Published:Updated:

``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்!" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5

அய்யனார் ராஜன்

’அழகு’ தொடரின் ஷூட்டிங்கில் நடக்கும் அரட்டை : ஷூட்டிங்ல மீட்டிங் பகுதி - 5

``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்!" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5
``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்!" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5

``அழகம்மை (ரேவதி) – பழனிச்சாமி வாத்தியார் (தலைவாசல் விஜய்)  வீடுன்னா இப்படித்தான் இருக்கணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கேன். என்னை ரேவதியாகவும், விஜய்யை தலைவாசல் விஜய்யாகவும் பார்க்காதீங்க’னு சீரியல் தொடங்கின மூணாவது நாளே எல்லாப் பிள்ளைங்களையும் கூப்பிட்டுச் சொல்லியாச்சு. நானும் விஜய்யும் சேர்ந்தே இதைச் சொன்னோம். இப்போ ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல ஃபோன் பண்ணினாகூட, எங்கிட்ட 'அம்மா'ன்னும், விஜய்கிட்ட 'அப்பா'ன்னும்தான் பேசுறாங்க. இந்த அஞ்சு புள்ளைங்ககிட்டேயும் நாங்க மனசளவுல நெருங்கும்போது, அது காட்சிகள்ல பிரமாதமா வொர்க் அவுட் ஆகுது’’

- `அழகு’ தொடர் ஷூட்டிங் ஸ்பாட்டில், மதிய உணவு இடைவேளையில் சக ஆர்ட்டிஸ்டுகளுடன் கூட்டாஞ்சோறு சாப்பிட்டபடியே பேசுகிறார், நடிகை ரேவதி. சன் டி.வி-யில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிற ‘அழகு’ ரேவதி, தலைவாசல் இருவருமே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரையில் முகம் காட்டியிருக்கும் தொடர். அழகம்மை வீட்டையே இந்த வார ‘ஷூட்டிங்ல மீட்டிங்’ பாயிண்ட் ஆக்க, தொடர்கிறார் ரேவதி.

``இந்த சீரியல்லேயும் மாமியார் மருமகள் இருப்பாங்க. ஆனா, எல்லா சீரியல்லேயும் காட்டுற மாதிரி ரிலேசன்ஷிப் இதுல இருக்காதுனு சொன்னதால, ‘சரி’னு சொன்னேன். இந்த ஜெனரேஷன் பசங்கள்ல என்னைத் தெரியாதவங்களும் இருப்பாங்களே, அவங்களுக்கு நான் அழகம்மையா தெரியத் தொடங்கியிருக்கேன். இது ஒரு புது அனுபவமா இருக்கு. சமீபத்துல ஷாப்பிங் போனப்போ, நடுத்தர வயது தம்பதி அவங்க மகளோட வந்திருந்தாங்க. அந்தக் குழந்தைக்குப் 12 வயது இருக்கும். என்னைப் பார்த்ததும், ‘மம்மி... அழகம்மை’னு சொல்றா... அந்தக் குழந்தை. ‘இவங்க பேரு ரேவதி, சினிமாவுல ஹீரோயினா நடிச்சிருக்காங்க’னு அந்த பாப்பாகிட்ட சொல்லிக்கிட்டே கூட்டிட்டுப் போறாங்க அவங்க அம்மா. அழகம்மையா குழந்தைகள்கிட்டேயும் ரீச் ஆனது சந்தோஷமா இருக்கு’ என்றவர்,

‘வாத்தியார் அனுபவத்தைக் கேளுங்க, இன்னும் இன்ட்ரஸ்டா இருக்கும்’ எனத் தலைவாசல் விஜய்யைக் கை காட்டினார். அவரிடம் பேசினோம்.

