Published:Updated:

தென்னகத் திரைவானில் தெளிவான இரு துருவ நட்சத்திரங்கள் #MyVikatan

Chennai Theatres - old

பழைய படங்கள்தாம். ஆனாலும், பண்பாட்டுப் பெட்டகங்கள். எத்தனை முறை பார்த்தாலும் இதயத்தைப் பிசைபவை.

தென்னகத் திரைவானில் தெளிவான இரு துருவ நட்சத்திரங்கள் #MyVikatan

பழைய படங்கள்தாம். ஆனாலும், பண்பாட்டுப் பெட்டகங்கள். எத்தனை முறை பார்த்தாலும் இதயத்தைப் பிசைபவை.

Published:Updated:
Chennai Theatres - old

பொழுதுபோக்குகளில், திரைப்படத் துறைக்கே எப்போதும் முதலிடம். எந்த ஒரு கருத்தையும் மக்களிடம் விரைவாகவும், ஆழமாகவும் கொண்டு சேர்ப்பதில் அதனையும் விடச் சிறந்த சாதனம் வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் திரையில் தோன்றும் நடிகர்கள் மிகச் சீக்கிரமாக எல்லோர் மனதிலும் ஆசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்கள். அதி விரைவில் அனைத்து மக்களிடமும் பிரபலமும் ஆகி விடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் புகழ் பெற்று விடுவதாலேயே, எல்லா விளம்பரங்களிலும் அவர்கள் உருவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலை கருதித்தான், தற்போதைய அரசியல்வாதிகள்கூட ஒன்றிரண்டு படங்களிலாவது முகம் காட்டி விட முயற்சி செய்கிறார்கள்-வெகுஜன மத்தியில் எளிதாகப் பிரபலமாகி விடும் நோக்குடன். தமிழ்த் திரைப்படங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் திரையிடப்படுவதோடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் திரையிடப்படுவதுடன், பெருவாரியான மக்களின் ஆதரவையும் பெற்று வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் தமிழ் மக்கள் பரவியிருப்பதே இதற்கு முக்கியக்காரணம் என்றாலும், தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக, அந்தந்த மொழியில் வசனங்களைத் திரையில் ஓட விடுவதன் (Language Card) மூலமும் இது சாத்தியமாகிறது.

1897-ல் சென்னைக்குத் திரைப்படக்கலையைக் கொண்டு வந்த பெருமை லூமியர் சகோதரர்களையே சாரும். இவர்கள் இருவரும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த இரட்டையர் ஆவர். இவர்கள் தயாரித்த ரயில் கொள்ளை என்ற படமே முதல் திரைப்படம் என்கின்றனர். எட்டே நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தில் ஒரு ரயில் வந்து ஸ்டேஷனில் நிற்குமாம். முழுப்படமும் அதுவே. அந்தப்படத்தைப் பார்த்த நம்மூர் மக்கள், ரயில் தங்கள் மேலே ஏற வருவதாக நினைத்துப் பயந்து, ஓடி ஒளிந்தார்களாம்.

அந்தப் படம் 1895-ம் ஆண்டே, பாரிஸ் நகரிலுள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்த்தளத்தில் திரையிடப்பட்டதாம். கட்டணம், தலைக்கு ஒரு பிராங்க் என்று நிர்ணயம் செய்யப்பட்டதாம். எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் முதல் நகரும் படக்காட்சியை, சென்னையின் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ‘சினிமாஸ்கோப்’என்று விளம்பரப்படுத்தி, நடத்திக் காட்டினார். பின்னர் 1905 ஆம் ஆண்டு திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் எடிசன் சினிமாட்டோகிராப் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, இயேசுவின் வாழ்க்கையை ஊர் தோறும் சென்று காட்டி வந்தாராம். எல்லாமே ஊமைப்படங்களாம்.

