Published:Updated:

டியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா?! #HBDVikram

மா.பாண்டியராஜன்
டியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா?!  #HBDVikram
டியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா?! #HBDVikram

என் பள்ளிப்பருவம். என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தியேட்டரில் ‘தூள்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் பார்க்க ஐந்து ரூபாயோடு தியேட்டருக்குக் கிளம்பினேன். லேட்டா போனதால ஹவுஸ்ஃபுல் போர்டைத்தான் பார்த்தேன். வீடு பக்கத்தில் இருந்தாலும், நான் திரும்பிப் போகலை. தியேட்டர் வாசலிலே காத்திருந்து மேட்னி ஷோவுக்கு முதல் ஆளாக டிக்கெட் வாங்கி  படம் பார்த்தேன். இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, ‘தூள்’ படத்தை அதுக்கு முந்தைய  வாரம்தான் அதே தியேட்டர்ல பார்த்தேன். அதுதான் விக்ரம் கிரியேட் பண்ணுன மேஜிக். இன்று அந்த மேஜிக் கிரியேட்டருக்குப் பிறந்தநாள்... 

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி !

தன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி ஆயுதமாக தன் கையில் எடுத்தது ‘சேது’  படத்தைதான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ராதிகாவைச் சந்தித்த விக்ரம், ‘நான் இப்போ ‘சேது’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படமும் எனக்கு சரியா போகலைன்னா நீங்க எடுத்துட்டு இருக்கிற ‘சித்தி’  நாடகத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ன்னு கேட்டாராம். ‘சேது’ விக்ரமுக்குக் கொடுத்தது வரலாற்று வெற்றி. 9 ஆண்டுகால காத்திருப்புக்குக் கிடைத்த விஸ்வரூப வெற்றி. 

எக்ஸ்ட்ரா உழைப்பு, கொஞ்சம் ரெஸ்ட்!

ஒரு படத்துக்காக தன்னை முழுவதும்  அர்ப்பணித்து, உடலை வருத்தி, எத்தனை மாதங்கள் வேண்டுமானலும் தனது  கடின உழைப்பைக் கொண்டு, பார்க்கிறவர்கள் எல்லாம், ‘என்னடா இந்த மனுஷன்  இப்படி உழைக்கிறாரு’னு சொல்கிற அளவுக்குத் தன்னைத்தானே வருத்திக்  கொண்டு நடிப்பார். அப்படி ஒரு படத்தை கொடுத்தப் பின்னர், அதற்கடுத்து  கூலாக, ரிலாக்ஸாக ஒரு படத்தை தேர்வு செய்து நடிப்பார். அதுதான் அவருக்கான ரிலாக்ஸ் டைம். அப்படி தேர்ந்தெடுக்கும் படத்திலும் தனது நடிப்பிற்கு தீனி போடும் அளவிற்கு அதில் ஏதாவது விஷயம் வைத்திருப்பார்.  ஒருசில படங்களுக்கு பல மாதங்களும் செலவழித்திருக்கிறார், ஒருசில படங்களை சில மாதங்களிலேயே முடித்திருக்கிறார். 

ரசிகர்களுக்கே முன்னுரிமை!

இந்த சப்-டைட்டிலுக்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஒரு சம்பவமே போதும், விக்ரம் தன் ரசிகர்களின் மீது  எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதற்கு. ஏசியா நெட் விருது நிகழ்ச்சியில், விக்ரம் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி  ஒரு ரசிகர் ஓடி வந்திருக்கிறார். அது நட்சத்திரங்கள் மட்டுமே அமர்ந்திருக்கும்  இடம் என்பதால் பிறருக்கு அனுமதியில்லை. அதனால் அந்த நபரை அங்கிருந்த  பவுன்சர்கள் தடுத்தனர். அதையும் மீறி அந்த நபர் விக்ரமை நோக்கி வந்ததால்,  பவுன்சர்கள் அவரை தள்ளி விட்டனர். இதனை கண்ட விக்ரம் உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்து பவுன்சர்களை தடுக்க சென்றார். விக்ரமிற்கு  பக்கத்தில் இருந்தவர் விக்ரமை தடுக்க, அவரையும் மீறி விக்ரம் பவுன்சர்களை  விலக்கிவிட்டு அந்த நபரை அழைத்தார். அந்த ரசிகர் விக்ரமை கட்டி  அணைத்து, முத்தம் கொடுத்து, பின் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.  இதனை அருகில் இருந்து பார்த்தவர்கள் சிலர், விக்ரமின் இந்த குணத்தை கண்டு  நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர். இது தான் விக்ரம், இதுதான் தன் ரசிகர் மீது  அவர் வைத்திருக்கும் பாசம்.

இந்த சம்பவத்தின் வீடியோ இதோ...

ரசிகர்களுக்கு சீயான்; நண்பர்களுக்கு கென்னி!

ரசிகர்களுக்கு சீயான் விக்ரமாக இருப்பவர், தனது நண்பர்களுக்கு என்றைக்குமே கென்னியாகத்தான்  இருக்கிறார். எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் அதனை தலை மேல் தூக்கி  வைத்துக் கொண்டு, ஓவர் பந்தாவாக வலம் வராமல், என்றைக்கும் ஒரே  மாதிரியாக இருப்பவர். அதனால்தான் தன் நண்பர்களுக்கு  கென்னியாகவே இருந்து வருகிறார். 

