Published:Updated:

`ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது; பேனர்கள் வேண்டாம்!’ - ரசிகர்களுக்கு விஜய், சூர்யா அறிவுறுத்தல்

Surya
Surya

படம் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பேனர், கட் அவுட் கலாசாரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கட்சி நிகழ்ச்சிகள், சினிமா படங்கள், கல்யாணம், காதுக்குத்து என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது வழக்கமாகிவிட்டது. இதில் அரசியல் கட்சியினரின் திருமணம் என்றால் சாலை நெடுகிலும் பேனர்கள், கட் அவுட்கள், கட்சிக்கொடிகள் எனப் பல கிலோமீட்டர்களுக்கு நீளும்.

பிரபல நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் கேட்கவே வேண்டாம் பல அடிகளுக்கு கட் அவுட்கள், பேனர்களும் இருக்கும். சாலையில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்த பேனர்கள்தான். விதிமுறைகளை மீறி பேனர்களை வைப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனர். கோவையில் சாலையை மறைத்து வைக்கப்பட்ட பேனரால் ரகு என்ற வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து நீதிமன்றம் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டது.

Accident
Accident

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது டிராஃபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அ.தி.மு.க நிர்வாகி இல்லத் திருமண விழா பேனரால் இந்த விபத்து ஏற்பட்டது. டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, ``பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ஏன் சென்சிடிவிட்டி இல்லாமல் இருக்கிறார்கள்? இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது” என நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.

விஜய் அறிவுறுத்தல்

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் `பிகில்' படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி நடக்கவுள்ளது.

Vijay
Vijay

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக் கூடாது என நிர்வாகிகள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார் விஜய். பேனர் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

அஜித் ரசிகர்கள் உறுதிமொழி

இதனிடையே மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அதில்,`சுபஸ்ரீ என்கிற சகோதரியின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்பு நாம் சிந்தித்து செயல்படத் தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது.

Ajith Fans poster
Ajith Fans poster

இனிமேலாவது சிந்தித்துச் செயல்படுவோம். அந்தச் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அஜித் படங்களுக்கு அவர் புகழைப்பரப்பும் விதமாக இனி பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

சூர்யா வேண்டுகோள்

காப்பான் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ``அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. படம் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

Surya
Surya

ரசிகர்கள் செய்யும் ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து வருகிறேன். பேனர் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள் அந்தத்தொகையைக் கல்விக்குச் செலவிடுங்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு