Published:Updated:

" கேவலமா எல்லாம் திட்டறாங்க ... அன்னிக்கு என்ன நடந்துதுன்னா" விளக்கும் அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் அண்மையில் திமுக கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசியிருந்தார். இதுகுறித்து நிஷாவிடம் கேட்டபோது

'' விஜய் டி.வி.யில் நிகழ்ச்சிகள் செய்வது போக வெளி ஊர்களில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு காமெடிகள் பண்ணுவது வழக்கம். அதே மாதிரிதான் திமுக சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். கலைஞர் ஐயாவுடைய பிறந்தநாளுக்காக நடத்தப்பட்ட நிகழ்வு அது. 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் இருக்கும் பழனி அண்ணாவின் மூலமாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் இதில் கலந்துக்கிட்டோம். ஒரு பட்டிமன்றம் மாதிரியான நிகழ்வில்தான் பேசினேன்.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

இந்த நிகழ்வில் பேசியது மூலமாக நான் ஏதோ திமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆகிவிட்டேன் என்பது போல் பலரும் நினைச்சிக்கிட்டாங்க. அப்படியெல்லாம் இல்லை. நிறைய பேர் எனக்குப் போன் பண்ணி 'நிஷா மேடம் நீங்க எங்க சகோதரி மாதிரி ஒரு கட்சிக்கு சார்பா நீங்க இப்படி பேசுவீங்கனு எதிர்பார்க்கல'னு சொன்னாங்க.

ரொம்ப மரியாதையாதான் கேட்டாங்க. எனக்கு கஷ்டமா இருந்தது, நான் திமுக மேடையில் பேசியதால் சிலர் கஷ்டப்பட்டிருக்காங்கனு நினைச்சப்போ ரொம்ப வருத்தமா இருந்தது. நான் யாரையும் கஷ்டப்பட்டுத்திப் பார்க்க மாட்டேன். மனசு சரியில்லாம நொந்து போய் உட்கார்ந்திருக்கேன். காலையிலிருந்து சாப்பிடக்கூட இல்லை. நான் தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும் ஆதரித்து பேசியது இல்லை. பொதுவான ஒரு நபர்தான். சமூகவலைதளங்களில் ரொம்ப கேவலமா என்னைப் பற்றி எழுதியிருந்தாங்க.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

வீட்டில இருக்கிற எங்க அம்மாவும் என்னை ரொம்ப திட்டுனாங்க. அவங்க கையால அடி மட்டும்தான் வாங்கல. உன்னைப் போய் காமெடி பண்ண அனுப்பி வெச்சா கலகம் பண்ணிட்டு வர்றீயா'னு எங்க அம்மா ரைமிங்கா திட்டுனாங்க. உன்னை கஷ்டப்பட்டு படிக்க வெச்சதே நல்ல பேர் வாங்கிறதுக்குதான் நீ வாங்குனா பேர் போதும். இனி எங்கேயும் போக வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. அவங்களை சமாதானாம் படுத்துறதுக்குள்ளே போதும்போதும்னு ஆயிருச்சு.

எப்போதும் எங்க அம்மாகிட்ட சொல்லமா எதுவும் பண்ண மாட்டேன். ஒரு இடத்துக்கு போறேன்னா அவங்களுக்கு தெளிவுபடுத்திட்டுத்தான் போவேன். நான் பண்ற விஷயம் நல்ல விஷயமா இருந்தா அவங்க எனக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. தப்பான விஷயமா இருந்ததா திட்டதான் செய்வாங்க. அவங்க என்னை இவ்வளவு தூரம் வெளியே விடுறது பெரிய விஷயம். என்னோட குடும்பத்துக்காக எந்த விஷயமா இருந்தாலும் கவனமாவே பண்ணுவேன்.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

என்னோட கணவர், 'நீ பேசுனது போதும் இதுமாதிரியான கட்சி தொடர்பான மேடைகளுக்கு இனிமேல் போக வேண்டாம். இதுவரைக்கும் நான் எதுவும் உன்னை சொன்னதில்லை, இப்பவும் தப்பா சொல்லல. உன்னோட பெரிய பலமே காமெடிதான் அதுக்குள்ளே மட்டும் போ'னு அட்வைஸ் பண்ணினார். 'நீ பண்றது சரியா இருக்கும். அதுக்காக எல்லாமே சரினு நினைக்கக் கூடாது. கொஞ்சம் வீட்டுல இருக்கிறவங்ககிட்டயும் கேளு'னு சொல்வாங்க. எனக்கு முழு சப்போர்ட் பண்ணுவார். இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டு போனா பழனி அண்ணாவுக்குத்தான் போன் பண்ணி திட்டுனேன். எப்போவுமே என் மேலே நல்ல மரியாதை வெச்சுருக்கிற பழனி அண்ணா. என்னை மன்னிச்சிருனு நிஷா'னு சொன்னார்.

'என்னோட வளர்ச்சியில் ஒரு படி இறங்கினதா நான் நினைக்கல அண்ணா. ஆனா, நான் பேசுன விஷயத்தால ஒரு சார்பினர் கஷ்டப்பட்டிருக்காங்கனா மன்னிப்பு கேட்குறதுல தப்பு இல்லை அண்ணா'னுதான் சொன்னேன். இப்பவும் சொல்றேன், ' என்னால யார் மனசாவது புண்பட்டிருந்தா மன்னிச்சிருங்க'. எனக்கு அரசியலுக்கு வர்ற எண்ணம் துளியும் இல்லை. முழுக்க முழுக்க காமெடி பண்ணனும்னுதான் ஆசை. மனோரமா, கோவை சரளா அம்மாவுக்கு பிறகு என்னையும் மக்கள் அந்த வரிசையில் சொல்லணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அதுக்காகதான் போராடிட்டு இருக்கேன். பழனி அண்ணா என்கிட்ட, 'பழுத்த மரம்தான் கல்லடிபடும். நீ கீழே விழுந்திருந்தா, விழுந்தாலும் எந்திருச்சு ஓடு'னுதான் சொன்னார்.

பழனி
பழனி

நான் எந்த மேடைக்கு போனாலும் அந்த மேடைக்கு ஏத்த மாதிரி எனக்கான பேச்சை தயார்படுத்திக்கிட்டுதான் போவேன். தலைப்புக்கு ஏத்த மாதிரி இறங்கி பேசுற ஆள்தான் நான். பழனி அண்ணா, 'தலைப்புக்கு ஏத்த மாதிரி பேசு டா.. அப்புறம் காசு தரமா விட்டுடுவாங்க'னு சொன்னார். தலைப்புக்கு ஏத்த மாதிரி பேசணும்ங்கிறதுக்காகதான் அப்படி பேசினேன். மத்தப்படி நான் திமுக ஆதரவாளர் இல்லை''னு சொல்லி முடித்தார் அறந்தாங்கி நிஷா.

அடுத்த கட்டுரைக்கு