Published:Updated:

தமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 2

தார்மிக் லீ
தமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 2
தமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 2

ஹாலிவுட்டில் இடம்பெற்ற சில மாஸ் மற்றும் காமெடி சீன்களை லைட்டாக பட்டி, டிங்கரிங் பார்த்து தமிழ் சினிமா இயக்குநர்கள் அவர்களது படத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள். எந்தெந்த சீன்கள் சுடப்பட்டது? ஒரு சின்ன அலசல். 

ஆரம்பம் :

அஜித் நடிப்பில் வெளியான படம் 'ஆரம்பம்'. அதில் முருகதாஸ் படங்களில் வரும் ஹீரோக்களைப் போல் ஹை டெக் டெக்கியாக இருப்பார் 'ஆர்யா'. அஜித்துக்கு சாஃப்ட்வேர் ரீதியாக சில வேலைகள் வேண்டியிருப்பதால், நயன்தாராவைக் கடத்தி அவரைக் கொன்றுவிடுவேன் என்று ஆர்யாவுக்கு கவுன்ட் டவுன் வைத்து ட்ரிக்கர் செய்வார் அஜித். அதே போன்ற காட்சி அச்சுப்பிசுறாமல் ஆங்கிலப் படமான 'Sword Fish''ல் இடம்பெற்றிருக்கும். அதில் டெக்கியாக ஹியூக் ஜேக்மென் நடித்திருப்பார். அந்தப்படத்திலும் சிஸ்டத்தை ஹேக் செய்ய வேண்டுமென்று அப்பட வில்லன் ஹீரோவை ட்ரிக்கர் செய்வார்.

அரண்மனை :

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான பேய் படம்தான் 'அரண்மனை'. அதில் முதல் சீனே திகிலூட்டுவதாக இருக்கும். 'காதல்' பட பிரபலம் தண்டபாணி அவர் இருக்கும் வீட்டில் இருந்து எதிரே உள்ளே வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார். அந்தப் பக்கமும் இவரைப் போலவே ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் குலை நடுங்கிவிடும். இவர் என்னவெல்லாம் செய்வாரோ அது அத்தனையும் அவரும் செய்வார். இதே போல் காட்சி '1408' எனும் ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றிருக்கும். என்ன ஒன்று, ஆங்கிலப் படம் என்பதால் ஹீரோவின் கையில் டார்ச் லைட், இங்கே தமிழ் படம் என்பதால் எல்லோருக்கும் கனெக்ட் ஆக வேண்டுமென்று பெட்ரமாஸ் லைட். அவ்வளவுதான். பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா? இந்த பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதுங்களா?

கத்தி :

விஜயின் ஹிட் வரிசையில் 'கத்தி' மிக முக்கியமான படம். விஜய் ரசிகர்களுக்கும் அப்படிதான். அதில் இடம்பெறும் காய்ன் சண்டை படத்தின் மாஸ் சீன். அதே ஸ்டைல் சண்டை 1974லேயே ஜிம் கெல்லி நடித்த 'ப்ளாக் பெல்ட் ஜோன்ஸ்' எனும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. க்ளாஸிக் படங்களில் இருக்கும் கதைகளை எடுத்துக் கொண்டு தற்பொழுது தமிழ் படமாக்கி வருவது ட்ரெண்டாகி வருவது போல், சீன்களையும் எடுத்து இதில் திணித்து, புது ட்ரெண்டை உருவாக்க நினைக்கிறார் போல முருகதாஸ். ஆல் தி பெஸ்ட் ப்ரோ!

லிங்கா :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமாப் பயணத்தில் சற்று சறுக்கலை கொடுத்த படம் 'லிங்கா'. அதில் அனுஷ்காவும் இவரும் ஒரு அறையில் மாட்டிகொள்வார்கள். ரஜினியிடம் வெறும் காந்தம் மட்டுமே இருக்கும். அவர் ஸ்டைலில் மேலே பார்த்துக் கொண்டிருக்கையில் வரும் இந்த ஏலியன் லெவல் யோசனை. வெளியே இருக்கும் சாவிக் கொத்து இரும்புதானே? இரும்பும் காந்தமும் காதல் கொள்ளுமே என்பதை நினைத்து காந்தத்தை வைத்து சாவியை கைப்பற்றி கதவைத் திறந்து எஸ்கேப் ஆகிவிடுவார். ஆனால் அதே கான்செப்டில் 1966லேயே 'How to Steal A Million' என்ற படத்தில் தப்பித்துவிட்டார் ஹீரோ ஆட்ரி ஹெப்பர்ன். அதே ட்ரெஸ், அதே டெயிலர், அதே வாடகை.

