Published:Updated:

கவாஸ்கர் முதல் சச்சின் வரை... கிரிக்கெட்டில் சிக்ஸர், சினிமாவில் சிங்கிள் பின்னணி!

கே.ஜி.மணிகண்டன்
கவாஸ்கர் முதல் சச்சின் வரை... கிரிக்கெட்டில் சிக்ஸர், சினிமாவில் சிங்கிள் பின்னணி!
கவாஸ்கர் முதல் சச்சின் வரை... கிரிக்கெட்டில் சிக்ஸர், சினிமாவில் சிங்கிள் பின்னணி!

விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிரிக்கெட் வீரர்களுக்கு இயல்பாகவே அமையும். அதனாலேயே, கிரிக்கெட் கேரியரின் முடிவுக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பது கிரிக்கெட் வீரர்களின் சம்பிரதாய சம்பவம் ஆகிவிட்டது. இதோ, சினிமாவில் நடித்த சில கிரிக்கெட் பிரபலங்கள்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர், சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மென், 80-களின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சுனில் கவாஸ்கர் சினிமாவில் சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும், சிங்கிள் தட்டியிருக்கிறார். 1980-ல் வெளியான 'சவ்ளீ ப்ரீமசி' என்ற மராத்தி படத்திலும், 1988-ல் வெளியான 'மாலமால்' என்ற பாலிவுட் படத்திலும் சுனில் கவாஸ்கர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

* உலகப்புகழ் பெறவில்லை என்றாலும், ஓரளவுக்குப் பெயர் தெரியும்படி விளையாடிய கிரிக்கெட் வீரர், அஜய் ஜடேஜா. 1996-ல் நடந்த உலககோப்பை காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 25 பந்துகளில் இவர் விளாசிய 45 ரன்கள் மறக்கமுடியாதது. மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபட்டதாக விளையாடத் தடை விதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர், மீண்டும் கிரிக்கெட்டில் பெரிய அளவுக்குக் கவனம் செலுத்த முடியவில்லை. 2003-ல் பாலிவுட்டில் வெளியான 'கேல்' என்ற ஆக்‌ஷன் படத்தில் சன்னி தியோலுடன் இணைந்து நடித்தார் அஜய் ஜடேஜா. 'நடிச்சா ஹீரோ' என்று நினைத்தாரோ என்னவோ, சில வருட இடைவெளிக்குப் பிறகு 'பல் பல் தில் கே சாத்' படத்தில் ஹீரோ ஆனார். இதே படத்தில் சக கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நடித்திருந்தார். சின்னத்திரையில் 'செலிபிரெட்டி டான்ஸ் ஷோ', 'காமெடி ஷோ'க்களில் கலந்துகொண்டவர், இப்போது கிரிக்கெட்டைச் சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறார். 

* இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டன், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர்... கபில் தேவ். கிரிக்கெட்டில் காட்டிய ஆர்வம் சினிமாவில் இல்லை என்றாலும், 'இக்பால்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டினார்.

* இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கின் தந்தை, யோகராஜ் சிங் பஞ்சாபி, பாலிவுட் உள்பட 40 படங்களில் நடித்தவர். அப்பா யோகராஜ் நடித்த 'மென்டி சக்னா டி' என்ற பஞ்சாபி படத்தில் நடித்தபோது, 11 வயது யுவராஜ் சிங்கும் குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் அறிமுகம் ஆனார். பிறகென்ன? கிரிக்கெட் அளவிற்கு இல்லையென்றாலும், சினிமா மீது யுவராஜ் சிங்கிற்கு ஆர்வம் அதிகம். அனிமேஷன் படங்களை விரும்பிப் பார்ப்பார். 'ஜம்போ' என்ற பாலிவுட் அனிமேஷன் படத்திற்குக் குரல் கொடுத்திருக்கிறார். வெளியாகாமல் இருக்கும் 'கேப்டன் இந்தியா' என்ற அனிமேஷன் படத்தில் கார்ட்டூன் கேரக்டரில் நடித்திருக்கிறார் யுவராஜ் சிங்

* மொட்டைத் தலையும், முரட்டு மீசையுமாய் வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணியின் சையத் கிர்மானி, சக கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டிலுடன் இணைந்து 'கபில் அஜ்னாபி தே' என்ற பாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் காட்சியில் வில்லத்தனம் காட்டியிருக்கிறார். 

* சச்சின் டெண்டுல்கரின் பால்ய நண்பர். பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் சச்சினுடன் இணைந்து 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டவர், வினோத் காம்ப்ளி. தன் கிரிக்கெட் கேரியரின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசியல், சினிமா, சின்னத்திரை என மாறி மாறி சுற்றிக்கொண்டிருந்தார். 2002-ல் வெளியான 'அனார்த்' என்ற பாலிவுட் படத்தின்மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அஜய் ஜடேஜா ஹீரோவாக நடித்த 'பல் பல் தில் கே சாத்' படத்தில் துணை நடிகர். 2015-ல் வெளியான 'பெட்டனாஜெர்' என்ற கன்னடப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 

* ஆக்ரோஷம், புகார், சர்ச்சை, தடை... என தனது கிரிக்கெட் கேரியரின் தொடக்கத்தில் இருந்து முடிவுவரை பரபரப்புகளுடனேயே சுற்றிக்கொண்டிருந்த ஶ்ரீசாந்த், சூதாட்ட சர்ச்சையால் கிரிக்கெட் விளையாடத் தடை செய்யப்பட்டார். பிறகு, சினிமாவில் களமிறங்கியவர், இப்போது அரசியலிலும் பிஸி. பாலிவுட்டில் வெளியான 'அக்ஸார்-2', மலையாளத்தில் வெளியான 'டீம் 5' இரண்டு படங்களும் 'நடிகர்' ஶ்ரீசாந்தின் அடையாளங்கள்.

* ஆஸ்திரேலியாவில் தயாரான 'அன்இந்தியன்' திரைப்படத்தில் பிரெட்லீ ஹீரோ. தனது ஆக்ரோஷமான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மென்களைத் திணறடித்த பிரெட்லீ, இப்படத்தில் ரொமான்ஸ் நாயகனாக ஜொலித்தார். 

* சச்சின் டெண்டுல்கர்... அறிமுகம் தேவையா என்ன? தனது பயோ-பிக் படமான 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், தனது வாழ்க்கையின் சுவாரஸ்யமான, துயரமான, துரதிர்ஷ்டவசமான, சந்தோஷமான தருணங்களைப் பேசிப் பகிர்ந்துகொண்டார். சச்சின் பேசியதற்கே, தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழித்தது.

* தமிழக வீரர்  சடகோபன் ரமேஷ், கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதனை செய்தவர் அல்ல. ஆனால், அனில் கும்ப்ளே பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 60 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்களும் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர். கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியபிறகு, ஜெயம் ரவி நடித்த 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 'போட்டா போட்டி 50/50' படத்தில் ஹீரோவாக நடித்தார். சடகோபன் ரமேஷ் மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ, 'உலா' என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டியிருக்கிறார். 

சரி... கிரிக்கெட் வீரர்களின் பயோ-பிக் படங்கள் வந்துகொண்டிருக்கும் சீஸன் இது. கிரிக்கெட் வீரர்கள் நடிப்பதை விடுங்க... எந்தெந்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைத் திரைப்படம் ஆக்கலாம்?