Published:Updated:

"ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ணோம்!" - 'ராஜா ராணி' ஆல்யா - சஞ்சீவ்

வே.கிருஷ்ணவேணி

`நான் இந்த நிமிடம்கூட தாலி கட்ட ரெடி!. இவள் சம்மதிக்கணுமே?!' எனச் சீண்ட, செல்லக் கோபத்தோடு சிரிக்கிறார், ஆல்யா. 

"ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ணோம்!" - 'ராஜா ராணி' ஆல்யா - சஞ்சீவ்
"ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ணோம்!" - 'ராஜா ராணி' ஆல்யா - சஞ்சீவ்

ல்யா மானசா -  சஞ்சீவ். இப்போதைய ஐடியல் சின்னத்திரை ஜோடி. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் `ராஜா ராணி' சீரியலில் ஜோடியாக நடிக்கும் இவர்கள், ரியல் ஜோடியாக வலம் வருகிறார்கள். `கல்யாணம் எப்போது?' என ஆல்யாவிடம் கேட்டால், கன்னம் சிவக்க வெட்கப்படுகிறார். இருவரையும் உட்கார வைத்து கொஞ்சநேரம் கொஞ்சிப் பேச வைத்ததிலிருந்து... 

`கல்யாணத்துக்கு என்னங்க அவசரம். இந்த லைஃப் நல்லா இருக்கு. இரண்டு, மூன்று வருடம் போகட்டும். பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்' என்று சொல்லும் ஆல்யாவை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்த சஞ்சீவ், `நான் இந்த நிமிடம்கூட தாலி கட்ட ரெடி. இவள் சம்மதிக்கணுமே?' எனச் சீண்ட, செல்லக் கோபத்தோடு சிரிக்கிறார், ஆல்யா. 

"ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ணோம்!" - 'ராஜா ராணி' ஆல்யா - சஞ்சீவ்

காதல் கதை தொடங்கிய நிமிடத்தைக் கேட்டேன். முதலில் ஆரம்பித்தவர் ஆல்யாதான். 

``இப்போதும் அந்த நிமிடத்தை நினைச்சா, பட்டாம்பூச்சி படபடனு சிறகடிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வரும் பாருங்க... இதுதான் காதல்னு தோணும். டான்ஸ் கிளாஸ் எடுத்தப்போதான் முதலில் இவரைப் பார்த்தேன். அவர் வீட்டில்தான் டான்ஸ் கிளாஸ் நடத்திக்கிட்டு இருந்தாங்க. ஜூம்போ கத்துக்கொடுக்கப் போனேன். அப்படி ஒருநாள் அவர் வீட்டிலிருந்து வெளியில் வர, நான் உள்ளே போக... எதிரெதிரே இரண்டு பேரும் பார்த்துக்கிட்டோம். இப்போ நினைச்சாலும் அந்தப் பார்வை ஒரு சிலிர்ப்பு. எனக்கு உடம்பு ஒரு மாதிரி ஆகிடுச்சி. கிளாஸ் முடிஞ்சு போனதும், என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ``ஹேய்...`குளிர் 100 டிகிரி' படத்தோட ஹீரோவைப் பார்த்தேன்டி. ஆள் செமயா இருக்கான். என்னா கலரு தெரியுமா?"னு சொல்லிச் சொல்லியே அவங்களை டயர்ட் ஆக்கிட்டேன்.'' 

"ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ணோம்!" - 'ராஜா ராணி' ஆல்யா - சஞ்சீவ்

``அதுநாள் வரைக்கும் நான்தான் எங்கள் வீட்ல செம கலர்னு எல்லோர்கிட்டேயும் பெருமையாச் சொல்லிட்டுத் திரிவேன். இவனைப் பார்த்ததும் டொப்புனு விழுந்துட்டேன். என்னா கலரு... டெடிபியர் மாதிரி பொசுபொசுனு இருப்பான்.'' என ஆல்யா கொஞ்ச, சஞ்சீவ் ஆரம்பித்தார். 

