Published:Updated:

மீண்டும் மீண்டும் சிக்கல் - என்னதான் ஆச்சு `எனை நோக்கி பாயும் தோட்டா'வுக்கு?!

சந்தோஷ் மாதேவன்

படத்தின் ஃபைனான்ஸியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்து எந்தத் தடையுமின்றி வெளியிட ஓர் ஒப்பந்தம் செய்ததாக ஒரு வாரத்துக்கு முன்பு சொல்லப்பட்டது.

ENPT
ENPT

கெளதம் மேனனின் தற்போதைய நிலையைப் பார்த்தால் அவர் படங்களைப் பெரிதும் பார்க்காதவர்கள்கூட பாவப்படுவார்கள். அண்மையில் ஒரு யூடியூப் சேனலின் நேர்காணலில் பேசும்போது, `எனை நோக்கி பாயும் தோட்டா' வரும் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாவதற்காக நூறு பேருடன் கடுமையாக பாடுபட்டுக்கொண்டிருப்பதாகச் சொன்னார். அதேபோல அந்தப் படம் வெளிவராமல் இருக்க எதிர்முனையில் நூறு பேர் வேலை செய்துகொண்டிருப்பதாகவும் சொன்னார். பல்வேறு தடைகளைக் கடந்து செப். 6 (நாளை) வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

கெளதம் மேனன்
கெளதம் மேனன்

ஆனால், கெளதம் சொன்னது போலவே, 'எனை நோக்கி பாயும் தோட்டா' அந்தச் சிக்கல்களால் நாளை வெளியாகாது எனத் தற்போது சொல்லப்படுகிறது. படத்தின் ஃபைனான்ஸியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்து எந்தத் தடையுமின்றி வெளியிட ஓர் ஒப்பந்தம் செய்ததாக ஒரு வாரத்துக்கு முன்பு சொல்லப்பட்டது. அதன்படி, இனி வெளியாகும் எல்லா கெளதம் மேனன் படங்களிலும் வரும் லாபத்தை வைத்து அவர் வாங்கியுள்ள கடனை அடைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

தற்போது, படத்தின் விநியோகஸ்தரான ஆர்க்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதில் வரும் வசூலை எப்படி பகிரப்போகிறார்கள் என்பது குறித்த எந்தத் தெளிவும் தயாரிப்பாளர்களால் தரப்படவில்லை என்பதால், தடையில்லா சான்றிதழ் கொடுக்கவில்லை என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன. இதனால், படத்துக்கு ஏற்கெனவே நீதிமன்றம் விதித்திருந்த தடையும் தொடர்கிறது.

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை என்பதாலும், படத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தாலும், `சிவப்பு மஞ்சள் பச்சை' திடீர் வரவாக நாளை வெளியாகவிருப்பதாலும், இந்த வாரமே 'எனை நோக்கி பாயும் தோட்டா'வையும் வெளியிடுவது கொஞ்சம் சிக்கல் என்று சொல்லப்படுகிறது.