Published:Updated:

மிஸ்டர் ரகுவரன்... வெரி ஸாரி... ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்! - வி.ஐ.பி -2 விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
மிஸ்டர் ரகுவரன்... வெரி ஸாரி... ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்! - வி.ஐ.பி -2 விமர்சனம்
மிஸ்டர் ரகுவரன்... வெரி ஸாரி... ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்! - வி.ஐ.பி -2 விமர்சனம்

முதல் பாகத்தில் இருந்த தனுஷின் மொபட்டில் தொடங்கி அமலாபாலின் பொட்டு வரை இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. அந்த அளவில்லா எண்டர்டெயின்மெண்ட் இருந்ததா என்பது மட்டுமே ஒரு கேள்வி.

மளிகை சாமான் வாங்கிவருவது, மனைவியிடம் திட்டுவாங்குவது, அப்பாவிடம் அறிவுரை வாங்குவது, திருக்குறள் மூலம் வாழ்க்கையை விளக்குவது என வேலை இருந்தும் வி.ஐ.பி நம்ம ரகுவரன் (தனுஷ்). தனுஷின் திறமையைப் பார்க்கும் வசுந்தரா (கஜோல்) தனது நிறுவனத்தில் சேர சொல்லி தனுஷுக்கு உத்தரவிடுகிறார். ”சிங்கத்துக்கு வாலா இருக்கிறதைவிட பூனைக்கு தலையா இருந்துக்குறேன்” என அந்த வேலையை மறுக்க, தனுஷ் - கஜோல் ஈகோ மோதல் ஆரம்பிக்கிறது. இதில் யார், எப்படி ஜெயித்தார்கள்?

அமலாபாலுக்கு பயந்து பம்முவது, குடித்துவிட்டு எகிறுவது, விடிந்ததும் புலம்புவது என முதல் பாகத்தில் பார்த்த அதே தனுஷ். 3-ம் வாய்ப்பாடு போல அவருக்கு மனப்பாடம் ஆகிவிட்ட அந்த உடல்மொழி இதிலும் அப்படியே. சில இடங்களில் டேரிங். பல இடங்களில் போரிங். வில்லத்தனம் கஜோலுக்கு ஏற்ற ரோல் இல்லை. முறைத்துப் பார்த்தால் கூட ரொமான்ஸ் பொங்குகிறது.ஆனால், தீபா வெங்கட்டின் குரல் கஜோலுக்கு நிறையவே கம்பீரம் சேர்க்கிறது. அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், சர்ப்பிரைஸ் என்ட்ரி கொடுக்கும் சரண்யா என எல்லோரின் வேடமும் நிறைவு. 

முதல் பாகத்தில் வந்த நபர்களுக்கான எக்‌ஷ்டன்ஷனை விவரிப்பதிலிருந்து தொடங்குகிறது படம். அமலா பால் பொறுப்பான குடும்ப தலைவியாகியிருக்கிறார், சமுத்திரக்கனி சாஃப்ட்டான அப்பாவாகியிருக்கிறார், ஹரிஷ் மீசை வளர்த்து திரிகிறார், தனுஷின் வீடு, ஹரிபாட்டர், மொபட்... பிறகு சுரபிக்கு பதில் ரித்து வர்மா, விக்னேஷ் சிவனுக்கு பதில் பாலாஜி மோகன், அமிதேஷுக்கு பதில் கஜோல் என சில மாற்றங்களும் உண்டு. இதை எல்லாம் விளக்கிவிட்டு பிரதான கதைக்கு வரவே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. 

தனுஷ், அவருக்கு பிரச்னை, கிடைக்கும் வாய்ப்பில் சிக்கல், அதை முறியடிக்கும் லாகவம், ஸ்லோ மோஷன் நடை, ஃபாஸ்ட் கட்டில் வசனம், க்ளைமாக்ஸில் நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை முதற்கொண்டு அப்படியே இருப்பதால், பார்த்த படத்தையே  பார்த்த உணர்வு வருகிறது. முதல் பாகத்தில் கட்டடம் கட்ட  போராடும் விஐபி, இதில் நிறுத்தப் போராடுகிறார் அவ்வளவுதான் வித்தியாசம். கஜோல் - தனுஷுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளும் சுவாரஸ்யமாக இல்லாதது மிகப்பெரிய பிரச்னை.

அனல் அரசு சண்டைக் காட்சியும், அதற்குப் பின்னணியில் ஒலிக்கும் ஷான் ரோல்டன் இசையும் மாஸ். ஆனால், கொடி, விஐபி2 படங்களுக்குப் பிறகாவது அனிருத்தின் இன்மையை தனுஷ் உணர்வார் என்று நம்பலாம். பாடல்கள் கூட தனுஷின் நடன வேகத்திற்கு கைகொடுக்க மறுக்கிறது. மாஸ் காட்சிகளின் போது, அனிருத் இசைக்கு ரசிகர்களிடமிருந்து வரும் ஒரு கூச்சல், ஷான் ரோல்டன் இசையில் மிஸ்ஸிங். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை, நேர்த்தியை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. மழையில் மார்கெட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி சரியான உதாரணம்.

எடிட்டர் பிரசன்னாவின் உபயத்தில் முதல் பாதி முழுக்க பல இடங்களில் Ctrl X விழுந்து இருக்கலாம். பாலாஜி மோகனுடன் ஆரம்பிக்கும் தொழிலுக்கும் இடையூறு வர, தனுஷின் ஷேர்களை அவர் விற்கிறார். எதிர்பார்த்தபடி அதை கஜோல் வாங்க, ஒட்டுமொத்த கூட்டமும் வெளியேறுகிறது. தனுஷோடு இருக்கும் பாலாஜி மோகன், விவேக், 200 உப இஞ்சினியர்கள், என இத்தனை நல்லவர்களை ஒரே ஃபிரேமில் பார்ப்பதெல்லாம் அப்பப்பப்பா. ஏன் சீக்வல் என தெரியாமல் நகர்த்தப்படும் கதைக்கு, தனுஷின் வசனங்களோ, சௌந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதையோ எந்தவித நியாயமும் செய்யவில்லை. 

”உங்ககிட்ட இருக்கறதெல்லாம் காசு, எப்படியும் கரைஞ்சிடும். ஆனா, இது மாஸ், எப்பவும் கூடவே இருக்கும்” அந்த மாஸ் வசனத்திற்கு திரைஅரங்கில் இருந்த அமைதி பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது. அடிக்கடி சொல்லும் திருக்குறள், படத்தின் இறுதியில் வரும் சென்னை வெள்ள காட்சிகள் எல்லாம் கைத்தட்டலுக்காக சேர்த்திருப்பது போல் தோன்றுகிறது. படத்தில் பல வசனங்கள் ஆங்கிலத்தில் தான் வருகிறது. அதில் ஒரு வரி, We are sorry Mr.raguvaran. Please Understand. படத்திற்கு மிகவும் பொருந்தும்.

ஹிட் அடித்த விஐபியின் சீக்வலே இப்படி இருக்கிறதே. மாரி 2 வேறு ஆன் தி வே. கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க ப்ரோ!