சென்னையில் 1914-ல், கெயிட்டி என்ற முதல் திரையரங்கை வெங்கையா என்பவர் கட்டியதாக வரலாறு சொல்கிறது. 1916 ல் சென்னை கீழ்ப்பாக்கத்தில், மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளராக இருந்த நடராஜ முதலியார் இந்தியா பில்ம் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, கீசக வதம் என்ற சலனப் படத்தைக் காட்டி வந்தாராம். முதல் பேசும் படம் 1927 ஆம் ஆண்டில் வார்னர் பிரதர்ஸால், ஜான் சிங்கர் என்ற பெயரில் எடுக்கப்பட்டதாம். இதில் வசனங்களுடன் பாடல்களும் இடம் பெற்றிருந்தனவாம்.

Lumiere Brothers
Lumiere Brothers
1937-ல் வெளியிடப்பட்ட சிந்தாமணி என்ற படமே பெரும் புரட்சி செய்திருக்கிறது. ஆமாங்க…ஒரே தியேட்டரில், தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் ஓடி வரலாறு படைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் தென்னிந்தியத் திரைப்படம், சாகர் மூவிடோன் நிறுவனத்தால், மும்பையில் எடுக்கப்பட்டதாம். குறத்திப்பாட்டும் டான்சும் என்பதே தலைப்பாம். இது ஒரு குறும்படமாம். இது வெளிவந்தது 1931-ம் ஆண்டில். அதே ஆண்டில் முழு நீள தமிழ்ப்படமாக காளிதாஸ் வந்ததாம். அப்பொழுது படத் தயாரிப்பெல்லாம் பம்பாய், கல்கத்தாவில் மட்டும்தானாம். 1935 ல் மேனகா, டம்பாச்சாரி போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.

1937-ல் வெளியிடப்பட்ட சிந்தாமணி என்ற படமே பெரும் புரட்சி செய்திருக்கிறது. ஆமாங்க…ஒரே தியேட்டரில், தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் ஓடி வரலாறு படைத்திருக்கிறது. அதன் பிறகு நிறைய சினிமாக்கள் வர ஆரம்பித்து, விஞ்ஞானம் அதில் வெகுவாகப் புகுத்தப்பட்டு விட்டது. சாகசக் காட்சிகளும், தந்திரக் காட்சிகளும் இடம் பெற்றதுடன், வண்ணத் திரைப்படங்களும் வர ஆரம்பித்தன. ஒரு காலகட்டத்தில் சிவாஜியும், எம். ஜி. ஆரும் முடிசூடா மன்னர்களாகக் கோலோச்சினார்கள்.

திரைப்பட இதழ்கள் என்று பார்த்தால், 1927 ல் மூவி மிரர் என்ற ஆங்கில இதழும், 1935-ல் சினிமா உலகம் என்ற தமிழ் இதழும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன. பின்னர் வந்த குண்டூசி, பேசும் படம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் வலம் வந்திருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.

நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில் படங்கள் வந்தாலும், தமிழ்த் திரையுலகில் இரு பெரும் காவியங்களாக என்றும் வலம் வருபவை நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) மற்றும் துலாபாரம் (1969) என்ற இரு திரைப்படங்களுமே. முன்னது முத்தான காதலையும், பின்னது இறவாத சோகத்தையும் உணர்த்தும் உணர்ச்சிமிகு படைப்புகள். காதலும் சோகமும்தானே வாழ்வின் இரு பக்கங்கள்.

காதல் என்பது ஓர் உன்னதமான உள்ளுணர்வு. பொறுமையையும், புரிந்து கொள்ளுதலையும், விட்டுக்கொடுப்பதையும் ஆழ்மனத்தில் தோற்றுவிக்கும் அற்புத உணர்வு அது. உடல்களைத் தாண்டி, மனதுடன் இணையும் மகத்தான உறவு. உண்மைக் காதல் என்றும் அழிவதில்லை. இணையாமல் போனாலும், இரயில் தண்டவாளங்களைப்போல இணைபிரியாமல் தொடர்வது. எங்கிருந்தாலும் வாழ்க. என்று ஒன்றையொன்று வாழ்த்திக்கொண்டே வாழ்நாட்களைக் கடத்தி விட்டு, அடுத்த பிறவி உண்டென்றால் அதிலும் தொடரப் பிரார்த்திப்பது. இந்த இலக்கணங்களுக்கு இம்மியும் பிசகாமல், சிறிதும் வழுவாமல் எடுக்கப்பட்ட படம்தான் நெஞ்சில் ஓர் ஆலயம்.