‘’பழனிச்சாமி வாத்தியார் கேரக்டர் நீங்க பண்றீங்க. ரேவதி அழகம்மையா வர்றாங்க. அவங்க அதிகம் படிக்காதவங்க. ஆனா, குடும்பத்தைத் திறம்பட நடத்துறவங்க’னு கதையைச் சொல்லத் தொடங்கினாங்க. ‘சீரியல்ல ரேவதி சொல்றதுக்கெல்லாம், நாலஞ்சு வருடத்துக்கு நான் தலையாட்டிக்கிட்டே இருக்கணும், அதானே!'னு கேட்டேன். 

’அப்படி இல்லை சார்’னு பதறுனாங்க. மெகா சீரியலே வேண்டாம்னு இருந்தவன், இப்படித்தானே எகத்தாளம் பேசுவான்? ஆனாலும் சீரியலுக்கு என்னைக் கூப்பிட்டவங்க ஆரம்ப காலத்துல இருந்து இப்போ வரைக்கும் என் நட்பு வட்டாரத்துலேயே இருந்துட்டு வர்றவங்க. அதுபோக, ’ரேவதி பண்றாங்க’னு வேற சொன்னாங்களா, ‘ரேவதிகிட்டேயே ஐடியா கேட்கலாமே’னு ஃபோன் போட்டேன். டக்குனு ’பண்ணலாமே விஜய்’னு சொல்லிட்டாங்க. வீராப்பா பேசினவன், அந்த செகண்ட்ல இருந்தே அவங்க பேச்சுக்குத் தலையாட்டத் தொடங்கிட்டேன்" எனச் சிரித்தவர்,

``ஆனா, நம்ப மாட்டீங்க பிரதர்... சீரியல்ல கமிட் ஆன பிறகு கோ இன்சிடென்ட்டா நிறைய விஷயங்களை நாங்க ரெண்டுபேருமே பார்த்துட்டோம். ரியல் லைஃப்ல எனக்குக் கல்யாணமாகி 25 வருடம் ஆகுது. சீரியல்லேயும் ரேவதியும் நானும் சில்வர் ஜூப்ளி தம்பதி. கதைப்படி, எங்க 25-வது திருமண நாளுக்கு ரேவதிக்கு சர்ப்ரைஸ் தர, அவங்களை எஸ்.பி.பி கச்சேரிக்குக் கூட்டிக்கிட்டு போவேன். நிஜமாவே எஸ்.பி.பி பாட்டுதான் ரேவதியோட ஃபேவரைட்டாம். என் மனைவியும் அவரோட ஃபேன். அவங்களும் ரொம்ப நாளா எஸ்.பி.பி சார் வீட்டுக்குப் போயிட்டு வரலாமானு கேட்டுட்டே இருந்தாங்க. நான் ஒருதடவைகூட  கூட்டிக்கிட்டு போகலை. சீரியல்ல அந்த சீன் ஷூட்டிங் அன்னைக்கு என் மனைவியையும் அழைச்சுட்டு வந்துட்டேன். ஆனா, 'ரெண்டு பேரையும் ஷூட் பண்ணிடாதீங்க, வழக்கமான ரெண்டு பொண்டாட்டி கதையானு ஜனங்க கடுப்பாகிடப் போறாங்கனு!’ உஷாரா கேமராமேன்கிட்ட சொல்லிட்டேன்"  என அந்த ஆச்சர்ய விஷயங்களையும் பகிர்ந்தார்.

ரேவதி, தலைவாசல் விஜய், ராஜலக்ஷ்மி, ஐஸ்வர்யா, வாசு விக்ரம்... இப்படி நிறைய சீனியர்கள் இருந்தாலும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கும் இந்தத் தொடரில் பஞ்சமே இல்லை. ஸ்ருதி, ‘காவலன்’ மித்ரா குரியன், வி.ஜே.சங்கீதா, ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்டன், நவீந்தர், லோகேஷ், நிரஞ்சன், சஹானா என இவர்கள் கூடியிருந்த ஏரியாவிலும் லஞ்ச் டைம் அரட்டை அதகளப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமும் சென்றோம்.

