Published:Updated:

``என் அம்மாவுக்கு மட்டும்தான் பயப்படுவேன்..!" - `ஜூனியர் சூப்பர் ஸ்டார்' அஷ்வந்த்

வெ.வித்யா காயத்ரி
``என் அம்மாவுக்கு மட்டும்தான் பயப்படுவேன்..!" - `ஜூனியர் சூப்பர் ஸ்டார்' அஷ்வந்த்
``என் அம்மாவுக்கு மட்டும்தான் பயப்படுவேன்..!" - `ஜூனியர் சூப்பர் ஸ்டார்' அஷ்வந்த்

`ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' சீசன் 1 டைட்டில் வின்னரான அஷ்வந்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கலகல பேச்சு, சின்னச் சின்னச் சேட்டை என நிமிடத்துக்கு நிமிடம் துருதுருப்பவர், கேமராவை ஆன் செய்ததுமே குறும்புத்தனத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, சீரியஸாக பின்னியெடுக்கிறார்.

அஷ்வந்த அம்மா அகிலா, ``வீட்டுல இவனைப் பார்த்துக்கறதுக்கே நேரம் சரியா இருக்கும். துறுதுறுன்னு ஏதாவது ஒண்ணு பண்ணிட்டே இருப்பான். ஒன்றாம் வகுப்பு முடிச்சுட்டான். நடிப்புன்னா அவ்வளவு ஆர்வம். டி.வி-யில் வரும் கதாபாத்திரங்கள் மாதிரி நடிச்சுக் காட்டிட்டே இருப்பான். அதைப் பார்த்துதான் `ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிக்கு கூட்டிட்டுப் போகலாம்னு முடிவுப் பண்ணினேன்'' என்கிறபோதே குறுக்கிட்ட அஷ்வந்த், ``அதான், டைட்டில் வின்னரே ஆகிட்டேனே. இன்னமும் எதுக்கு அதே பிளாஷ்பேக்'' எனச் சொல்ல, செல்லமாக காதை திருகுகிறார் அகிலா.

அஷ்வந்தின் அப்பா அசோக்குமார், ``ஆரம்பத்தில் மழலை மாறாமல் இருந்ததால், பேசறதுக்குக் கஷ்டப்பட்டான். அஷ்வந்த் பேசும் வார்த்தைகளை மற்றவர்களால் புரிஞ்சுக்க முடியாமல் இருந்துச்சு. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா தெளிவா பேச ஆரம்பிச்சான். திரைப் பட்டறையிலிருந்த விஜி, பாடிலாங்குவேஜ் சொல்லிக்கொடுத்தாங்க. எல்லாத்தையும் வேகமா ஷார்ப்பா பிடிச்சுக்கிறது அஷ்வந்தின் குணம். டைட்டில் வின் பண்ணினதும் சந்தோஷமா இருந்துச்சு. அவனுடைய ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் கிடைச்ச பரிசு'' எனப் பெருமிதமாகப் புன்னகைக்கிறார்.

``இந்த நிகழ்ச்சியின் காரணமாக, ஸ்கூலுக்குப் போறது குறைவா இருந்தாலும் கரெக்டா படிச்சிருவான். அதனால், ஸ்கூலிலும் சூப்பர் சப்போர்ட். யார் எந்தப் பொம்மை வாங்கிக்கொடுத்தாலும் அதை பார்ட் பார்ட்டாகப் பிரிச்சு மறுபடியும் இணைக்கிறது அஷ்வந்துக்குப் பிடிச்ச விஷயம். ரோபோட்டிக்ஸ் பிடிச்சிருக்கிறதுனு சொன்னதால், அந்த கிளாஸில் சேர்த்திருக்கோம்'' என்ற அம்மாவைப் பேசவிடாமல் குறும்பு செய்துகொண்டிருந்த அஷ்வந்த் பக்கம் கேள்விகளை வீசினோம்.

``உங்களுக்கு நடிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்குமா?''

``ரொம்பப் ரொம்ப பிடிக்கும். எப்போ பார்த்தாலும், யார் மாதிரியாவது நடிச்சுட்டே இருப்பேன்.''

``டயலாக்கை எல்லாம் எப்படி கரெக்டா ஞாபகம் வெச்சுப் பேசறீங்க?''

``முதல்ல அம்மா சொல்வாங்க. நான் அதையே திருப்பிச் சொல்வேன். ரெண்டு தடவை இதேமாதிரி சொல்வேன். அப்புறம் நானே சொல்லிடுவேன். பாடிலாங்குவேஜ்ஜை விஜி அக்கா சொல்லித் தந்தாங்க.''

''அஷ்வந்த் குட்டி படிப்பில் எப்படி?''

``ஸ்கூலுக்கு லீவுப் போட்டாலும் ஹோம் ஒர்க்கை கரெக்டா முடிச்சிருவேன். அதனால், மிஸ் என்னைத் திட்டவே மாட்டாங்க.''

``ஸ்கூலில் நீங்க சமத்து பையனா... சேட்டைக்காரனா?''

``ம்... அது வந்து... மிஸ் இருந்தா சமத்து பையன். மிஸ் இல்லைன்னா சேட்டைக்கார பையன்.''

``வருங்காலத்தில் என்ன ஆகணும்னு ஆசை?''

``சயின்டிஸ்ட். நீங்க கேட்காத ஒரு கேள்விக்குப் பதில் சொல்றேன். நான் சூப்பரா கார் ரெடி பண்ணுவேன் தெரியுமா. எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. என்னுடைய பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வந்து கிஃப்ட் கொடுத்தாங்க. 'சூப்பர் டீலக்ஸ்', 'வெண்ணிலா கபடி குழு 2', 'சண்டைக்கோழி 2' படங்களில் நடிச்சிருக்கேன். என்னோடு நடிக்கும் ஹீரோஸ் எனக்கு நிறைய கிஃப்ட்ஸ் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அப்படித்தான், 'சூப்பர் டீலக்ஸ்' படத்துல விஜய் சேதுபதி அங்கிளோடு நடிச்சப்போ, ஒரு கார் பொம்மை வாங்கிக்கொடுத்தார். அதை மட்டும் நான் உடைக்காமல் வெச்சிருக்கேன். ஒரு புரோகிராமுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் டீமின் தோனி அங்கிள், ரெய்னா அங்கிள் எல்லோரையுமே மீட் பண்ணினேன். ரெய்னா அங்கிள் என் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.. லவ் யூ ஆல். சரி, என்னை விடுங்க'' என்றவாறு துள்ளிகொண்டு விளையாட ஓடுகிறார் ஜூனியர் சூப்பர் ஸ்டார்.

இத்துடன், பல க்யூட் விஷயங்களை அஷ்வந்த் நம்மிடையே பகிர்ந்துள்ளார். அதைப் பார்க்கணுமா? கீழே இருக்கும் வீடியோவைக்  க்ளிக் பண்ணுங்க.