 சுருக்கமாகக் கதையை இப்படிச் சொல்லலாம். டாக்டர் முரளி(கல்யாண் குமார்), தன்னிடம் சிகிச்சை பெறும் வேணு(முத்து ராமன்), தன் காதலி சீதா(தேவிகா)வின் கணவர் என்பதையும், கணவர் காப்பாற்றப்படாவிட்டால் சீதா தற்கொலை செய்து கொள்ளவும் தயங்க மாட்டாள் என்பதையுமறிந்து, தன் இன்னுயிரைக் கொடுத்து வேணுவைக் காப்பாற்றுகிறார்.

‘வருவாய் என நான் தனிமையில் நின்றேன்.

வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்.

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க. ’

துணைவருடன் வந்திருந்தாலும் அவள் தூயவளே. என்று நினைத்து, தன் உடல், பொருள், ஆவியால் அவள் கணவனைக் காப்பாற்றும் பணியை மேற்கொள்ளும் முரளி ஒரு புறம். தனக்குச் சிகிச்சையளிக்கும் டாக்டரே தன் மனைவியின் காதலன் என்பது தெரிந்ததும், இயல்பாக அவர்கள் மீது சந்தேகம் வர, அவர்கள் தனியாகப் பேசுவதைக் கேட்ட பின், (டாக்டர். உங்கள் நிழல்கூட என் மனதில் இல்லை - சீதா) தன் இறப்புக்குப் பிறகாவது அவர்கள் இணைய வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட உத்தம கணவன்.

‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

 தெய்வம் ஏதும் இல்லை.

 நடந்ததையே நினைத்திருந்தால்

 அமைதி என்றுமில்லை. ’

இந்த இரண்டு சிகரங்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் சீதா. . . 'இந்த டாக்டரிடம் வந்ததே தப்போ? ஆபரேஷனுக்கு முன் வேறு மருத்துவமனைக்குச் சென்று விடலாம் ’ என்று கணவனிடம் கூற, ’செத்தாலும் இவர் கையாலேயே சாக வேண்டும் ’ என்று கணவர் மறுத்து விட, ஆபரேஷனுக்குச் செல்லும் சிறுமி பிழைத்தால் தன் கணவரும் பிழைப்பார் என நம்ப, ’ஆபரேஷன் சக்சஸ் பட் பேஷண்ட் டைட்’ (Operation success but Patient died) என்பதற்கிணங்க அந்தச் சிறுமி இறந்ததும், அனலிட்ட மெழுகாக சீதா கரைய, ஆபரேஷன் நாளும் வருகிறது. அத்தனை நகைகளையும் அணியச்செய்து கணவன் அழகு பார்க்க,

‘முன்னம் இருந்த நிலை நினைந்தாயே

முகத்தைப் பார்த்துக் கொள்ளத் துடித்தாயோ.

பறவை பறந்து செல்ல விடுவேனா?

அந்தப் பரம்பொருள் கேட்டாலும் தருவேனா?’ என்கிறாள்.

'தனக்குப் பிறகாவது டாக்டருடன்…' என்ற கணவனைப்பார்த்து, ‘சொன்னது நீதானா?’என்று ஆரம்பித்து,

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா?

தெருவினிலே விழுந்தாலும்

வேறோர் கை தொடலாமா?

ஒரு செடியில் ஒருமுறைதான்

மலரும் மலரல்லவா?

ஒரு மனதில் ஒரு முறைதான்

வளரும் உறவல்லவா?'

என்று கோபப் படுகிறாள்.

உணவையும் மறந்து, உன்மத்தம் பிடித்தவனாக, ஆபரேஷன் ஒன்றையே குறியாக எண்ணி, தன் உயிர் போகும் முன்னால், ’சீதா. உன் கணவனைக் காப்பாற்றி விட்டேன்’ என்று கதறியபடி, உயிரை விடும் உயர் காதலன். காவியமாக, காதலர்கள் நெஞ்சில் என்றும் ஆலயமாக இந்தப் படம்!
உலகத்தின் உயிரோட்டம் காதல். அந்தக் காதல் வாழும்வரை இந்தக் காவியமும் வாழும்.