``வாங்க ப்ரோ. இங்க லொடலொடனு பேசுறவங்க இவங்கதான். நாங்க இவங்களுக்கு அடைமொழியே வெச்சுட்டோம். ‘சூர்யா’ சங்கீதா. நடிகர் சூர்யா உயரம் கம்மினு டி.வி-யில சொல்லி பரபரப்புக் கூட்டினாங்களே, அவங்களேதான். ‘நீங்க என்ன கேட்டாலும் பதில் வெச்சிருப்பாங்க" என சங்கீதாவை அறிமுகப்படுத்தினார், நவீந்தர்.

"என்னோட முதல் சீரியல் சார் இது. முதல்நாளே மேக்அப் இல்லாம நான் நடிச்சதைப் பாராட்டினாங்க ரேவதி மேம். எவ்ளோ பெரிய நடிகை. அவங்களே ரெண்டு வார்த்தை சொல்லிட்டதால, ‘சீரியலுக்கு செட் ஆகிட்ட சங்கீதா’னு உள்ளுக்குள்ள எக்கோ கேட்குற மாதிரி தெரியுது" என்றவரிடம், அந்த ’சூர்யா உயர சர்ச்சை’ குறித்துக் கேட்டோம்.

``அந்தப் பிரச்னை வெடித்த மறுநாள் ஷூட்டிங் கிளம்பினப்போ அவ்வளவு பயம். இங்க எல்லாருமே சீனியர் சினிமா ஆர்ட்டிஸ்டுகள் இல்லையா... `என்ன சொல்வாங்களோ’னு படபடப்பா இருந்துச்சு. ஆனா, ரேவதி மேடமே, ‘நிகழ்ச்சியை  நிகழ்ச்சியா மட்டும் பார்க்காம, என்ன இது அக்கப்போரா இருக்கே’ன் கேட்டாங்க. ('தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல சுரேஷ் மேனனும் சூர்யா உயரத்தைக் கலாய்ச்சிருக்காரே!) அதுக்குப் பிறகுதான் எனக்கு ‘அப்பாடா’னு இருந்தது" என்கிறார், சங்கீதா.

ரேவதியின் இளைய மகளாக வரும் சஹானாவைக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள், நிரஞ்சன், லோகேஷ், மணிகண்டன் மூவரும். ‘என்ன விஷயம் என இன்வால்வ் ஆனோம்.

``அது ஒரு விவரம் தெரியாத பொண்ணு ப்ரோ. ‘அந்தப் படத்துல நடிச்சிருக்கேன், இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்’னு இங்க வந்து சொல்லும். ‘எந்தப் படமாச்சும் ரிலீஸாச்சா’னு கேட்டு இவங்க ஓட்டுவாங்க. போன வாரம் இப்படித்தான், 'டி.ஆர் என்னை ஹீரோயினா போட்டு படம் டைரக்ட் பண்றார்'னு சொல்லுச்சு. அப்போ இருந்து கேப் விடாம கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்க" என்றார், நவீந்தர்.

‘உண்மையா சஹானா?’ கேட்டதும், ``சத்தியமா சார். படம் பேரு, ‘ஒருதலைக் காதல்’. முதல்ல ஸ்கூல் ஸ்டூடண்டான என்னை குறளரசன் காதலிப்பார். அந்தக் காதலை நான் நிராகரிச்சுடுவேன். சில வருடம் கழிச்சு தாடி வெச்சுட்டுத் திரியற ஒருத்தரை நான் சந்திப்பேன். அவர் பள்ளி நாள்கள்ல நான் நிராகரிச்சவர். அந்த சோகத்துலேயே தாடி வச்சுட்டு கல்யாணம் பண்ணிக்காம இருப்பார். சின்ன வயசு குறளரசனே பிறகு டி.ஆர் சார். அதாவது, டி.ஆர் சாரே என்னை ஒருதலையாக் காதலிச்சு ஏமாந்து போவார்’னுதான் கதை சொன்னாங்க. ஷூட்டிங்லாம் தொடங்கி கொஞ்சநாள் நடந்துச்சு. என்ன காரணம்னு தெரியலை, அப்படியே டிராப் ஆகி நின்னுடுச்சு" என்கிறார்.

