Published:Updated:

``க்ளைமாக்ஸ்ல யூனிட்டே என்கூட ஒப்பாரி வெச்சுச்சு; ஏன்னா?!" - `செத்தும் ஆயிரம் பொன்' நிவேதிதா 

நிவேதிதா
நிவேதிதா

நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை அள்ளியிருக்கிறது `செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படம். அதில் மீராவாக நடித்திருந்த நிவேதிதாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``இந்தப் படம் எடுக்கும்போதே நிறைய திரைப்பட விழாவுக்கு அனுப்பணும்னுதான் திட்டமிட்டு எடுத்தோம். ஆனா, படம் பார்த்து பிடிச்சுப்போய் நெட்ஃபிளிக்ஸ், `நாங்களே வெளியிடறோம்’னு முன்வந்தது எங்க டீமுக்கு பயங்கர சர்ப்ரைஸான விஷயம். இப்ப உலகத்துல இருக்கிற பலகோடி ரசிகர்களுக்கும் நெட்ஃபிளிக்ஸ் படத்தைக் கொண்டுபோய் சேர்த்ததுல சந்தோஷம்” எனப் படபடவென பேசுகிறார் நிவேதிதா.

செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

`சில்லுக்கருப்பட்டி’ மதுவாக மனம் கவர்ந்தவர், இப்போது `செத்தும் ஆயிரம் பொன்’ மீராவாக வந்திருக்கிறார். `இறப்பு’தான் படத்தின் மையக்கரு. பிறப்பு போலவே இறப்பும் இயல்பாகக் கொண்டாட்டமாக ஏன் ஏற்றுகொள்ள வேண்டும், அது எப்படி உறவுகளை பிரிக்கிறது, இணைக்கிறது என்பதையெல்லாம் யதார்த்தம் மீறாமல் பதிவு செய்தது இந்தப் படம். படம் தந்த உற்சாகத்தில் இருந்தவரை தொடர்புகொண்டோம்.

சினிமா, OTTனு எல்லாப் பக்கமும் உங்களைப் பார்க்க முடியுதே?

நிவேதிதா
நிவேதிதா

``நடிக்கறதுனு வந்தாச்சு, அதனால எந்த வரையறையும் வெச்சுக்காம நடிக்கறதுக்கான ஸ்கோப் எந்தக் கதைல எனக்கு இருக்கோ அதைத் தேடி பண்ணிட்டிருக்கேன். அதுவும் இல்லாம இப்ப தியேட்டர்ல போய் சினிமா பார்க்கிற மக்களுக்கு இணையா OTT-லயும் மக்கள் அதிகமா பயன்படுத்திட்டுதான் இருக்காங்க. அதனால, எனக்குப் பெருசா எந்த வித்தியாசமும் இல்லை”.

`செத்தும் ஆயிரம் பொன்’ படத்துக்குள்ள வந்த கதை சொல்லுங்க?

செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

``இந்த மாதிரியான இண்டிபெண்டன்ட் படங்கள் பண்ணணும்னு எனக்கு ரொம்ப ஆசை. `சில்லுக்கருப்பட்டி’ பண்ணிட்டு இருந்த சமயம், எனக்கு ஷெட்யூல் பிரேக் கிடைச்சது. அப்பதான் இந்தக் கதைக்குள்ள கமிட் ஆனேன். இந்தப் படம் எடுத்து முடிச்சதுக்குப் பிறகு நியூயார்க், பெர்லின்னு எல்லா இடங்கள்லயும் நடந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பினோம். நாங்க எதிர்பார்த்ததை விடவே ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ் படத்துக்கு இருந்தது. அதுக்குப் பிறகு என்னன்னு யோசிச்ச போதுதான், நெட்ஃபிளிக்ஸ் படத்தை ரிலீஸ் பண்ண முன்வந்தாங்க. நேரடி தமிழ்ப்படங்கள் நெட்பிளிக்ஸ்ல வந்து ரொம்ப நாளாச்சு. அந்த வகையில எங்க படத்தை அவங்க வெளியிட்டதுல ரொம்பவே சந்தோஷம்.”

கதையோட ஒன்லைன் கேட்கும்போது என்ன தோணுச்சு?

 ‘செத்தும் ஆயிரம் பொன்’
‘செத்தும் ஆயிரம் பொன்’

``என்னுடைய அப்பா, அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போறவங்கங்கிறதால சின்ன வயசுல நிறைய நாள்கள் என்னோட பாட்டி கிட்டதான் வளந்திருக்கேன். அதனால, `பாட்டி-பேத்தி’ உறவுன்னு சொல்லும்போதே கதைக்குள்ள போயிட்டேன். கதையில நிறைய இடங்கள் கேட்கும்போதே எமோஷனலாகிட்டேன். அதுவும் என்னோட பாட்டி நான் +1 படிக்கும்போதே இறந்துட்டாங்க. அதனால, இந்தக் கதையை முழுசா கேட்டு முடிச்சதும் கண்டிப்பா பண்றேன்னு சொல்லிட்டேன். `இறந்ததுக்குப் பிறகும் நம்மகூட இருக்கப்போற ஒரு விஷயம்னா அது கலை மட்டும்தான்’ இதைப் படம் அதை அழுத்தமா பேசியிருக்கும். அந்தக் காலத்துல ஒப்பாரி கலைஞர்கள், சாயம் பூசறவங்கன்னு சொல்லக்கூடிய ஒப்பனைக் கலைஞர்களுக்கு எல்லாம் அவ்வளவு மரியாதை இருந்திருக்கு. அதை இந்தத் தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்க்கறதுக்கான ஒரு முயற்சிதான் இந்தப் படம்.”