உணவையும் மறந்து, உன்மத்தம் பிடித்தவனாக, ஆபரேஷன் ஒன்றையே குறியாக எண்ணி, தன் உயிர் போகும் முன்னால், ’சீதா. உன் கணவனைக் காப்பாற்றி விட்டேன்’ என்று கதறியபடி, உயிரை விடும் உயர் காதலன்.  காவியமாக, காதலர்கள் நெஞ்சில் என்றும் ஆலயமாக இந்தப் படம்!

உலகத்தின் உயிரோட்டம் காதல். அந்தக் காதல் வாழும்வரை இந்தக் காவியமும் வாழும்.

றுகிய காலத்தில், பல நுணுக்கங்களுடன் எடுக்கப்பட்ட படம் என்பதெல்லாம் பின்புலத்தில் வலு சேர்ப்பவை. இந்தியில் ‘டில் ஏக் மந்திர்’, தெலுங்கில் ‘மானசி மந்திரம்’, கன்னடத்தில்’குங்கும ரக்சி’என்று வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம். டாக்டர் முரளிக்கும், வேணுவுக்கும், சீதாவுக்கும், இவர்களை நம்மிடையே நடமாட விட்ட ஶ்ரீதருக்கும் இறப்பேயில்லை.

வேலை செய்த வீட்டில் இருந்து குழந்தைகளுக்காகக் கொண்டு வந்த சோற்றையும் நாய் தின்றுவிட, உடைந்து போன விஜயா விஷத்தைச் சோற்றில் கலந்து மூவருக்கும் கொடுக்க… நம் மனங்கள் சோகத்தில் வாடும்.

காதலை இப்படி காலத்திற்கும் இது நிலைநிறுத்த, சோகத்தைச் சுமக்கச் செய்த துலாபாரம் படத்தை மறக்கவே முடியாது. தான் பெற்ற 3 குழந்தைகளைக் கொன்ற குற்றத்திற்காகக் குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் விஜயா(சாரதா)விற்கு, அவள் வக்கீல் தோழி வத்சலா(காஞ்சனா) வே அதிக பட்ச தண்டனை வழங்கக் கோர, விஜயாவோ தனக்கு தூக்குத் தண்டனையே வழங்க வேண்டுகிறாள். அந்த நிலைக்கு அவள் தள்ளப்பட்டதற்கான நிகழ்வுகளே, கதை.  விஜயாவின் தந்தை சத்தியமூர்த்தி(மேஜர் சுந்தரராஜன்) தன் வீடு உள்ளிட்ட பூர்வீக சொத்துகளை வக்கீல் சம்பந்தத்தின்(டி. எஸ். பாலையா) மெத்தனத்தால், ஊரின் பெருந்தனக்காரர் பாலசுந்தரத்திடம்(வி. எஸ். ராகவன்)இழந்து விட, விஜயா தன்னைக்

காதலிப்பதாக எண்ணிக் கொண்டிருந்த பாபு(முத்துராமன்), தான் சகோதர பாசத்துடன் பழகியதாகச் சொல்லி கழண்டு கொள்ள, விஜயாவின் தந்தையும் இறந்து விட, தனிமரமாகிறாள் அவள். விஜயாவின் தந்தையின் ஆதரவில் வளர்ந்த ஏழைத் தொழிலாளி ராமு(ஏ. வி. எம். ராஜன்)வைக் கைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறாள். மாடப் புறா குடிசையில் வாழ்ந்து, மூன்று குழந்தைகளுக்கும் தாயாகிறது.

