Published:Updated:

"2 மணி நேரத்துல உருவான `கேன்டீன் சாங்', `கும்கி 2'வில் குட்டி யானை!" - நிவாஸ் கே.பிரசன்னா ஷேரிங்ஸ்

நிவாஸ் கே.பிரசன்னா
நிவாஸ் கே.பிரசன்னா

'நடிகர் சித்தார்த்துக்காகப் பாடிய சிம்பு' என்ற செய்தி சமீபத்திய வரவு. இந்தப் பாடலுக்கு இசையமைத்த நிவாஸ் கே.பிரசன்னாவிடம் இதுகுறித்துப் பேசினோம்.

சிம்புவுடன் வேலைபார்த்த அனுபவம்?

நிவாஸ் கே.பிரசன்னா
நிவாஸ் கே.பிரசன்னா

"ஷங்கர் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தவர், இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக். அவரோட கதை கொஞ்சம் மார்டனா இருந்ததால, படத்துல வர்ற ஒரு பாடலை சிம்பு பாடினா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. சிம்புவை எனக்கு நல்லா தெரியும். ஏற்கெனவே என் இசையில் 'டைட்டானிக்' படத்துல அவர் பாடியிருக்கார். அந்த நட்பின் அடிப்படையில் இந்தப் படத்துக்கும் கேட்டேன். உடனே ஓகே சொல்லிட்டார். நான் மியூசிக் பண்ண 'தேவராட்டம்' படத்திலேயே சிம்பு பாடவேண்டியது. அந்த நேரத்துல அவர் லண்டன்ல இருந்ததால, பாட முடியல.

அவருக்கு இந்தப் படத்தின் பாடல் வரியும், டியூனும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் கொஞ்சம் பிஸியா இருந்ததால, இப்போ அப்போனு இருந்தது. திடீர்னு ஒருநாள் போன் பண்ணி, 'வீட்டுக்கு வாங்க ரெக்கார்டு பண்ணிடலாம்'னு சொன்னார். எல்லோருக்கும் தெரியும், சிம்பு சார் இரவுலதான் முழிச்சிருப்பார். ராத்திரி 12 மணிக்கு அவர் வீட்டுக்குப் போனோம். காலையில 5 மணிக்கு பாட்டை ரெக்கார்டு பண்ணிக் கொடுத்துட்டார். இதுவரை சிம்பு பாடிய பாட்டெல்லாம் பெரும்பாலும் குத்துப்பாட்டா இருக்கும். ஆனா, இந்தப் படத்துல வேறொரு ஸ்டைலில் பாடியிருக்கார். ஹீரோயினுக்கு ஆண்ட்ரியா பாடியிருக்காங்க. இவங்க ரெண்டுபேர் குரலில் இந்தப் பாட்டு ரிலீஸானதும், எல்லோருக்கும் பிடிக்கும்."

பாடலுக்கான வரிகளை யார் எழுதுனாங்க?

சிம்பு
சிம்பு

பா.இரஞ்சித் சாரோட 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' குழுவைச் சேர்ந்த அறிவரசன் எழுதியிருக்கார். ரொம்பத் திறமைசாலி. எப்போதும் அவருடைய வரிகள் கானா ஸ்டைலில் இருக்கும். ஆனா, எங்களுக்கு மாடர்ன் ஸ்டைலில் எழுதிக் கொடுத்தார். அவரால எல்லாவிதமான பாட்டும் எழுதமுடியும்னு எங்களுக்குத் தெரியும். காட்சியின் சூழலைச் சொன்னதுமே, பாடலை எழுதிக் கொடுத்துட்டார். சிம்பு பாடிய பாட்டு தவிர, இன்னொரு பாட்டும் எழுதியிருக்கார்."

இந்தப் படத்துக்குள்ளே எப்படி வந்தீங்க?

'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' அறிவரசன்
'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' அறிவரசன்

"எல்லோரும் இது 'சைத்தான் கா பச்சா' படத்துல வர்ற பாடல்னு நினைக்கிறாங்க. இந்தப் பாட்டு அதுல இல்லை. 'சைத்தான் கா பச்சா' படத்துக்குப் பிறகு கார்த்திக் இயக்குற புதிய படம் இது. இதிலும் சித்தார்த்தான் ஹீரோ. படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கல. மத்தபடி, இயக்குநர் கார்த்திக்கிற்கும் எனக்கும் நல்ல மியூசிகல் கனெக்ட் இருக்கு. அதனால, இந்தப் படத்துக்கு என்னைக் கமிட் பண்ணார்."

'டியர் காம்ரேட்' படத்துல 'கேன்டீன் சாங்' பாடிய அனுபவம்?

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

"ஜஸ்டின் பிரபாகரன் எனக்கு நல்ல பழக்கம். திடீர்னு ஒருநாள் போன் பண்ணி ஸ்டூடியோவுக்குக் கூப்பிட்டார். 'ஒரு பாட்டு இருக்கு, பாடிக் கொடுங்க'னு சொன்னார். ரெண்டு மணிநேரத்துல பாடுன பாட்டு அது. விஷூவல் பார்த்துதான் அந்தப் பாட்டைப் பாடினேன். தமிழ் வெர்ஷன் மட்டும்தான் நான் பாடியிருக்கேன். அந்தப் பாட்டு வைரல் ஆனதுல, சந்தோஷம்!"

செலக்ட்டிவான படங்கள்ல மட்டும்தான் வேலை பார்ப்பீங்களா?

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

"கொஞ்சநாளாதான் அதிகமான படங்களுக்கு மியூசிக் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். முக்கியமா, விஜய் சேதுபதி இசைக் கலைஞரா நடிக்கிற படத்துக்கு மியூசிக் டைரக்டரா கமிட் ஆகியிருக்கேன். இசைக்கு முக்கியத்துவமுள்ள படம். அதனால, எனக்கும் ஆர்வம் அதிகமா இருக்கு. படத்துல விஜய் சேதுபதி நிறைய இசைக் கருவிகளை வாசிப்பார். முக்கியமா, விஜய் சேதுபதிக்குப் பியானோ வாசிக்கிற ஒரு காட்சியைச் சொல்லிக் கொடுக்க நானும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். படத்துல வர்ற அந்த முக்கியமான காட்சிக்கு நான் எப்படிச் சொல்லிக்கொடுத்தேனோ, அதேமாதிரி பியானோ வாசிச்சு எல்லோரையும் அசர வெச்சுட்டார்."

உங்க மியூசிக் குரு யார்?

Nivas K Prasanna
Nivas K Prasanna

"நான் எந்த இசையமைப்பாளர்கிட்டேயும் உதவியாளரா இருந்ததில்லை. ஆனா, ராமமூர்த்தி ராவணன்னு எனக்கு ஒரு குரு இருக்கார். அவர்கிட்டதான் இன்னும் மியூசிக் கத்துக்கிட்டிருக்கேன். அவருக்கு 85 வயது ஆகிடுச்சு. நடிகை ப்ரியா ஆனந்த், சூர்யாவின் தங்கை பிருந்தாவும் அவர்கிட்டதான் மியூசிக் கத்துக்கிறாங்க."

'கும்கி 2' படம் பற்றி?

Vikatan

"பிரபு சாலமனின் 'கும்கி' படத்துல காதல் காட்சிகள் நிறைய இருக்கும். ஆனா, 'கும்கி 2' படத்துல அப்படியில்லை. இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கதை. ஒரு யானைக்குட்டி பற்றிய கதை இது."

அடுத்த கட்டுரைக்கு