விஜய்யின் நெருங்கிய நண்பர்! 

நடிகர் விஜய்யும் விக்ரமும் ஒரே கல்லூரியில்  வேறு வேறு துறைகளில் படித்தாலும், கல்லூரி நாள்களில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் நட்பை அப்படியே காண்பித்திருக்கும் விகடனில் வெளி வந்த இவர்களின் பேட்டி. அந்தப் பேட்டியில் இருவரும் சேர்ந்து நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் சொல்லியிருப்பார்கள். ‘நண்பன்’  படத்தில் விஜய்யுடன் நடிக்க முதலில் பேசப்பட்டது விக்ரமிடம் தான் என்றும்,  பிறகு கால்ஷீட் பிரச்னையால் அது நடக்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன.  ஆனால், ஒரு நாள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வரும். அதுவரை காத்திருப்போம்.

அஜித்தால் கிடைத்த வாய்ப்பு!

விஜய்க்கும் விக்ரமிற்கும் எப்படி நெருங்கிய  பழக்கம் இருக்கிறதோ அதே போல் அஜித்துக்கும் விக்ரமிற்கும் இடையே ஒரு  நல்ல நட்பு உள்ளது. இவர்களின் நட்பு, அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’  படத்திற்காக அஜித்துக்கு குரல் கொடுத்ததில் இருந்து ஆரம்பமானது என்று சொல்லலாம். அதற்குப் பிறகு ‘உல்லாசம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். விக்ரமின் கேரியரில் மறக்க முடியாத பாட்டு என்றால் அது  ‘ஜெமினி’ படத்தின் ‘ஓ போடு...’ பாட்டாகத் தான் இருக்கமுடியும். பட்டி  தொட்டு எங்கும் ஹைடெசிபலில் ஒலித்தது இந்த பாடல். முதலில் ‘ஜெமினி’  படத்திற்கு நடிக்க அஜித்தை தான் தேர்வு செய்திருந்தாராம் இயக்குநர் சரண்.  பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போக அந்த  வாய்ப்பு விக்ரமிற்கு வந்தது, அவருக்கு ஹிட்டையும் கொடுத்தது. 

பாடகராகவும் கலக்கிய விக்ரம்!

தனது படங்களிலும், பிற நடிகர்களின் படங்களிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார் விக்ரம். அதிலும் அவர் நடித்த  ‘கந்தசாமி’ படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே பாடினார். தமிழிலில்  மட்டுமல்ல, கந்தசாமி படத்தின் தெலுங்கு டப்பிலும் அவரே அனைத்து  பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பது ஹைலைட்ஸ். ‘ஜெமினி’ படத்தின்  ‘ஓ போடு...’ பாடலையும் இவர் தான் பாடினார்.

என்னது... விக்ரமிற்கு வயசாகிடுச்சா..? 

விக்ரமின் வயதை அவரின் உருவத்தை  வைத்து கணிப்பது கடினம்.  திருப்பூரில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில்  படப்படிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். 50 தொழிற்சாலைகள் இருக்கும் தொழிற்பேட்டை அது! அங்குள்ள செக்யூரிடிகள் அந்த ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். என் நண்பரின் தொழிற்சாலைக்கு முன்பு, நாங்கள் நின்று கொண்டிருந்தோம். கார் சேஸிங் காட்சிப் படமாக்கத் தயாராக இருந்தார்கள். சடாரென்று கேரவனுக்குள் இருந்து குதித்து... பரபரவென நடந்து வருகிறார் விக்ரம். எல்லோரும் எட்டிப் பார்க்க, நண்பரின் தொழிற்சாலை கேட்டில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்டாஃப் எங்களை விலக்கிக் கொண்டு அலுவலகத்துக்கு உள்ளே சென்றார். 

கொஞ்ச நேரம் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தோம். அந்த சக ஊழியரைப் பார்த்ததும் நண்பர் ‘கரெக்டா விக்ரம் வர்றப்ப ஏன் உள்ள வந்துட்டீங்க?’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னது: “குற்ற உணர்ச்சியா இருக்கு சார், விக்ரமைப் பார்க்கறப்ப. நாலுநாளா ஷூட்டிங் நடந்துட்டிருக்கு. நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். நேத்துதான் என் பையன் சொல்றான்.. அவருக்கு 49 வயசாச்சாமே? எனக்கு 44 வயசாச்சு. எப்டி வயசானவனா இருக்கேன் பாருங்க. அந்தாள் எப்டி உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கார்னு பாருங்க. ஒருவேளை டூப் வெச்சு ஏமாத்துறாங்க போலனு நெனைச்சேன். இல்ல.. அது விக்ரம்தான்!”  

அவர் கண்முன்னே பார்த்த  விக்ரமின் வேகமும், அவரது வயதையும் அவரால் நம்ப முடியவில்லை. ஆமாம், இன்று விக்ரமிற்கு 52 வயது தொடங்கி விட்டது... ஆனால்  அவர் என்றும் ‘புதிய மன்னர்’ தான்...

பிறந்தநாள் வாழ்த்துகள் சீயான்..!