ராமுவின் கம்பெனி வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட, தொழிற்சங்கத் தலைவனான ராமு எதிர்த்துப் பேசியதால், பாலசுந்தரத்தின் ஆட்களால் கொலை செய்யப்படுகிறான். வேலை நிறுத்தம் காரணமாகப் பல வீட்டு அடுப்புகளில் பூனைகள் வாசம் செய்ய, விஜயா மூன்று குழந்தைகளுடன் அல்லாடுகிறாள். குழந்தைகள் பசி தாங்காமல் பிச்சையெடுக்க ஆரம்பிக்க, அவள் திகைத்துப் போகிறாள். சில நாட்களுக்குப் பிறகு, அவள் வீட்டு வேலைகளுக்குச் சென்றிருந்த சமயத்தில், பசி தாளாமல் மூன்று குழந்தைகளும் டீக்கடைக்குச் சென்று, மூத்த குழந்தை தன் இளவல்களுக்கு ஒவ்வொரு வடையைக் கொடுத்து விட்டுத் தானும் சாப்பிட எத்தணிக்க, டீக்கடைக்காரர் எரிகின்ற தணலால் கையில் சுட, அவள் இடுப்பில் இருக்கும் சிறு குழந்தை அழும்போது அதன் வாயிலிருந்து மென்ற வடை உதிருமே… அந்த இடத்தில் தியேட்டரே கண்ணீரில் மிதக்கும். சூழ்நிலை அனைத்தும் தனக்கு எதிராகப்போக, வேலை செய்த வீட்டில் இருந்து குழந்தைகளுக்காகக் கொண்டு வந்த சோற்றையும் நாய் தின்றுவிட, உடைந்து போன விஜயா விஷத்தை அந்தச் சோற்றில் கலந்து மூவருக்கும் கொடுக்க… நம் மனங்கள் சோகத்தில் வாடும்.

‘பூஞ்சிட்டு கன்னங்கள்

 பொன்மணி தீபத்தில்

 பால் பொங்கல்

 பொங்குது பன்னீரிலே. …

 பொங்கல் பிறந்தாலும்

 தீபம் எரிந்தாலும்

 ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே.

 இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே.

 கண்ணீர் உப்பிட்டுக்

 காவேரி நீரிட்டுக்

 கலயங்கள் ஆடுது சோறின்றி.

 இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி. …

 கண்ணாடி வளையலும்

 காகிதப் பூக்களும்

 கண்ணே உன்மேனியில் நிழலாடும்

 இல்லாத உள்ளங்கள் உறவாகும்.

உண்மைதானே. ஏழைகள் வாழ்வு இங்கு எந்நாளும் போராட்டத்தில்தானே. அந்தப் போராட்டத்தை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியதால்தானே, விஜயாவுக்கு, நம்ம சாரதாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

பழைய படங்கள்தாம். ஆனாலும் பண்பாட்டுப் பெட்டகங்கள். எத்தனை முறை பார்த்தாலும் இதயத்தைப் பிசைபவை. சீதாக்களும் விஜயாக்களும் இவ்வுலகம் வாழும் வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

சினிமாக்கள் பெரும்பாலும் காதலையும், சோகத்தையும், ஹாஸ்யத்தையும் அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. பண்பாட்டையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வின் எதார்த்தங்களையும் எதிரொலிக்கும் படங்களே வெற்றி பெறுகின்றன. பொழுது போக்கோடு படிப்பினையையும், வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல மக்களுக்கு உணர்த்தும் விதமாகப் படம் எடுப்பதே நாட்டுப் பற்றுள்ளோரின் கடமையாகும். அந்த விதத்தில் எடுக்கப்பட்ட இந்த இரு படங்களும் காலத்தை வெல்பவை. இறவாப் புகழ் பெற்றவை.

இந்த உலகம் உள்ளவரை உண்மைக் காதலும் வாழும். ‘எங்கிருந்தாலும் வாழ்க. ’ என்ற காதலர்களின் ஏக்கக் குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதுபோலவே, மனித சமுதாயம் உள்ளவரை ’உள்ளான்…இல்லான். . ’ என்ற நிலை மறையப் போவதில்லை. அதற்கு இவ்விரு திரைப்படங்களுமே சான்று.

பழைய படங்கள்தாம். ஆனாலும் பண்பாட்டுப் பெட்டகங்கள். எத்தனை முறை பார்த்தாலும் இதயத்தைப் பிசைபவை. சீதாக்களும் விஜயாக்களும் இவ்வுலகம் வாழும் வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். நம்மால் முடிந்தவரை உண்மைக் காதலர்கள் வாழ உதவுவோம். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க இயன்றதைச் செய்வோம்.

- ரெ. ஆத்மநாதன்

 காட்டிகன், சுவிட்சர்லாந்து