற்சிகளாம். “ஹிருத்திக்கை விட செமத்தியாக பைக் ஓட்டுவேன்” என்று சவால் விடுகிறார் சாரா.  

- பி.எஸ்.முத்து