Published:Updated:

“ஏன் எனக்கு சான்ஸ் தர மாட்டேங்குறாங்க?” - நடிகை உமா ரியாஸின் ஆதங்கம்

வே.கிருஷ்ணவேணி
“ஏன் எனக்கு சான்ஸ் தர மாட்டேங்குறாங்க?” - நடிகை உமா ரியாஸின் ஆதங்கம்
“ஏன் எனக்கு சான்ஸ் தர மாட்டேங்குறாங்க?” - நடிகை உமா ரியாஸின் ஆதங்கம்

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உமா ரியாஸ். கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்கள் அமையவில்லை. அவரிடம் பேச ஆரம்பித்ததுமே புலம்புகிறார், 

‘ஏன் இப்போ இருக்கிற சினிமா துறை இப்படி மாறியிருக்குனு தெரியல. இவங்க இந்தப் படத்துக்கு ஒத்து வருவாங்க, இல்ல ஒத்து வரமாட்டாங்கனு இயக்குநர்களே எப்படி முடிவு பண்ணிக்கிறாங்கனு தெரியல. வாய்ப்புக் கொடுத்தால்தானே எங்களை நாங்க நிரூபிக்க முடியும். வாய்ப்பு கொடுக்காமலேயே புறக்கணிக்கும்போது ஏற்படுகிற வலி அவங்களுக்குத் தெரியுமானு தெரியல. 

எங்களோட தனிப்பட்ட சந்தோஷம், துக்கம்னு அனைத்து உணர்ச்சிகளையும் மறைத்துக்கொண்டு நாங்க ஸ்கிரீன் முன்னாடி நின்னு எங்க நடிப்பை வெளிப்படுத்துறோம். ஆனால், பல பேருடைய வாழ்க்கையில் துன்பம் மட்டுமே மிஞ்சுது. ஒரு சில வாய்ப்புகள் நல்லபடியாக கிடைத்து, நல்ல பெயர் எடுத்த பிறகும் தொடர்ந்து எங்களை நிரூபிக்கப் போதுமான வாய்ப்பு கிடைக்கிறதே இல்லை. எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதானு ஏங்குகிற அளவுக்கு வந்துட்டேன் நான். 

என் கணவருக்கும் இதேபோல பிரச்னை இருக்கிறது. மலையாளத்தைப் பொருத்தவரை தமிழில் அவர் பிஸியாக இருப்பதாக நினைச்சுக்கிறாங்க. தமிழைப் பொருத்தவரை மலையாளத்தில் அவர் பிஸியாக இருக்கிறதா நினைக்கிறாங்க. இப்படி எங்களிடம் கேட்காமலேயே அவங்களாகவே ஒரு முடிவு பண்ணி வச்சுக்கிறாங்க. 

சமீபகாலமாக என் நண்பர்களே தொடர்ந்து, 'நீ ஏன் எதுலயும் நடிக்கிறது இல்ல. என்ன பிரச்னை'னு தொடர்ந்து பேசும் போது மனசு ரொம்பவே சங்கடப்படுது. இந்த நிலை மாறணும். நான் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். கணவரை இழந்த என் அம்மா எங்களைக் கஷ்டப்பட்டுத்தான் வளர்த்தாங்க. 'எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் சோர்ந்து போயிடக்கூடாது. யாருக்காகவும் உன் லட்சியத்தை விட்டுக் கொடுத்துடக்கூடாது'னு சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. அப்படித்தான் இப்போ வரைக்கும் நானும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஆனால், என்னைப் போலவே எல்லா நடிகர்களும் நினைப்பாங்களானு தெரியல. சில பேர் தன்னம்பிக்கையை விட்டுடுறதாலதான் தவறான முடிவுகளை எடுக்கிறாங்க. இப்போ நான் இருக்கிற இடத்தில் வேற ஒருத்தர் இருந்தா எப்படி இருப்பாங்கனு எனக்குத் தெரியல'' என்றவரிடம் டி.வி தொடரில் கமிட் ஆன விஷயம் பற்றி கேட்டோம், 

'தொடரில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சதும் சந்தோஷமாகத்தான் கமிட் ஆனேன். ராடன் தயாரிப்பில் விஜய் டி.வி யில் ஒளிபரப்பான 'விண்ணைத்தாண்டி வருவாயா' சீரியலில் எனக்கு நல்ல கதாப்பாத்திரம் இருந்தது. அதை வச்சுத்தான் ஓ.கே சொன்னேன். ஆனால், என் நேரமோ என்னமோ தெரியல. அந்த சீரியல் ஒரு மாதம் கூட ஒளிபரப்பாகல. இப்படிப் பல வாய்ப்புகள் எனக்கு வராமல் போனாலோ, கைவிட்டுப் போனாலோ எனக்கு மனசு கஷ்டமாக இருக்கத்தான் செய்யும். ஆனாலும், அதைத் தாண்டி வரப் பழகிட்டேன். எதோ ஒரு பெரிய விஷயத்தைச் சாதிக்கத்தான் இவை எல்லாம் தள்ளிப் போவதாக நினைக்கிறேன். எனக்கு என் வேலை, ஆசை எல்லாத்தையும் விட இப்போ குடும்பம்தான் பெருசாத் தெரியுது. என் குடும்பத்தைப் பார்த்துக்கிறதுலதான் என் கவனம் முழுக்க இருக்கு. காலையில் இருந்து மாலை வரை பரபரப்பாக வேலைப் பார்த்துட்டு இருக்கேன். எதையாவது நினைத்துக் கவலைப்பட்டாலோ, தவறான முடிவெடுத்தாலோ கண்டிப்பாக அது கோழைத்தனம்தான். நான் கோழை இல்லை.'' என்றவர் புதிதாக ஒரு இதழுக்குப் பொறுப்பாளராகியிருக்கிறார். 

''பிசினஸ் லைஃப் ஸ்டைல் இதழலான unique magazine தமிழ்நாட்டுக்கு துணைப் பொறுப்பாளராக இருக்கிறேன். புதுப் புது விஷயங்களை அதில் சொல்லிட்டு இருக்கோம். அது ஒரு பக்கம் திருப்திகரமாக இருந்தாலும், நடிப்பு என்கிற கலையில் எப்போதும் பிஸியாக இருக்கணும் என்பதுதான் என் ஆசை. தொகுப்பாளினியாகப் பல வருடங்களுக்கு முன்பு விஜய் டி.வி யில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் இருந்தார். பிறகு, அதே நிகழ்ச்சிக்கு நடுவராகவும் பல வருடங்கள் தொடர்ந்தார். அது குறித்து கேட்டதற்கு, ''அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியப்போ எனக்கு நிஜமாகவே ஆங்கரிங் தெரியாது. இன்னும் சொல்லபோனா அங்கப் போய்தான் கத்துக்கிட்டேன். நமக்கு இனிமே ஆங்கரிங் செட் ஆகாதுனு சொல்லி நடுவராக பொறுப்பேத்துக்கிட்டேன். ஆனால், இப்போ இருக்கிற தொகுப்பாளர்கள் செம்மையா கலக்குறாங்க. புதுப் புது கான்சப்ட்டை உருவாக்குறாங்க. எனக்கு அவங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு. இப்போதைக்கு என் வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமாக நினைப்பது நான் வளர்க்கும் நாய்களைத்தான். DOG என்பதை திருப்பிப் போட்டால், GOD என வரும். அப்படி என் கடவுள் அவங்கதான்.''