``எனக்கும் இவளைப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவளை ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். எதையும் மனசுல வெச்சிக்கத் தெரியாது. படபடனு பேசிடுவா. கோபம், அழுகை, சிரிப்புனு எதுவா இருந்தாலும் அப்பப்போ அதை வெளிப்படுத்திடுவா!. அந்தக் குணம் எனக்குப் பிடிக்கும். இப்படி எங்கள் வீட்டில் எதார்த்தமா பார்த்ததுபோலவே, நான் கமிட் ஆன `ராஜா ராணி' சீரியல்லேயும் ஜோடியானோம். அப்போ வரைக்கும் ஏதோ பிடித்திருக்கிறது என்பதைத் தாண்டி, அது காதல்தான்னு புரிஞ்சது. முதலில் புரபோஸ் பண்ணது, ஆல்யாதான்.'' என சஞ்சீவ் சொல்ல, ஆல்யா தொடர்கிறார்.

``ஆமா. யாராவது முந்திக்கிட்டு வர்றதுக்கு முன்னாடி, நாமளே புரபோஸ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணி, `உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு'னு மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன். நான் சொன்ன அந்த `பிடிச்சிருக்கு' அவருக்கு என்னை இன்னும் ரொம்பப் பிடிச்சிப்போச்சுனு நினைக்கிறேன். பிறகு நிறைய பேசினோம். ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டோம்." என்று சிரிக்கும் ஆல்யாவிடம், சஞ்சீவ் கொடுத்த கிஃப்ட்ஸ் பற்றிக் கேட்டேன்.  

"ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ணோம்!" - 'ராஜா ராணி' ஆல்யா - சஞ்சீவ்

``அடிக்கடி கொடுக்கிறதால, இதுதான் ஸ்பெஷல்னு சொல்ல முடியலை. நாங்க காதலிக்க ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகுது. இதுவரைக்கும் பல தங்க மோதிரம் வாங்கிக் கொடுத்திருக்கான்.'' என ஆல்யா சொல்ல, சஞ்சீவ் இடைமறிக்கிறார். 

``அது ஏன்னா, அடிக்கடி மோதிரத்தைத் தொலைச்சிடுவா!. தவிர, இவள் எனக்கு பைக் வாங்கிக் கொடுத்திருக்கா. அந்த பைக் பற்றி விசாரிக்காத ஆளே இல்லை. என் செகண்ட் லவ்வரும் அந்த பைக்தான்." என்பவரைத் தொடர்ந்து, ஆல்யா பேசுகிறார்.

``இவனுக்கு ப்ரணிதி சோப்ரா அவ்வளவு பிடிக்கும். நான் வெறித்தனமான சிம்பு ரசிகை. சிலநேரம் ப்ரணிதி சோப்ரா பற்றி புகழ்ந்து பேசினா, கோபம் வரும். இருந்தாலும், `நாமளும்தான் சிம்புவை ரசிக்கிறோம்ல!'னு சமாதானப்படுத்திக்குவேன். இப்போ முழுக்க முழுக்க சஞ்சீவ் பிராப்பர்ட்டி நான். அவனுக்குத் தெரியாம எதையும் செய்றதில்லை. சீக்கிரமே ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கப்போறோம். சீரியல்ல மட்டுமல்ல, சினிமாவுலேயும் இந்தக் காதல் ஜோடியைப் பார்க்கலாம்!" என்கிறார், ஆல்யா.

``ஆல்யா, ஜோதிகா மாதிரி. ஒரு நாளைக்கு என்கிட்ட ஐம்பது தடவையாவது ஸாரி கேட்பா! அதேபோல, அதிகம் விட்டுக் கொடுத்துப்போகும் பாவமான ஆளும் நான்தான்." எனச் சிரிக்கிறார், சஞ்சீவ்.