Published:Updated:

தூர்தர்ஷனில் புதுப்பாடல் ஒளிபரப்ப ரூ.10,000. அன்று என்ன நடந்தது? #VikatanExclusive

எம்.குணா
தூர்தர்ஷனில் புதுப்பாடல் ஒளிபரப்ப  ரூ.10,000. அன்று என்ன நடந்தது? #VikatanExclusive
தூர்தர்ஷனில் புதுப்பாடல் ஒளிபரப்ப ரூ.10,000. அன்று என்ன நடந்தது? #VikatanExclusive

இதுவரை தமிழ்சினிமா வரலாற்றில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து செயல்பட்டதே இல்லை. முதன்முறையாக கடந்த 11-ம்தேதி அன்று தினசரி பத்திரிகைகளில் இரண்டு அமைப்புகளும் சேர்ந்து 'இனிமேல் தமிழில் வெளிவரும் டிவி சேனல்களில் புதுப்படங்களின் பாடல் காட்சிகளோ, க்ளிப்பிங்குகளோ தயாரிப்பாளர் அனுமதியின்றி ஒளிபரப்பு செய்யக்கூடாது மீறி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூர் ஆம்னி பஸ்களில் புதுப்படங்ளை ஒளிபரப்பக்கூடாது' என்று எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.  இப்போது தலைவர் பதவிக்கு வந்தபிறகு விஷால் குழுவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையை தமிழ்சினிமா உலகினர் உற்றுநோக்கி வருகின்றனர். 

இந்த அறிக்கை குறித்து முன்னாள்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயாரிடம் கேட்டோம். ''ஆரம்பகாலத்தில் சென்னை தூர்தர்ஷனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு ஏழரை மணிக்கு புதுப்பட பாடல்களை ஒளிபரப்புவார்கள். ஒளிபரப்பாகும் புதுப்பாடல் ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் வீதம் கட்டணம் வசூலிப்பார்கள் அதுவும் மூன்று வாரத்துக்கு மட்டுமே நான்காவது வாரத்தில் பழைய பாடல்களை மட்டுமே ஒளிபரப்புவார்கள். திடீரென ஒருநாள் 'இனிமேல் புதுப்பாடல் ஒளிபரப்ப வேண்டுமானால் ஒரு பாடலுக்கு 20,000 பணம் செலுத்த வேண்டும்" என்று தூர்தர்ஷன் அறிவித்தது. அப்போது கவுன்சில் பொறுப்பில் இருந்த நானும், கே.ஆர்.ஜியும் சேர்ந்து தூர்தர்ஷனுக்கு சென்று டைரக்டர் நடராஜனிடம் முறையிட்டோம், சண்டை போட்டோம். 'என்னால் ஒன்றும் செய்ய முடியாது, டெல்லிக்கு போனாலும் உங்களுக்கு சாதகமான பதில்வராது' என்று கைவிரித்து விட்டார். அந்த காலகட்டத்தில் கே.பாலசந்தருக்கும், தூர்தர்ஷனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்த காலம். 

கவுன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்டி நானும், கே.ஆர்.ஜியும் ஒரு தனியார் சேனல் உரிமையாளரைச் சந்தித்தோம் 'புதுப்படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் உங்களுக்கே கொடுத்து விடுகிறோம். நீங்கள் இரண்டு லட்சம் கொடுத்து விடுங்கள்' என்றோம். முதலில் 'என்னால்  அவ்வளவு பணம் தரமுடியாது' என்று சொன்னவர் அதன்பின் ஒரு லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார். கவுன்சில் சென்றோம் வாசலிலேயே எங்களை மறித்து 'நல்லகாரியம் செய்தீர்கள்....' என்று எங்களை கட்டிபிடித்து பாராட்டினார் பாலசந்தர். அப்புறம் ஒரு பாடலுக்கு 15 ஆயிரம் பெறும் தயாரிப்பாளர் அதிலிருந்து 5,000 ரூபாயை கவுன்சிலுக்கு நிதியாக தரவேண்டும் என்று நிபந்தனை விதித்தோம். அப்போது கவுன்சில் அறக்கட்டளையில் பணமே இல்லை ஆனால் தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தனர். இப்போது புதுப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் எந்தவொரு அனுமதியும் பெறாமல் எல்லா சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்படத்தின் பாடல்காட்சிகளையும், க்ளிப்புங்குகளையும் ஒளிபரப்புகின்றன. ஒரு காலத்தில் கம்பீரமாக இருந்த தயாரிப்பாளர்கள் இப்போது கண்டகண்ட சேனல்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் அளவுக்கு ஏகப்பட சேனல்கள் எந்த மாநிலத்துலுமே கிடையாது அத்தனை சேனல்களும் சினிமாவை நம்பித்தான் பிழைப்பே நடத்துகின்றன." என்று பதில் சொன்னார். 

அடுத்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜாவிடம் பேசினோம். ''கடந்த 10 நாட்களுக்கு முன்பே கவுன்சிலில் பொதுக்குழுவில் எடுத்த முடிவை 11-ம்தேதி அறிக்கையாக வெளியிட்டு இருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டம் வெளியில் தெரிகிறது. உயிருக்குப் போராடும் சினிமா தயாரிப்பாளர்கள் முகங்கள் அம்பலத்துக்கு வருவதில்லை. ஒருத்தருக்கு சொந்தமான பொருளை அவருடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதும் ஒருவகையில்  குற்றமே. அதைத்தான் இன்று நிறைய சேனல்கள் செய்து வருகின்றன. நான் தயாரித்த 'நாட்டுப்புற பாட்டு' 'துள்ளுவதோ இளமை' என்று என்னுடைய எல்லா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை குறிப்பிட்ட சேனலுக்கு மட்டுமே விற்று இருக்கிறேன். ஆனால் என் படங்களின் எந்தவித உரிமையும் இல்லாத இன்னொரு டி.வி என் படங்களை ஒளிபரப்புகிறது. இது எப்படி நியாயம்? " என்று கொதிக்கிறார்.

சர்ச்சைகளால் சூடுபிடிக்கும் தமிழ்த்திரையுலகில் இன்னுமொரு சர்ச்சை!