மங்காத்தா :

விஜய் ரசிகர்களுக்கு 'கத்தி'யும், 'துப்பாக்கி'யும் எந்த அளவு முக்கியமோ அஜித் ரசிகர்களுக்கு 'மங்காத்தா' படம் மிக முக்கியம். இதில் அஜித்தின் அளவுக்கு அர்ஜுனுக்கும் வெயிட் ஜாஸ்தி. க்ளைமாக்ஸ் வரும் முன்னே காரில் இரண்டு சீன்களில் மாஸ் காட்டியிருப்பார். இன்ட்ரோவில் என்கவுன்டர் செய்யப் போகும் முன் காரில் இருந்து இறங்குவது, வைவபவை காரில் ஏற்றிக் கொள்ளும் காட்சி, இரண்டும் இவருக்கான மாஸ் சீன். அது இரண்டு படங்களில் இருந்து வெட்டி, மங்காத்தா படத்தில் தைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. 'ரெட்-2' படத்தில் போலீஸாக வரும் ஹீரோ ஓடும் காரில் இறங்கி சுட்டுக்கொண்டே நடந்து மாஸ் காட்டியிருப்பார், 'வான்டெட்' படத்தில் ஏஞ்சலினா ஜூலி ஹீரோவை அலேக்காக தூக்கி மலேக்காக காருக்குள் உட்கார வைப்பார். 'மங்காத்தா' படத்தில் மும்பை ரெஜிஸ்ட்ரேஷன், அதில் ஃபாரின் ரெஜிஸ்ட்ரேஷன். 

நகரம் :

மாஸ் சீன்களை காப்பியடிப்பது இயல்பு. இந்தப் படத்தில் ஒரு படி மேலே சென்று காமெடியில் களமியிறங்கியிருப்பார் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி. படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும் வடிவேலுவின் அதிபுதிரி காமெடி மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் நாய் காமெடிதான் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும். அரை போதையில் இருக்கும் நாய்க்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தும், வாய் வழியே மூச்சு கொடுத்தும் காப்பாற்ற போராடுவார் வடிவேலு. அதே போல் காமெடி ஹாலிவுட் படமான 'There's Something About Mary'யில் இடம்பெற்றிருக்கும். ஹாலிவுட்டை விட வடிவேலுவின் ரியாக்‌ஷன்களுக்கும், டயலாக் டெலிவரிக்கும் இங்கேதான் சிரிப்பு கியாரன்டி! 

நியூட்டனின் மூன்றாம் விதி :

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியான படம் 'நியூட்டனின் 3ம் விதி'. அதில் க்ளைமாக்ஸ் காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவின் கை விரல்களை உடைத்து கொடுமைப்படுத்துவார் வில்லன். எப்படியோ எல்லோரையும் அடித்து நொறுக்கிவிட்டு, துப்பாக்கி ஒன்றை கைபற்றிவிடுவார் ஹீரோ. கை விரல்கள் உடைந்த காரணத்தால் வில்லனை நோக்கி குறி வைத்தும் சரியாக சுட முடியாமல் கஷ்டப்படுவார். நூதனமாக யோசித்த இவர், அதில் இருக்கும் தோட்டக்களை மட்டும் எடுத்து கை விரல்களுக்கு இடையில் செருகிவிடுவார். பின் தீயின் அருகில் கையை வைக்க, ட்ரிக்கர் ஆகும் புல்லட்டுகள் வில்லனை பதம் பார்க்கும். அதே மாதிரியான காட்சி 'Shoot'em Up' எனும் ஆங்கில படத்தில் இடம்பெற்றிருக்கும்.