எண்பதுகளின் காலகட்டத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் எனலாம். அதுவரை பெரும்பாலும் வணிகத் திரைப்படங்களே தமிழ் சினிமாத்துறையை ஆக்கிரமித்திருந்தன. இந்த அம்சங்களிலிருந்து விலகி வித்தியாசமான மாற்று முயற்சிகளும் உருவான மறுமலர்ச்சி காலகட்டமாக எண்பதுகளைச் சொல்லலாம். மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தார்கள்.
எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் வெளியான சூப்பர் ஹிட் மற்றும் முக்கியமான சினிமாக்களைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொடரில் ஒரு கொண்டாட்டமாக மீள்நினைவு செய்யலாம் என்று உத்தேசம்.
இது கடந்தகால தலைமுறைக்கு மட்டுமல்லாமல் இப்போதைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த வரிசையில் முதல் திரைப்படம்…
‘மை நேம் ஈஸ் பில்லா….’ இது எந்தத் திரைப்படத்தில் வருகிற பாடல் என்று கேட்டால் அது எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?’ என்கிற பழைய ஜோக் மாதிரி ஆகிவிடும். ஆம். 1980-ம் ஆண்டு குடியரசு நாளில் வெளியான ‘பில்லா’ திரைப்படம் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

பில்லா – ரஜினிகாந்த்தின் திரைப் பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படம். அவர் மெல்ல மெல்ல ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து வந்திருந்தாலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் வருங்கால சிம்மாசனத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்துத் தந்த திரைப்படம் இது.
இந்தக் காலகட்டத்தில் சினிமாவிலிருந்து விலகப் போவதான ஒரு திடீர் அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். ‘பத்திரிகையாளரை அடிக்கப் பாய்ந்தார், விமான நிலையத்தில் குடி போதையில் கண்ணாடிக் கதவுகளை உடைத்தார்’ என்று இந்தச் சமயத்தில் ரஜினிகாந்த்தைப் பற்றி பல்வேறு விதமான பரபரப்பு செய்திகளும் சர்ச்சைகளும் ஊடகங்களில் வெளிவந்தன.
இந்தச் சூழலால் ரஜினிகாந்த் மிகுந்த மனஉளைச்சலிலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே ‘சினிமாவிலிருந்து விலகுகிறேன்’ என்கிற அவரின் அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமாத்துறையிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, பாலச்சந்தர் உள்ளிட்ட பல நலம்விரும்பிகள் தலையிட்டு ரஜினிகாந்த்திடம் பேசி அவரின் இந்த முடிவை மாற்றச் செய்தனர்.
இந்த நேரத்தில்தான் ‘பில்லா’ திரைப்படத்தில் நடிக்க ரஜினியை ஒப்பந்தம் செய்தார் தயாரிப்பாளர் பாலாஜி. படம் வெளியாகி 25 வாரங்களுக்கும் மேலாக ஓடி அதிரிபுதிரியான வெற்றியைப் பெற்றது. அந்தக் காலகட்டத்தில் அதிக வசூலை வாரிக் குவித்த திரைப்படமாக இது இருந்தது.

‘அவ்வளவுதான்... ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்து போனது’ என்று கருதப்பட்ட சூழலில் அவர் விஸ்வரூபம் எடுத்து திரும்பி சூப்பர் ஸ்டார் என்னும் நாற்காலியில் அமர்வதற்கு மிகப் பெரிய காரணமாக ‘பில்லா’ திரைப்படம் அமைந்தது என்றால் மிகையில்லை.
இதற்குப் பிறகு ‘ஆங்க்ரி யங் மேன்’ என்னும் பிம்பத்தில் அமிதாப்பச்சன் இந்தியில் தொடர்ச்சியாக நடித்த பல திரைப்படங்களின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடித்தார். என்றாலும் அமிதாப்பச்சனை அப்படியே நகலெடுக்காமல் தன் பிரத்யேகமான ஸ்டைலை அவர் உருவாக்கிக் கொண்டது அவருடைய பிரமாண்ட வெற்றிக்கு ஒரு அடிப்படை காரணம் எனலாம்.
தமிழ் ரீமேக்கைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் இதன் ஒரிஜினல் வடிவத்தைச் சிறிது எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாம்.
பில்லாவின் அசல் வடிவமான ‘Don’ என்கிற இந்தித் திரைப்படம் 1978-ல் வெளியானது. சலீம்-ஜாவேத் என்கிற இரட்டையர்கள், தலைப்பு இன்னமும் வைக்கப்படாத ஒரு திரைக்கதையை எழுதி முடித்து வைத்துக்கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் இந்தியில் உள்ள எந்தவொரு முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. பலராலும் நிராகரிக்கப்பட்ட திரைக்கதையாக அது இருந்தது.

ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான நாரிமன் இரானி ‘ஜிந்தகி ஜிந்தகி’ (1972) என்கிற தோல்விப் படத்தை தயாரித்து பெருத்த நஷ்டத்தில் இருந்தார். இவரின் ஒளிப்பதிவில் உருவாகிக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ஜீனத் அமன், பிரான் ஆகியோர் அப்போது நடித்துக்கொண்டிருந்தார்கள். இவரின் சூழலை அறிந்து இவர் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் தாங்கள் நடித்து உதவ முன்வந்தார்கள்.
இந்தச் சமயத்தில்தான், ஒரு டானை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட, எவராலும் ஏற்கப்படாத சலீம் – ஜாவேதின் திரைக்கதை இவர்களின் பார்வைக்கு வந்தது. இரானியின் உதவியாளரான சந்திரா பரோட் அதில் சில மாற்றங்களைச் செய்து இயக்கினார். சுமார் மூன்றரை வருட உழைப்பிற்குப் பின்னால் 12.05.1978 அன்று ‘டான்’ அதிக விளம்பரம் இன்றி வெளியானது.
ஆனால், தொடக்கத்தில் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. சந்திரா பரோட் தன் குருநாதராக கருதும் மனோஜ் குமாரிடம் ஆலோசனை கேட்டார். அவருடைய ஆலோசனையின் பெயரில் ஒரு பாடல் இதில் புதிதாக இணைக்கப்பட்டது. இதே திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் கல்யாண்ஜி – ஆனந்த்ஜியால் முன்னர் உருவாக்கப்பட்டு நடிகர் தேவ் ஆனந்தால் நிராகரிக்கப்பட்ட பாடல் அது. ஆனால் அந்தப் பாடல்தான் ‘டானின்’ மகத்தான வெற்றிக்கு ஒருவகையில் காரணமாக இருந்தது எனலாம்.
‘Khaike Pan Banaraswala’ என்கிற அந்தப் பாடல் (தமிழில் – வெத்தலையைப் போட்டேண்டி’) மக்களிடையே பிரபலம் அடைந்து அதுவே படத்திற்கு வாய்மொழி விளம்பரமாக அமைந்து பார்வையாளர்கள் பெருகுவதற்குக் காரணமாக இருந்தது. சுமார் 70 லட்சத்தில் உருவாக்கப்பட்ட ‘டான்’ ஏழு கோடியை வாரிக் குவித்தது. அதாவது பத்து மடங்கு லாபம்.
இதில் ஒரு துரதிர்ஷ்டமான விஷயம் என்னவெனில், எந்தத் தயாரிப்பாளரின் கஷ்டத்தைப் போக்குவதற்காக இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டதோ, அவர் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் இறந்து போனார். என்றாலும் அவரின் குடும்பத்தினர் கடனிலிருந்து மீண்டு வருவதற்கு ‘டானின்’ வெற்றி உதவியது.
நிராகரிக்கப்பட்ட திரைக்கதை, நிராகரிக்கப்பட்ட பாடல் ஆகியவை ஒரு மகத்தான வெற்றித் திரைப்படத்திற்குக் காரணமாக அமைந்தது என்பதில் சில ஆதாரமான பாடங்கள் உள்ளன.
‘டான்’ திரைப்படத்தை இந்திய சினிமாவிலேயே ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் எனலாம். அதுவரை சினிமா ஹீரோக்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக, கெட்ட பழக்கம் இல்லாதவர்களாக, ஊருக்கும் குடும்பத்திற்கும் தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். (உதாரணம்: எம்.ஜி,ஆர்). இதற்கு எதிர்நிலையில் வில்லன்கள் அனைத்துத் தீமைகளுக்கும் அடையாளமாக இருப்பார்கள்.

ஆனால், ஒரு ஹீரோ கடத்தல் மன்னனாகவும் பயங்கர கொலைகாரனாகவும் இருப்பது போல் எழுதப்பட்ட திரைக்கதையானது வெற்றியடைந்ததால், வருங்காலத்தில் பல ஹீரோக்கள் அப்படியான பாத்திரங்களை தயக்கமின்றி ஏற்பதற்கு ‘டான்’ திரைப்படம் ஒரு முன்னோடி காரணமாக அமைந்தது.
என்றாலும் ‘டானாக’ இருக்கும் ஹீரோக்கள் அடிப்படையில் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். (உதாரணம்: பாட்ஷா). ‘சிரிப்பு போலீஸ்’ மாதிரி ‘நல்ல ரவுடி’.
ஓகே... இப்போது தமிழ் வடிவத்திற்கு மீண்டும் வருவோம்.
ரஜினிகாந்த் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘பில்லா’. இதன் மகத்தான வெற்றி காரணமாக இதை இயக்கிய கிருஷ்ணமூர்த்தி, இதற்குப் பின்னால் ‘பில்லா கிருஷ்ணமூர்த்தி’ என்றே அடையாளம் காணப்பட்டார்.
இந்தி வடிவம் தமிழிற்கு மாற்றப்பட்ட போது இந்தியில் செய்த அதே பாத்திரத்தை தமிழிலும் நடித்தவர் ஹெலன் மட்டுமே. இதர பாத்திரங்கள் அனைத்திலும் தமிழ் நடிகர்கள் நடித்தார்கள்.