``நான் பையனுக்கும் ஜோடி; அப்பாவுக்கும் ஜோடி’ன்னு பேசினா, பசங்க அலறாம என்ன செய்வாங்க" என்றபடி அங்கு வந்தார், மித்ரா குரியன். ‘பிரியசகி’ தொடருக்குப் பிறகு ஆளையே காணலையே’ என்றோம்.

``கொஞ்ச நாள் ஃபேமிலிக்காக ஒதுக்கினேன். இப்போ மறுபடியும் வந்தாச்சு. செம ஜாலியாப் போகுது ஷூட்டிங். நான் மலையாளி. கன்னடத்துல இருந்து லோகேஷ். தெலுங்குல இருந்து ஒரு ஆர்ட்டிஸ்ட் இருக்கார். நாங்க பேசுற தமிழே ஷூட்டிங்ல எல்லோரையும் கலகலப்பாக்கிடும். ரேவதி மேம் எப்படிப் பழகுவாங்களோனு பயந்துட்டே வந்தேன். ஆனா, அவங்க ’ச்சோ ஸ்வீட்’ கேரக்டர். ‘இந்த ஹேர் ஸ்டைல் உனக்கு நல்லா இருக்கும்’ங்கிறதுல தொடங்கி, நடிப்பு சார்ந்தும், லைஃப் சார்ந்தும் நிறைய டிப்ஸ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க" என்கிறார், மித்ரா.

மித்ராவைக் காட்டுக்குள் கடத்திச்சென்று வில்லன் நவீந்தர் அத்துமீற முயற்சிக்கும் காட்சிகளே சீரியல் இப்போது போய்க் கொண்டிருக்கின்றன. முதன்முறையாக வில்லன் ரோல் பண்ணும் நவீந்தரிடம் பேசினோம்.

``வீட்டுல என் மனைவி இந்தக் காட்சிகளுக்காக இப்போ டி.வியை ஆஃப் பண்ணிடுறாங்க. `நடிப்புதானம்மா... ஏன் இப்படின்னு கேட்டேன். எனக்குப் பிரச்னை இல்லை, உங்க பொண்ணு, ‘அப்பா கெட்டவராம்மா’னு கேட்குறாங்க" என்கிறார்.

``கிடைக்கிற இடைவேளையைக் கலகலப்பாக்குறதுல ஐஸ்வர்யாவுக்கும் வாசு விக்ரமுக்கும் பெரிய போட்டியே நடக்கும். ரெண்டுபேரும் பண்ற காமெடிகள் பலபேரு வயிறைப் புண்ணாக்கியிருக்கு" என்ற தொடரின் இயக்குநர் ரத்தினம், சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் சுவாரஸ்யங்களையும் விவரித்தார்.

``ரேவதியின் மூத்த மகன் லோகேஷுக்கும் ஐஸ்வர்யாவின் மகள் சங்கீதாவுக்கும் திருமணம் முடிவாகும். ஆனால், லோகேஷ் ஸ்ருதியைத் திருமணம் செய்துகொள்வாரா என்கிற பரபரப்பு எழுந்து, அதில் சில திருப்பங்கள் நடக்கும். சங்கீதா ரேவதியின் மூத்த மருமகளா அந்த வீட்டுக்குள்ள எப்படி வரப்போறாங்கனு அடுத்தடுத்த நாள்கள்ல தெரியவரும். அதேபோல சின்ன மகள் சஹானாவுக்கும் லவ் டிராக் ரெடியாகிட்டிருக்கு. சொந்தந்துக்குள்ளேயே நடக்கிற சின்னப் புள்ளைங்களோட கல்யாணம், காதல் பெரியவர்களுக்கிடையே மனக்கசப்பை உண்டாக்குதா இல்லையாங்கிறது போகப் போகத் தெரியும்!" என்றார்.