படத்துல எந்த மாதிரியான சவால்கள் உங்களுக்கு இருந்தது?

நிவேதிதா
நிவேதிதா

``முழுக்க முழுக்கவே சென்னை, ஹைதராபாத்னு சிட்டில பிறந்து வளர்ந்த பொண்ணு நான். அப்படி இருக்கும்போது, கிராமத்துக்கு ஷூட்டிங் போனது வித்தியாசமான அனுபவமா இருந்தது. அந்தக் கிராமத்துல பல வருஷமா மழையே இல்லைன்னு சொன்னாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சம்மர் டைம்லதான் ஷூட் பண்ணினோம். லைவ் டப்பிங். அதனால, ஒரு தெரு தள்ளி டிவி ஓடினாகூட அந்தச் சத்தம் எங்களுக்குப் பெரிய இடைஞ்சல்தான். இது பெரிய பட்ஜெட் படமும் இல்லை. கேரவன் மாதிரியான வசதிகளும் கிடையாது. 15 நாள்களுக்குள்ள படத்தை முடிச்சோம். சிக்னலும் அங்க கிடைக்காது. டெக்னிக்கலாவும் நிறைய சவால்களைச் சந்திச்சோம். கொரியா மாதிரியான நாடுகள்ல இறந்தவங்களுக்கு அந்த நாட்டு முறைப்படி ஒப்பனை செஞ்சு மரியாதை செய்வாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதேமாதிரி நம்ம ஊர்ப்பக்கமும் இறந்தவங்களுக்கு ஒப்பனை மரியாதை இருக்குனு இந்தக் கதை கேட்கும்போதுதான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படம் எனக்கு ரொம்ப நல்ல அனுபவம்.”

OTT தளங்களுடைய வளர்ச்சி இப்ப எப்படி இருக்கு?

நிவேதிதா
நிவேதிதா

``வேற லெவல்ல இருக்கு. உதாரணத்துக்கு, `செத்தும் ஆயிரம் பொன்’ படம் தியேட்டர்ல வெளியாகியிருந்தாகூட இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருந்திருக்குமான்னு தெரியல. இதெல்லாம்விட உலக அளவுல பலபேர்கிட்ட கொண்டுபோய் சேர்த்திருக்கு OTT."

பாட்டி கிருஷ்ணவேணியா நடிச்சிருக்கும் ஸ்ரீலேகா, மற்ற கலைஞர்கள்கூட நடிச்ச அனுபவம்?

ஸ்ரீலேகா, நிவேதிதா
ஸ்ரீலேகா, நிவேதிதா

``பாட்டியா நடிச்சவங்களை முதல்முறையா ஷூட்டிங் ஸ்பாட்லதான் சந்திச்சேன். ஆரம்பத்துல ரெண்டு பேரும் பழகுறதுக்குத் தயக்கமா இருந்தது. சரியா, அந்தச் சூழல்லே நாங்க ரெண்டு பேரும் சண்டைபோடுற மாதிரியான காட்சிகளைப் படமாக்கினாங்க. அது படத்துல இயல்பா பொருந்திடுச்சு. படத்துல மட்டுமல்ல, நிஜத்துலயும் நாங்க ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி. அதுக்குப் பிறகு அவங்களும் தெலுங்கு, நானும் தெலுங்கு பொண்ணுங்கறதால நெருக்கமாகிட்டோம். அதேமாதிரிதான், குபேரன் கதாபாத்திரத்துல நடிச்ச அவினாஷ் என்னோட ஃப்ரெண்ட் ஆகிட்டார். `மகளிர் மட்டும்’ல இருந்தே கேப்ரில்லாவைத் தெரியும். அந்தக் குட்டிப்பொண்ணு, பாகுபலின்னு ஷூட்டிங் முடியறதுக்குள்ள நாங்க எல்லாருமே ஒரு குடும்பம் மாதிரி ஆகிட்டோம்."

முதல்முறையா ஒப்பாரி பாடினது பத்தி?

செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

``நான் பாத்ரூம் சிங்கர்கூட கிடையாதுங்க. அதனால எப்படி க்ளைமாக்ஸ்ல பண்ணப்போறேன்னு டீம் முழுக்கவே பயந்துட்டு இருந்தாங்க. அது மட்டுமல்லாம ரிகர்சல் எடுத்துக்கச் சொல்லி இயக்குநர் கேட்டுட்டே இருந்தார். நான் இவங்களுக்குத் தெரியாம தனியாதான் ரிகர்சல் பண்ணி, அந்தக் காட்சிக்காக தயார் ஆனேன். சிங்கிள் ஷாட்ல எடுத்து முடிச்சோம். ஆனா, க்ளைமாக்ஸ் முடிச்சதும் என்கூட சேர்ந்து யூனிட்டே அழுதுட்டு இருந்தாங்க. படத்துல பலபேர் என் நடிப்பைப் பாராட்டின இடமும் அதுதான். படத்துல பாட்டிக்குத் தன்னோட கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகணும்னுங்கறதுதான் நோக்கமா இருக்கும். ஆரம்பத்துல இதெல்லாம் பிடிக்காத ஒரு கேரக்டரா மீரா இருந்தாலும், கடைசியா எப்படி அந்தக் கதாபாத்திரம் மாறுதுங்கறதுதான் முக்கியம்”.

அடுத்த கட்டுரைக்கு