ஹீரோயின் விஷயம் தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. ரஜினியின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த பாத்திரத்திற்கு முதலில் அணுகப்பட்டவர் ஜெயலலிதாவாம். அவர் சினிமாத்துறையிலிருந்து மெல்ல விலகி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம்.
‘சினிமாவில் வாய்ப்பில்லாத காரணத்தினால்தான் ஜெயலலிதா அரசியலில் நுழைந்திருக்கிறார்’ என்று ஒரு வடஇந்திய பத்திரிகை எழுதி விட, அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ஒரு கடிதத்தை அந்தப் பத்திரிகைக்கு எழுதினார் ஜெயலலிதா.
‘பில்லா என்கிற திரைப்படத்தில் ரஜினிக்கு நாயகியாக தாம்தான் முதலில் அணுகப்பட்டதாகவும் ஆனால் தாம் அதை மறுத்துவிட்டதாகவும், வாய்ப்பு இல்லையென்றால் இது நிகழுமா? என்றும் ‘கெத்து’ காட்டியிருந்தார் ஜெயலலிதா.
"சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு நான் போராடவில்லை. உண்மையில், நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. 'பில்லா' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி, என்னைதான் முதலில் அணுகினார். நான் மறுத்ததால் அந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிதான் 'பில்லா' படத்தின் ஹீரோ. ஆனாலும், நான் நடிக்க மறுத்தேன். சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே. ஆனால், எனக்கு நடிப்பில் இருந்த ஆர்வம் போய்விட்டது.''என அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார் ஜெயலலிதா.
இது குறித்து விரிவாக படிக்க...
சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இந்தியில் உருவாக்கப்பட்ட காட்சிகள் ஏறத்தாழ அதே போல் தமிழில் நகல் எடுக்கப்பட்டன. ஆனால் ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப சமாசாரங்கள், இந்தி வடிவத்தில் நேர்த்தியாக இருந்தது போல் தமிழில் இல்லை. சில காட்சிகள் கொத்து பரோட்டா போடப்பட்டது மாதிரி கந்தரகோலமாக இருந்தன.
டானாக தன் வழக்கமான கம்பீரத்தோடு ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தாலும் இன்னொன்றில் சற்று பெண்மை கலந்த பாத்திரத்தைத் துணிச்சலோடு ஏற்று நடித்திருந்தார் ரஜினிகாந்த். பரிசோதனை முயற்சிக்கு அவர் எப்போதும் தயாராக இருந்தார் என்பதையே இந்த விஷயம் காட்டுகிறது.
இந்தத் திரைப்படத்திற்கு ‘பில்லா’ என்று பெயர் சூட்டப்பட்டதற்கும் ஒரு பின்னணிக் காரணம் இருக்கிறது. ‘டான்’ என்கிற பெயர் தமிழ் பார்வையாளர்களுக்குப் புரியுமா என்று தயாரிப்பு நிர்வாகம் தயங்கியிருக்கிறது.

‘ரங்கா’ என்கிற தலைப்பிடப்பட்ட சினிமாவிலும் (1982) பிறகு ரஜினிகாந்த் நடித்தார்.
‘பில்லா’ திரைப்படத்தில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இசைக்கூட்டணியில் பாடல்கள் மகத்தான வெற்றியைப் பெற்றன. (இதில் எஸ்.பி.பி + ரஜினி காம்பினேஷனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்). ‘மை நேம் ஈஸ் பில்லா’ ‘வெத்தலையைப் போட்டேண்டி’ ஆகிய பாடல்களை பார்வையாளர்கள் வெகுவாக வரவேற்று ரசித்தார்கள்.
இந்தியிலிருந்து தமிழிற்கு ரீமேக் செய்யப்பட்ட ‘பில்லா’ திரைப்படம், இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு ‘அஜித்’ நடிக்க மறுபடியும் 2007-ல் வெளியானது. இதன் ஸ்டைலிஷான உருவாக்கம் காரணமாகவும் அஜித்திற்கு இருந்த ரசிகர் கூட்டம் காரணமாகவும் படம் வெற்றியடைந்தது. (இதே விஷயத்தை 2006-ல் இந்தியில் ஷாரூக் கான் செய்தார்)

‘பில்லா’ என்கிற பாத்திரம் எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்கிற prequel அஜித் நடித்து 2012-ல் வெளியானது. ஆனால் இது அத்தனை வரவேற்பைப் பெறவில்லை.
இத்தனை ரீமேக்குகளைத் தாண்டியும் ‘பில்லா’ என்கிற திரைப்படம், இன்றைக்கும் பார்ப்பதற்கு சுவாரசியமாக அமைய அதன் வலிமையான திரைக்கதையும் ரஜினி என்கிற பிம்பமும் ஆதாரமான காரணமாக அமைந்திருக்கின்றன எனலாம்.
இந்தத் தொடரில் அடுத்து எந்த 80ஸ், 90ஸ் படத்தைப் பற்றி பேசலாம்? படத்தின் பெயரையும் அதற்கான காரணத்தை ஒரு வரியிலும் கமென்ட்டில் சொல்லுங்களேன்.